Pages

வெண்பா முயற்சி...தளை தட்டி....தலையிலயே தட்டுதுப்பா...

இப்போதுதான் வெண்பா பற்றி படிக்க ஆரம்பித்திருக்கிறேன். வெண்பா இலக்கணம் சிறுவயதில் படித்ததுதான் என்றாலும் நிறைய மறந்துவிட்டேன். மறந்துவிட்டேன் என்பதை மறந்துவிட்டு எழுத ஆரம்பித்திருக்கக் கூடாது, ஒரிரு முறை படித்து தெளிவு பெற்றிருக்க வேண்டும். இப்போது என்னுடைய வெண்பாக்களை சரிபார்க்க ஆரம்பித்திருக்கிறேன். தமிழ் விக்கீ மற்றும் தமிழார்வலர்களின் வலைப்பதிவுகள் (http://payananggal.blogspot.com/) மிகவும் உதவியாக இருக்கின்றன. சரிபார்த்துவிட்டு மீண்டும் தொடர்வேன். இப்போதைக்கு டாடா.

வெண்பா முயற்சி - கவிதை (7, 8, 9, 10)

தொடரும் வெண்பா....

தேடி எடுத்துவிட்டேன். எங்கோ பத்திரமாக வைக்கவேண்டும் என்று, வைரமுத்து கவிதைகள் புத்தகத்தில் வத்திருக்கிறேன் போலும். அல்ல, என் வெண்பாக்களை வைரமுத்து சரிபார்த்துச் சொல்லட்டும் என்று வைத்திருந்தேனோ என்னவோ. எதுவாயினும் சரி, தொடர்ந்து படியுங்கள்.

வெண்பா இரண்டு

புடம் போட்டுப் பார்த்தாலும் ஓர்
இடம் இல்லை ஐயத்திற்கு - தடம்
மாறா எனக்கு காதலும் உயிரும்
வேறா கா தென்றும்.

வெண்பா மூன்று

காத்திருக்கும் நேரம் நொடிப் பொழுதாயினும்
பூத்திருக்கும் பூ உலர்ந்திடுமோ? - ஏத்திவைத்த
மனது தவிக்குமோ அல்ல தவிர்க்குமோ
எனது நேர ஒழுக்கமோங்குக.

வெண்பா நான்கு

கரம் கொடு காதலே எனக்கொரு
வரம் கொடு தினமும் - சிரம்
முழுதும் உன் நினைவே என்னகம்
எழுதும் ஆயிரங் கனவே.

வெண்பா ஐந்து

ஆயிரம் ஆண்டுகள் மறவா உனை
பாயிரங் கொண்டு பாடவந்தேன் - தீயிடம்
இட்டு சுட்டாலும் என் தமிழ்ப்
பாட்டு என்றும் உனைப்பாடும்.

படிப்பவர்களில் வெண்பா புலமை இருப்பவர்கள் அருள்கூர்ந்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள். கற்றுக்கொள்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.

வெண்பா முயற்சி - கவிதை (6)

வெகு நாட்களாக இருந்த வெண்பா முயற்சி

வெகு நாட்களாக எனக்கு வெண்பா எழுத வேண்டும் என்று ஆசை. எவ்வளவுதான் புதுக்கவிதை போல எழுதினாலும் இலக்கணம் கொண்டு எழுதும் போதுதான் ஒருவனுடைய கவியார்வம் முழுமை அடையும் என்பது என் தாழ்மையான கருத்து (மாற்றுக் கருத்து இருப்பது நியாயமே). என்னைப் பொறுத்த வரை நினைத்ததை எழுத்தில் வடிப்பது சுலபம். ஆனால் சில கட்டுப்படுகளுக்கும், வரைமுறைகளுக்கும் உட்பட்டு ஒரு கருத்தை எழுதுவது எல்லாராலும் இயலாது. மேலும் இதில் சுவாரஸ்யமான மற்றும் சவாலான விஷயம் என்னவென்றால், இலக்கணம், அழகு, கருத்து இவை மூன்றும் சேர்ந்து இருக்கவேண்டும்.

சரி, இப்போது என்னுடைய முதற் முயற்சியைப் பாருங்கள். இது சரியா என்பது தெரியாது. சரியாக இருப்பது போன்று தோன்றினாலும் எனக்கு நம்பிக்கை இல்லை. நன்கு அறிந்தவர்கள் இருந்தால் என்னைத் தெளிவுபடுத்தவும்.

இனிமேலும் காத்திருக்க என்னா லியலாது
கனிமொழி பேசும் காரிகையே - தனியே
விழியோரம் ஓரிடம் கொடு ஒருநாள்
மொழிவேனென் காத லுனக்கு.

இது போன்று மொத்தம் ஆறு பாடல்கள் எழுதினேன். ஆனால் அந்த காகிதம் தொலைந்தாயிற்று. கிடைத்தால் பதிவு செய்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.

சிந்தையில் இனித்தது... - கவிதை (5)இன்றைய தினமலரில் வெளியான புகைப்படம் (நன்றி: www.dinamalar.com)

ஆடை கிடையாது
அது என் வறுமை.
ஈடு இணையேது உனக்கு
இன்று ஆடையாகு நீ எனக்கு.

மழை நூலெடுத்து
இழை தொடுத்து
ஆடை நெய்து, ஆனந்தக்கூத்தாடப்
புறப்பட்டுவிட்டேன்.

இயற்கையோடு இயைந்து
மழையோடு குழைகிறேன்
இனி எந்நாளில் வருமோ?
இந்த கனிச்சுவைக் களிப்பு.

வானம் தொடுக்கும் அம்புகள்
என்னைத் துளைக்கட்டும்.
பரவாயில்லை
இது ஆனந்தப் போர்க்களமே.
ஒவ்வொரு அம்பிலும் நான்
மறுபிறவி கொள்கிறேன்
ஆயிரம் ஆயிரம் ஜென்மங்கள்
எனக்கு மழையின் பரிசு.

காய்ந்த நிலத்தில்
நீரள்ளித் தெளித்தால் தெரியும்
எவ்வளவு வேகமாக ஆட்கொள்ளுமென்று
நீ என்னையும் அது போலவே ஆட்கொண்டு ஆள்.
நமக்கு என்னதான் தேவை?

இந்தியாவை விட்டு வெளியேறி இரண்டு வருடங்கள்தான் ஆகிறது என்றாலும், இங்கே நான் காணும் விஷயங்கள் நம் நாட்டில் என்ன குறைபாடு என்பதை தெளிவாக விளக்குகின்றன. இன்னிக்கு சாயங்காலம் என்னுடைய நண்பர்கள் இருவருடன் காபி குடிக்க வெளியே சென்று இருந்தேன்.

இங்கே ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் நானும் அந்த நண்பரும் எப்போது சந்தித்தாலும் எங்களுடைய பேச்சு ஓரிடத்தில் வந்து முடியும். அது என்னன்னா, இந்தியாவிற்கு என்ன தேவை? நம்மால் என்ன செய்ய இயலும்? என்னுடைய நண்பர் இதில் நிறைய ஆராய்ச்சி செய்பவர். அவர் சாப்பிடும், தூங்கும், சம்பாதிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அவருக்கு இதுதான் வேலை. நாங்கள் இங்கே இருந்தாலும் இன்னும் சில வருடங்களில் நமது நாட்டிற்குத் திரும்பி ஏதாவது செய்து சமுதாய முன்னேற்றத்தில் நாமும் பங்குகொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை. பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று..

விஷயத்திற்கு வருகிறேன்....அப்படி இன்று காபி கடைக்கு வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். சும்மா இதே மொக்கை தான் (ஆனால் எனக்கு அந்த மொக்கையில் ஒரு நம்பிக்கை உண்டு). அப்போது எதிரில் ஒரு கார் இன்னொன்று மீது மோதியது. என்னுடைய நண்பர் உடன் சொன்னார்...ராம்கி...இப்போது மணி சரியாக 7.58. இன்னும் மூன்று நிமிடங்களில் இங்கே போலீஸ் கார் வரும் பார்...என்றார். அதே போன்று சரியாக இரண்டு நிமிடத்தில் வந்துவிட்டது. அந்த அளவிற்கு இங்கு இருக்கும் காவல் துறையை நம்பலாம். இதக்காட்டி என்னோட நண்பர் சொன்னார்...இந்த நம்ம ஊர்ல நடக்கவே நடக்காது ராம்கி அப்டின்னார். நம்ம ஊர்ல என்ன நடக்குதுன்னு பாத்தா....இன்னும் நம்ம போலீஸ்காரங்க காசு வாங்கிட்டு விட்டுடறாங்க....இதுக்கு என்ன பன்றதுன்னு யோசிச்சுட்டே வீட்டுக்கு திரும்பி வந்தோம்...

சமுதாய முன்னேற்றத்துக்கு என்ன தேவை அப்டிங்கறதுல...என்னோட அபிப்ராயம் என்னன்னா...நம்ம சொசைட்டில படிப்பு கொஞ்சம் அதிகமா சொல்லி குடுக்கனும்... எல்லா பசங்களையும் படிக்க வெக்கனும்... படிக்க வெச்சா போதும்... மத்தது எல்லாம் தானா நடக்கும்....அப்டிங்கறது. என்னோட நண்பர் சொல்லுவார்...இது மட்டும் போதாது ராம்கி..இன்னும் நிறைய ப்ரச்னை இருக்கு,.. நான் நிறைய யோசிச்சுட்டு விட்டுட்டேன் அப்டிங்கறார். ஆனா எனக்கு அதுல நம்பிக்கை இல்ல... என்ன பொறுத்த வரைக்கும்..ஏதாவது ஒரு முயற்சி பன்னிகிட்டே இருக்கனும். அப்புறம் சிந்திச்சுகிட்டே இருக்கனும்... ஏதாவது ஒருநாள் அது பலிக்கும் அப்டிங்கற நம்பிக்கை இருக்கு.

இப்போதைக்கு நான் என்ன நினைக்கறேன்னா, கொஞ்ச நாள் இங்க இருந்துட்டு அங்க போயி நான் நினைக்கறது எல்லாத்தயும் செய்யனும். பாக்கலாம்... காலம் கண்டிப்பா பதில் சொல்லும்.

உங்களுக்கு எதாச்சும் ஐடியா இருந்தா சொல்லுங்க...இந்த மாதிரி நிறைய பேர் இருக்காங்க... அவங்களுக்கு தெரிய வந்தா...கண்டிப்பா முயற்சி செய்வாங்க. உங்க ஐடியாவ மத்தவங்களோட பகிர்ந்து கொண்டே இருங்க. கண்டிப்பா ஒருநாள் முயற்சி பலிக்கும்.

மீண்டும் சந்திப்போம்.
MICROSOFT SURFACE COMPUTING....
யப்பா.....எனக்கு தல சுத்துது....


கணிணி தொழில்நுட்பம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.Microsoft Surface Computing நீங்கள் இந்த தளத்தில் மேலும் சில விவரங்கள் மற்றும் வீடியோக்களை காணலாம்.
GOOGLE - தவிர்க்க முடியாதது.

GOOGLE - இது தவிர்க்க முடியாத ஒரு வார்த்தை ஆகிவிட்டது. காலையில் எழுந்தவுடன் செய்திகள் படிக்க GOOGLE, பிறகு GOOGLE மெயில், காலேஜுக்கு சென்றால் GOOGLE ஸ்காலர், பொருட்கள் வாங்க GOOGLE செக்அவுட், இலவச புத்தகம் படிக்க GOOGLE புக்ஸ் - இது எல்லாவற்றுக்கும் மேலாக எதற்கெடுத்தாலும் GOOGLE SEARCH (சமையல் குறிப்பு உட்பட; இதவிட கொடும என்னன்னா...... என்னோட நண்பன் ஒருத்தன்....வேலை இல்லாம வெட்டியா இருக்கும் போது என்ன செய்யறது....வெட்டி பொழுது எப்டி கழிக்கறது...அப்டின்னு தேடுவான்). நான் சற்றே யோசித்து பார்க்கையில் GOOGLE நம் வாழ்க்கையை ஆக்கிரமித்து இருக்கிறது என்றால் மிகையாகாது.

இந்த பதிவிற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

சமீபத்தில் நான் சியாட்டில் (Seattle, WA) சென்றிருந்த போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் அன்பர்களை சந்தித்தேன். என்னைப் பொறுத்த வரை கணினி மென்பொருள் என்றால் மைக்ரோசாஃப்ட் தான் தல மாதிரி....மத்தவங்க எல்லாம் அப்புறம் தான்...என்று ஒரு நினைப்பு. அந்த அன்பர்களிடம் பேசிய பிறகு ஒன்று மட்டும் புரிந்தது. கூகிள் என்னைப்போன்ற சாதாரண பயணாளரிடம் மட்டுமல்லாது, மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனத்தில் பணிபுரியும் அனுபவம் வாய்ந்த, மைக்ரோசாஃப்ட் விசுவாசிகளிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது ஒன்றும் சாதாரணமான விஷயமில்லை.

ஒரு சீனியர் அதிகாரியிடம் பேசும் போது அவர் இப்படிச் சொன்னார்: "மைக்ரோசாஃப்ட் ஒரு காலத்துல நம்பர் ஒன் கம்பெனியா இருந்தது"--- இதைக்கேட்டவுடன் என் பார்வை மாற, புருவம் உயர, உடன் சுதாரித்துக் கொண்டு அவர் பேச்சை மாற்றினார் --- "அதுக்காக இன்னிக்கு நம்பர் ஒன் இல்லேன்னு சொல்ல முடியாது; இன்னும் சில விஷயங்கள்ல நாங்கதான் நம்பர் ஒன்" - அப்டின்னார்...

இவர் அப்டின்னா...இன்னொருத்தர் இப்டி --- எப்டின்னு கேட்டா, "தம்பி..வாங்க நம்ம GOOGLE SEARCH பன்னலாம்" --- அப்டின்னு சொன்னார். நான் உடனே...என்னங்க சார், மைக்ரோசாஃப்ட்ல இருக்கீங்க; GOOGLE SEARCH பன்னலாம்னு சொல்றீங்களே? LIVE SEARCH பன்ன மாட்டீங்களா? அப்டின்னு நான் கேட்க...உடனே அவர்: தாராளமா பன்னலாம்...அதுக்கென்ன...ஆனா உனக்கு வேண்டிய பக்கம் மட்டும் மொதல்ல கெடைக்காது....பரவால்லயா? அப்டின்னார்.....

இது நிஜமாவே பெரிய விஷயம். எங்க நண்பர்கள் மத்தியில் ஒரு ப்ரபலமான வாக்கியம் உண்டு; அத சொல்லி இந்த பதிவ இத்தோட முடிச்சுக்கறேன்.....

அது....GOOGLE தெய்வோ பவ...!
லாலூ.... The MAN


லாலூ ப்ரசாத் யாதவ் பற்றி என்னை போன்றவர்களுக்கு நினைவில் இருப்பதெல்லாம் அவருடைய காமடி கலந்த கலக்கல் அறிக்கைகளும், தடியைக் காட்டி அடிப்பது போல் இருந்த தினமலர் புகைப்படம் மற்றும் உலகப் புகழ் பெற்ற மாட்டுத்தீவன ஊழல் வழக்கும்தான். ஆனால் இன்று அவர் ஒரு அசாதாரணமான சாதனை நிகழ்த்தியிருக்கிறார். இந்திய இரயில்வே மஞ்சள் கடுதாசி கொடுக்க வேண்டிய நிலையிலிருந்து ஒரு லாபகரமான இயக்கமாக மாறியிருக்கிறது. இதற்கு அவர் மட்டுமே காரணம் என்று சொல்ல இயலாது; ஆனால் அவரும் ஒரு முக்கியமான காரணம் என்பதை மறுக்க முடியாது. சரி விஷயத்துக்கு வர்றேன்...இன்று காலை ஒரு தளத்தில் இவரைப்பற்றி படிக்க நேர்ந்தது (சுவாரஸ்யமாக இருந்தது); அவை உங்களுக்காக....

http://en.wikipedia.org/wiki/Laloo_Prasad_Yadav
http://blogfanatic.wordpress.com/2006/09/18/lalu-at-iima/

http://specials.rediff.com/money/2006/sep/18sld1.htm?q=tp&file=.htm

http://exim.indiamart.com/budget-2005-06/rail-budget2005-06/rail-budget-05-06-highlights.html

நாங்க அப்டிதான்... - கவிதை (4)

தேர்தலுக்கு ஒரு தடவ உயிர்த்தெழுவோம்
சட்டசபையில ஏற்கனவே இருந்தவங்கள எடம் மாத்தி ஒக்காத்தி வெப்போம்
அவங்க திருந்தமாட்டாங்க....நாங்களுந்தான்...
நாங்க அப்டிதான்.

கஞ்சித் தொட்டி வெப்பாங்க
என்னமோ தங்கத் தொட்டி வெச்சா மாதிரி பேசுவாங்க...
ஆனா கொடி கட்டுவோம்...போஸ்டர் ஒட்டுவோம்
அந்த பசையில இருக்கற ஈரம் கூட எங்க வயித்துல இருக்காது
பரவாயில்ல நாங்க அப்டிதான்.

வெள்ளிய வெலக்கி விலைக்கு போட்டாச்சு
அங்கம் தங்கம் பாத்து தலமொற ஆச்சு
சோறு பொங்கி ஆறு மாசம் ஆக போவுது
ஆனா கரை வேட்டி கட்டுவோம்...கட்சி தலைவரு பொறந்தநாளக்கி முட்டாய் குடுப்போம்
நாங்க அப்டிதான்.

அண்டி படுக்க எடம் இருக்காது
ஆனா வண்டி கட்டி பிரச்சாரம் செய்வோம்
நாங்க அப்டிதான்.

கழக கண்மணிகளே...ரத்ததின் ரத்தங்களேன்னா போதும்
கரஞ்சு போயிடுவோம் நாங்க
ரத்த ஓட்டம் இருக்கான்னு தெரியாது
ஆனா கட்சி கூட்டம் விடமாட்டோம்
நாங்க அப்டிதான்.

ஒரு காலத்துல தாவரவாதி தான் நாங்களும்
கொஞ்ச கொஞ்சமா தீவிரவாதி ஆகறோம்
இதுக்கெல்லாம் யாரு காரணம்?
தெரியாதுங்க
நாங்க அப்டிதான்.
கீதை சொல்லும் கதை...!

ஒரு சில விஷயங்களில் சரியானது எது என்று முடிவு செய்வதில் நாம் எப்போதுமே தடுமாறுவதுண்டு. இது எல்லோருடைய வாழ்க்கையிலும் நிகழ்வதுதான். அப்போது நாம் நியாயாதிபதிகளைப் போலவும், சுயநலவாதிகளைப் போலவும் இருவேடங்கள் தரிப்பதுண்டு. இந்த மாதிரி தருணங்களில் நம் மனத்திற்குள் ஒரு போர் நிகழும். இதை செய்தால் எனக்கு நண்மை பயக்கும். ஆனால் அது தர்மமல்ல. இப்படி ஒரு இழுபறி. பல சமயங்களில் சுயநலம் வெற்றிகொள்ளும். எதுவாயினும் இருபக்கம் சிந்திப்பது என்பது சரியாக இருப்பதில்லை; ஆனால் இதை தவிர்ப்பதற்க்கில்லை. இருபக்கம் சிந்திப்பது சரியானது என்றாலும், ஒரு சமயத்திற்கு மேல் இழுபறி இருப்பது எடுக்கும் முடிவுகளில் எதிர்மறையாக எதிரொலிக்கும். மேலும் இது முடிவுகளை தாமதப்படுத்தி சரியான தருணத்தை இழக்கச் செய்யும். இது நமக்கு மட்டுமா? என்று சற்றே சுற்றம் பார்த்தால், எல்லோருமே இது போன்று எதாவதொரு சமயத்திலேனும் அவதிப்படுகிறார்கள்.

இது போன்ற ஒரு சந்தர்ப்பம் பாரதத்தில் வருகிறது; கண்ணன் அர்ச்சுனனுக்கு போதனை செய்ய அங்கேதான் கீதோபதேசம் ஆரம்பமாகிறது.

(கீழ் வருவனவற்றை "ஸ்ரீ முத்து ஐயர்" இயற்றிய "ஸ்ரீ பகவத் கீதை வெண்பா" புத்தகத்தில் இருந்து எழுதுகிறேன்)

// பாரதப்போர் நிகழ்வதென்று தீர்மானமானதும் துர்யோதனன் கிருஷ்ணனை உதவிகேட்கத் துவாரகை சென்றான். அவருடைய அரண்மணை சென்றபோது கிருஷ்ணன் சயனத்திலிருந்தார். துர்யோதனன் தலைப்புறத்தில் ஓர் ஆசனத்திலமர்ந்தான். அதே சமயம் அர்ச்சுனனும் கிருஷ்ணனை காண வந்து கால்புறத்தில் உட்கார்ந்தான். கிருஷ்ணன் கண் விழித்ததும் அர்ச்சுனனைப் பார்த்தார். துரியோதனனும் முன்வந்து, "உன் உதவி நாடி நான் வந்தேன்; நான் அர்ச்சுனனுக்கு முன் வந்தேன்; நாங்கள் இருவரும் உனக்குச் சமமாயினும், நான் முன்பு வந்ததால் இப்போரில் எனக்குத்தான் உதவி புரிய வேண்டும்" என்றான்.

கிருஷ்ணன், "நீ முன் வந்தாய்; நான் முன் அர்ச்சுனனைப் பார்த்தேன்; இருவருக்கும் உதவுவேன்; ஒருவனுக்கு என்னுடைய ஒரு அக்ஷௌஹினி சேனையைத்தருகிறேன்; மற்றவனுக்கு நான் தனியாக உதவி செய்கிறேன்; ஆனால் நான் ஆயுதம் எடுத்து சண்டை போடமாட்டேன்; சிறுவன் ஆசையை பூர்த்தி செய்ய வேண்டியது முறை. ஆகையால் அர்ச்சுனா! உன் விருப்பம் என்ன? கூறு" என்றார். அர்ச்சுனன் "எனக்கு நீர்தான் வேண்டும்" என்றான். துர்யோதனன் அவர் சேனையைப் பெற்று சந்தோஷமாய் சென்றான். //

இவ்வாறாக போர் முடிவு செய்யப்பட்டு, அர்ச்சுனன் கிருஷ்ணனுடைய உதவியையும் நாடியாயிற்று. ஆனால் போர்க்களத்தில் அர்ச்சுனன் போர் புரிய மறுக்கிறான். தன்னுடைய உறவினர்களையும், சகோதரர்களையும் எவ்வாறு தான் போரில் கொல்வேன் என்றும், அது பாவம் என்றும் பதறுகிறான். பிதற்றுகிறான். அதற்கு பகவான் கிருஷ்ணர் ஒரு ஆசிரியனைப் போல் அர்ச்சுனனுக்கு பாடம் புகட்டத் துவங்குகிறார். அது கீதையின் ஆரம்பமாகிறது,

பகவத் கீதை அத்தியாயம்: ஸாங்கிய யோகம் (இரண்டாமத்தியாயம்) ஸ்லோகம்: 11

ஸ்ரீ பகவான் உவாச:
அஸோச்யா-னன்வஸோசஸ்-த்வம் ப்ரஜ்ஞாவாதாம்ஸ்ச பாஷஸே |
கதாஸூ-நகதாஸூம்ஸ்ச நானுஸோசந்தி பண்டிதா: ||

இதை 'முத்து ஐயர்' அவர்கள் வெண்பா வடிவில் கீழ்வருமாறு மொழி பெயர்க்கிறார்:

ஸ்ரீ பகவான் கூறியது:

துயர்க்குரியர் அல்லார்க்குச் சோகிப்பாய் தூயோய்
நயக்கறிவின் நல்லுரையும் சொல்வாய் - மயக்கொழிவார்
சென்றார்க்குந் தம்மாவி செல்லாதித் திண்புவியில்
நின்றார்க்கும் நேரார் துயர்.

'பரமார்த்த தரிசனம்' என்னும் பகவற் கீதை மூலத்திலிருந்து:
(இதனுடைய ஆசிரியர் யாரென்று தெரியவில்லை. ஆனால் இது அரிய புத்தகம் என்பது மட்டும் விளங்குகிறது. யாருக்கேனும் இந்த புத்தகத்தை பற்றி தெரிந்திருந்தால் அருட்கூர்ந்து தொடர்பு கொள்க. புத்தகத்தின் பெயர்: 'பரமார்த்த தரிசனமென்னும்' பகவற்கீதை மூலமும் ' கூடார்த்த தீபிகை' என்னும் அதன் உரையும்)

அன்னவர்கள் சோகிதர் எனா அழுவதாலும்
பன்ன அரியோர்கள் முறையே பகர்தலாலும்
மன்ன மயல் ஏறி உள் மயங்கினை கொல் வாயாது
இன்ன தொழிலானதை மறந்திடு இவையும் கேள்.

(அட! கீதையை (எதையும்) தமிழில் படிப்பது சுகமாகத்தான் இருக்கிறது)


பொருள் விளக்கம்:
ஏ! அர்ச்சுனா! நீ சோகப்படாதவர்களைப் பற்றி சோகப்படுகிறாய். மேலும் அனேக விஷயங்களறிந்த பண்டிதனைப் போலும் பேசுகிறாய். வார்த்தைமாத்திரத்தால் பண்டிதர் போல பேசுகிறாய்; ஆனால் உண்மையில் அந்த உயர்ந்த நிலையை நீ அடையவில்லை....

'முத்து ஐயர்' அவர்களின் இப்பாடலுக்கான அடிக்குறிப்பு: (இந்த பாடலுக்கான முதண்மை பொருள் வேறொன்றைக் குறிப்பதாயினும், கீழவருவனவையும் அர்த்தத்திற்குரியதே)

"அறிவின் நல்லுரையும் சொல்வாய் - சூரனைப்போல் பேசுகின்றான், கோழையைப்போல் பதறுகின்றான்; நான் சிஷ்யன், நீ சொன்னபடி செய்கிறேனென்கின்றான். யுத்தம் செய்யமாட்டேன் என்ற தீர்மானத்தையுங் கைவிடவில்லை. இதைச் சுட்டிக்காட்டி பகவான் நகைப்பவர் போல் காண்கின்றார்."

ஆக நாமும் இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறோம். எதோ ஒன்று முடிவு செய்து கொண்டு, மற்றவையையும் சிந்தித்து அவற்றின் உதவியும் நாடி, கடைசியில் புலம்புகின்றோம்.

இந்த நிலையிலதான் அர்ச்சுனன் கண்ணனிடம் பாடம் பயில்கிறான். நாமும் அதை கற்க வேண்டும்.

தொடரும்...

பழைய எழுத்து... - கவிதை (3)

எதிலும் சேராத ஒரு எக்காளப் பார்வை
எப்படியும் புரியாத வேற்றுமொழிப் புன்னகை
தவம் புரிந்தேனும் தகுதி கொள்ளப்பார்க்கிறேன்
இவற்றைப் புரிந்து கொள்ள.

நெசமுன்னு நெனச்சிருந்தோமே... - கவிதை (2)நெசமுன்னு நெனச்சிருந்தோமே நெனப்பெல்லாம் எங்க போச்சு?
நெஞ்சத்து ஈரமெல்லாம் காணாம போச்சோ கண்ணில் படாம?

நடந்து போன நாலு வீதி
நம்ம கத கூடி பேசும்
கடந்து போன காத்து கூட
நம்மோட வாசம் சொல்லும்

நெசமுன்னு நெனச்சிருந்தோமே நெனப்பெல்லாம் எங்க போச்சு?
நெஞ்சத்து ஈரமெல்லாம் காணாம போச்சோ கண்ணில் படாம?

வாசமுள்ள பூவெல்லாம்
வசமாகும் நம்ம கிட்ட
வண்ணத்து பூச்சியெல்லாம்
வந்து நின்னு கடன் கேக்கும்

நெசமுன்னு நெனச்சிருந்தோமே நெனப்பெல்லாம் எங்க போச்சு?
நெஞ்சத்து ஈரமெல்லாம் காணாம போச்சோ கண்ணில் படாம?

சேர்ந்து சமச்ச சோறும் குழம்பும்
அமிர்தமா மாறும்
உயிர்களெல்லாம் நம்ம கிட்ட
உயிர்வாழ வழி கேட்கும்

நெசமுன்னு நெனச்சிருந்தோமே நெனப்பெல்லாம் எங்க போச்சு?
நெஞ்சத்து ஈரமெல்லாம் காணாம போச்சோ கண்ணில் படாம?

கூடி விளையாடி நம்ம
குழைந்ததை பார்த்தா
கொழந்த மனசு கேட்டு
கெழமெல்லாம் கேள்வி கேக்குமே

நெசமுன்னு நெனச்சிருந்தோமே நெனப்பெல்லாம் எங்க போச்சு?
நெஞ்சத்து ஈரமெல்லாம் காணாம போச்சோ கண்ணில் படாம?

முத்தம் குடுக்க மூணு போட்டி போட்டு
முடிஞ்சதும் கொசுறு நான் கேட்க
அங்கமெல்லாம் தவிச்சு
அங்க இங்க எங்கயும் கேக்குமே

நெசமுன்னு நெனச்சிருந்தோமே நெனப்பெல்லாம் எங்க போச்சு?
நெஞ்சத்து ஈரமெல்லாம் காணாம போச்சோ கண்ணில் படாம?
என் இந்திய பயணம்

எதிர்பாராதவைகளை எதிர்பார்த்துக்கொண்டே இரு :: இதுதான் வாழ்க்கை நமக்கு மீண்டும் மீண்டும் கற்பிக்கும் பாடம். என் அறிவிற்கேனோ அது எட்டவில்லை என்பது பற்றி வருத்தப்படுகிறேன். ஒவ்வொரு நாளும் எதையாவது அல்லது யாரையாவது எதிர்பார்த்துக்கொண்டே தொடங்குகிறது. இதை மாற்ற இயலுமா என்பது விடை தெரியாத வினா.

சரி. இந்திய பயணம் பற்றி கூற வருகிறேன். நான் கடந்த இருபது நாட்களை இந்தியாவில் கழித்தேன்; குடும்பத்துடன், சொந்தங்களுடன், பழைய நண்பர்களுடன். அடடா! என்ன சுகம்! குடும்ப கலாச்சாரங்களும், இந்திய பழக்க வழக்கங்களும் இன்பத்திற்காகவே என்று தோண்றிற்று. வெளிநாட்டில், மிகுந்த மாறுபட்ட கலாச்சார சூழலில் ஒரு வருடத்திற்கு மேலாக வாழ்ந்த பிறகு நம்முடைய சமுதாயமும், கலாச்சாரமும், பழக்க வழக்கங்களும் மேலும் இனிமையானதாகவே தெரிகின்றன.

வைரமுத்து அவர்களின் படைப்புகள் நிறைய வாங்கி வந்திருக்கிறேன். சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் (தமிழ் மொழிபெயர்ப்பு) பாதி படித்திருக்கிறேன் (சென்னையில் வாங்கியதுதான்). அப்பப்பா!! என்ன மனுஷரய்யா அவர்? அதிபுத்திசாலியாக இருந்திருக்கிறார். அன்றைய சமுதாயமும் அவ்வளவு முன்னேறி இருந்திருக்கிறது. சில விஷயங்கள் தற்கால வாழ்க்கைக்கு முற்றிலும் விரோதமாக தெரிந்தாலும், அதை வரலாறாகப் பார்த்தால் பிரமித்தே ஆக வேண்டும்.

என் உறவினர் ஒருவருடன் கொண்ட உரையாடலில் நிறைய விஷயங்கள் அறிந்து கொண்டேன். அவருடன் நான் கிறித்தவம், இந்து மதம், வள்ளலார் பற்றி கொண்ட கலந்துரையாடல் மிக்க மாறுபட்ட கோணத்தில் மதங்களை பார்க்க உதவிற்று. அவர் சில அரிய புத்தகங்களை (திரு. பொன்னம்பல அடிகளாரின் "தமிழ் பகவத் கீதை - பாடல்களும் உரையும்", திரு. முத்து ஐயர் இயற்றிய "தமிழ் பகவத்கீதை பாடல்கள்" மற்றும் "இராமாயண பால காண்டம் - மூண்று பெரும் புலவர்கள் இயற்றியவையின் ஒப்பீடு") எனக்கு பரிசாக கொடுத்தார். அவற்றில் சிலவற்றையாவது கணிணிப்படுத்த வேண்டும் என்பது அவரின் விருப்பம். அதை நான் வெற்றிகரமாக செய்வேன் என்று நம்புவேனாக!

பெண்கள் கையில் அகப்படும் சுதந்திரம் என்பது இருபுறம் கூர் செய்யப்பட்ட கத்தி; அதை ஒருபுறம் அவர்கள் உபயோகமாக பயன்படுத்தினாலும், மறுபுறம் கொலை செய்யவே பயன்படுத்தப்படுகிறது என்றே தோன்றுகிறது. அது ஏனென்று தெரியவில்லை, ஆயினும் சமீபத்திய நாட்களில் இப்படியே எண்ணுகிறேன். போகப் போகத்தான் தெரியும் நான் என்ன நினைக்கிறேன் என்பது. இப்பொழுதைக்கு தெளிவக நான் இல்லை என்றே கருதுகிறேன். (என்னடா திடீரென்று சம்பந்தமில்லாமல் பேசுகிறான் என்று தோன்றுகிறதா? அது அப்படித்தான்!!)

இவையெல்லாம் பற்றி மேலும் விளக்கமாக வரும் பதிவுகளில் பேசுவோம்.