Pages

வலம் இடம் மாறியதோ?

தனியே நடந்திருந்தேன்
தத்தளித்துத் தானிருந்தேன்
தனித்தடத்தில் நானாக
தங்கத்தடாகத்து மீனாக

கற்றை முடி ஒதுக்கும்
ஒற்றை விரல் அழகே
மொழி ஒன்று பேசடி
வழி என்ன கூறடி

என் அகவை எல்லாம்
உன் அகம் தேடினேன் போலும்
உன் வரவை அறிந்ததில்
என் அறிவை மறந்தேன் மேலும்

வலக்கை வேண்டும் இடக்கைக்கு
இடக்கை வேண்டும் வலக்கைக்கு
என் கைகள் என்னோடிருந்தது
இதுநாள் வரையிலும்

ஒருகை உன்னோடிருக்க
மறுகை தனிமையில்
வலம் இடம் மாறியதோ?
மனம் தடம் மாறியதோ?

காதல்

இது நான் இங்கே ஏற்கனவே பதிவு செய்த பழைய எழுத்து. மீண்டும் ஒரு முறை...


பேதை மனம் போதையில் ஏதேதோ உளரும்
பருவம் பறந்து சென்று பால்நிலா மீதமரும்
நினைவு நீரில் நடக்கும்
கனமும் கனவு கதை சொல்லும்
எண்ணம் எங்கெங்கோ சிதறும்
அந்தி பகல் பாராது அடம்பிடிக்கும் நெஞ்சம்

பூமி ஆழம் பார்க்கத் தோன்றும்
வானம் தொட்டுப் பார்க்கத் தூண்டும்
சலனம் சித்து வேலை செய்தாலும்
புத்தி புகழ்பாடும் அதை

பார்வை பாதியாய்ப் போக
புது வழி தேடும் விழி
அறிவு அகழ்ந்தாலும் வாராது
துணிவு மட்டும் எங்கிருந்தோ வந்திடும்

தனிமை சுகம் தரும்
தட்டுப்படுவன எல்லாம் தலைகீழாய்

கேள்விகளுக்கெல்லாம் கேள்விகளாகவே பதில்
மனம் ஆடும் பாடும்
அறிவுரை மட்டும் அடங்காது அதில்
குழப்பம் குடை பிடிக்கும் எல்லாவற்றிலும்
உங்களுக்குமா என்ன?

இதெல்லாம் மதுவால் அன்று
மது மிஞ்சும் மாதுவால்.