Pages

சென்னை சட்டக்கல்லூரி - தமிழன் வாழ்வில் இன்னுமொரு கரிநாள்

சென்னை சட்டக் கல்லூரியில் நடந்திருக்கும் சம்பவங்கள் நம் சமுதாயத்தை மீண்டும் ஒரு முறை தோலுரித்துக் காட்டியிருக்கிறது. சில மாணவர்களோடு சேர்த்து நீதி தேவதையும், கலைமகளும் கொலை செய்யப்பட்டிருப்பது நம் தமிழ்ச் சமுதாயத்தின் பெருத்த அவமானம். இது போன்று நடப்பது முதல் முறை இல்லை என்றாலும், நிகழும் பொழுது மிக விகாரமாகத்தான் தெரிகிறது. அவர்கள் நடத்திய வெறியாட்டத்தைப் பார்க்கும் போது அவர்கள் உண்மையாகவே மாணவர்கள்தானா என்ற கேள்வி எழுகிறது. அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த காவலர்கள் தமிழக காவல்துறையின் கையாலாகத்தனத்தையும், அரசியல் அழுக்குகளையும் காண்பிக்கிறது. அவர்கள் உண்மையிலே மாணவர்களாக இருந்தால், கலைமகளை களங்கப்படுத்திய குற்றம் இந்த தமிழ்ச் சமுதாயத்தைச் சேரும். சட்டக்கல்லூரி மாணவர்களின் இந்த வெறியாட்டம் தமிழக சட்டத்துறையின் லட்சணத்தையும், அதே சமயம் நாம் இனி சட்டத்தின் துணையை நாடினால் நியாயம் கிடைக்காது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

இந்த சம்பவத்தைப் பற்றி சட்டசபையில் விவாதிக்கும் போது முதலமைச்சர் உடல்நலம் குன்றியிருப்பதாகவும், அதனால் திரு. துரைமுருகன் பதில் கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. சென்னை காவல்துறை உயரதிகாரி மாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் குற்றம் நடக்கும் போது வேடிக்கை பார்க்கும் அவலத்தை அரங்கேற்றிவிட்ட பிறகு என்ன செய்தாலும் அது தீர்வாகாது. காவல்துறை இவ்வாறே இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஒரு சம்பவம் மட்டுமே நம் கண்களுக்கு புலப்பட்டிருக்கிறது என்பது வருந்தத்தக்க உண்மை.

அதேவேளை, இந்த கலவரம் நடந்த நேரத்தை சற்றே உற்றுப் பார்த்தால் இது ஒரு வேளை அரசின் வேலையாகவே இருக்குமோ என்ற எண்ணம் தோன்றத்தான் செய்கிறது. இலங்கையில் தமிழர் பிரச்சனை உச்ச கட்டத்தை அடையும் வேளையில், திரு. கருணாநிதி அவர்களின் சாமர்த்தியமான ஏமாற்று வேலை சில நாட்கள் முன்பு அம்பலமானது. அவர் தமிழர் போர்வையில் இத்தனை காலம் அரசியல் நடத்திவிட்டு தமிழனுக்கு பச்சைத் துரோகம் செய்யத் துணிந்து விட்டார் என்பது தெரிகிறது. தமிழகம் ஈழப் பிரச்சனையில் கொதித்துக் கொண்டிருக்கையில் புதிதாய் ஒன்றைக் கிளப்பி திசை திருப்ப முயற்சி மேற்கொள்ளப்படுகிறதோ என்று தோன்றுகிறது. எது எப்படியாயினும் தமிழன் விழித்துக் கொள்ள வேண்டும்.

கடவுள் என்ற ஒன்று இருந்தால் அதைக் கேட்க விரும்புகிறேன்:

கலைமகளுக்கும், நீதி தேவதைக்கும் பாதுகாப்பும் நீதியும் இல்லை என்றால் நீ எதற்கு?

தமிழன் வாழ்வில் இன்னுமொரு கரிநாள். வெட்கித் தலைகுனிகிறேன்.

No comments: