Pages

நாங்க அப்டிதான்... - கவிதை (4)

தேர்தலுக்கு ஒரு தடவ உயிர்த்தெழுவோம்
சட்டசபையில ஏற்கனவே இருந்தவங்கள எடம் மாத்தி ஒக்காத்தி வெப்போம்
அவங்க திருந்தமாட்டாங்க....நாங்களுந்தான்...
நாங்க அப்டிதான்.

கஞ்சித் தொட்டி வெப்பாங்க
என்னமோ தங்கத் தொட்டி வெச்சா மாதிரி பேசுவாங்க...
ஆனா கொடி கட்டுவோம்...போஸ்டர் ஒட்டுவோம்
அந்த பசையில இருக்கற ஈரம் கூட எங்க வயித்துல இருக்காது
பரவாயில்ல நாங்க அப்டிதான்.

வெள்ளிய வெலக்கி விலைக்கு போட்டாச்சு
அங்கம் தங்கம் பாத்து தலமொற ஆச்சு
சோறு பொங்கி ஆறு மாசம் ஆக போவுது
ஆனா கரை வேட்டி கட்டுவோம்...கட்சி தலைவரு பொறந்தநாளக்கி முட்டாய் குடுப்போம்
நாங்க அப்டிதான்.

அண்டி படுக்க எடம் இருக்காது
ஆனா வண்டி கட்டி பிரச்சாரம் செய்வோம்
நாங்க அப்டிதான்.

கழக கண்மணிகளே...ரத்ததின் ரத்தங்களேன்னா போதும்
கரஞ்சு போயிடுவோம் நாங்க
ரத்த ஓட்டம் இருக்கான்னு தெரியாது
ஆனா கட்சி கூட்டம் விடமாட்டோம்
நாங்க அப்டிதான்.

ஒரு காலத்துல தாவரவாதி தான் நாங்களும்
கொஞ்ச கொஞ்சமா தீவிரவாதி ஆகறோம்
இதுக்கெல்லாம் யாரு காரணம்?
தெரியாதுங்க
நாங்க அப்டிதான்.
கீதை சொல்லும் கதை...!

ஒரு சில விஷயங்களில் சரியானது எது என்று முடிவு செய்வதில் நாம் எப்போதுமே தடுமாறுவதுண்டு. இது எல்லோருடைய வாழ்க்கையிலும் நிகழ்வதுதான். அப்போது நாம் நியாயாதிபதிகளைப் போலவும், சுயநலவாதிகளைப் போலவும் இருவேடங்கள் தரிப்பதுண்டு. இந்த மாதிரி தருணங்களில் நம் மனத்திற்குள் ஒரு போர் நிகழும். இதை செய்தால் எனக்கு நண்மை பயக்கும். ஆனால் அது தர்மமல்ல. இப்படி ஒரு இழுபறி. பல சமயங்களில் சுயநலம் வெற்றிகொள்ளும். எதுவாயினும் இருபக்கம் சிந்திப்பது என்பது சரியாக இருப்பதில்லை; ஆனால் இதை தவிர்ப்பதற்க்கில்லை. இருபக்கம் சிந்திப்பது சரியானது என்றாலும், ஒரு சமயத்திற்கு மேல் இழுபறி இருப்பது எடுக்கும் முடிவுகளில் எதிர்மறையாக எதிரொலிக்கும். மேலும் இது முடிவுகளை தாமதப்படுத்தி சரியான தருணத்தை இழக்கச் செய்யும். இது நமக்கு மட்டுமா? என்று சற்றே சுற்றம் பார்த்தால், எல்லோருமே இது போன்று எதாவதொரு சமயத்திலேனும் அவதிப்படுகிறார்கள்.

இது போன்ற ஒரு சந்தர்ப்பம் பாரதத்தில் வருகிறது; கண்ணன் அர்ச்சுனனுக்கு போதனை செய்ய அங்கேதான் கீதோபதேசம் ஆரம்பமாகிறது.

(கீழ் வருவனவற்றை "ஸ்ரீ முத்து ஐயர்" இயற்றிய "ஸ்ரீ பகவத் கீதை வெண்பா" புத்தகத்தில் இருந்து எழுதுகிறேன்)

// பாரதப்போர் நிகழ்வதென்று தீர்மானமானதும் துர்யோதனன் கிருஷ்ணனை உதவிகேட்கத் துவாரகை சென்றான். அவருடைய அரண்மணை சென்றபோது கிருஷ்ணன் சயனத்திலிருந்தார். துர்யோதனன் தலைப்புறத்தில் ஓர் ஆசனத்திலமர்ந்தான். அதே சமயம் அர்ச்சுனனும் கிருஷ்ணனை காண வந்து கால்புறத்தில் உட்கார்ந்தான். கிருஷ்ணன் கண் விழித்ததும் அர்ச்சுனனைப் பார்த்தார். துரியோதனனும் முன்வந்து, "உன் உதவி நாடி நான் வந்தேன்; நான் அர்ச்சுனனுக்கு முன் வந்தேன்; நாங்கள் இருவரும் உனக்குச் சமமாயினும், நான் முன்பு வந்ததால் இப்போரில் எனக்குத்தான் உதவி புரிய வேண்டும்" என்றான்.

கிருஷ்ணன், "நீ முன் வந்தாய்; நான் முன் அர்ச்சுனனைப் பார்த்தேன்; இருவருக்கும் உதவுவேன்; ஒருவனுக்கு என்னுடைய ஒரு அக்ஷௌஹினி சேனையைத்தருகிறேன்; மற்றவனுக்கு நான் தனியாக உதவி செய்கிறேன்; ஆனால் நான் ஆயுதம் எடுத்து சண்டை போடமாட்டேன்; சிறுவன் ஆசையை பூர்த்தி செய்ய வேண்டியது முறை. ஆகையால் அர்ச்சுனா! உன் விருப்பம் என்ன? கூறு" என்றார். அர்ச்சுனன் "எனக்கு நீர்தான் வேண்டும்" என்றான். துர்யோதனன் அவர் சேனையைப் பெற்று சந்தோஷமாய் சென்றான். //

இவ்வாறாக போர் முடிவு செய்யப்பட்டு, அர்ச்சுனன் கிருஷ்ணனுடைய உதவியையும் நாடியாயிற்று. ஆனால் போர்க்களத்தில் அர்ச்சுனன் போர் புரிய மறுக்கிறான். தன்னுடைய உறவினர்களையும், சகோதரர்களையும் எவ்வாறு தான் போரில் கொல்வேன் என்றும், அது பாவம் என்றும் பதறுகிறான். பிதற்றுகிறான். அதற்கு பகவான் கிருஷ்ணர் ஒரு ஆசிரியனைப் போல் அர்ச்சுனனுக்கு பாடம் புகட்டத் துவங்குகிறார். அது கீதையின் ஆரம்பமாகிறது,

பகவத் கீதை அத்தியாயம்: ஸாங்கிய யோகம் (இரண்டாமத்தியாயம்) ஸ்லோகம்: 11

ஸ்ரீ பகவான் உவாச:
அஸோச்யா-னன்வஸோசஸ்-த்வம் ப்ரஜ்ஞாவாதாம்ஸ்ச பாஷஸே |
கதாஸூ-நகதாஸூம்ஸ்ச நானுஸோசந்தி பண்டிதா: ||

இதை 'முத்து ஐயர்' அவர்கள் வெண்பா வடிவில் கீழ்வருமாறு மொழி பெயர்க்கிறார்:

ஸ்ரீ பகவான் கூறியது:

துயர்க்குரியர் அல்லார்க்குச் சோகிப்பாய் தூயோய்
நயக்கறிவின் நல்லுரையும் சொல்வாய் - மயக்கொழிவார்
சென்றார்க்குந் தம்மாவி செல்லாதித் திண்புவியில்
நின்றார்க்கும் நேரார் துயர்.

'பரமார்த்த தரிசனம்' என்னும் பகவற் கீதை மூலத்திலிருந்து:
(இதனுடைய ஆசிரியர் யாரென்று தெரியவில்லை. ஆனால் இது அரிய புத்தகம் என்பது மட்டும் விளங்குகிறது. யாருக்கேனும் இந்த புத்தகத்தை பற்றி தெரிந்திருந்தால் அருட்கூர்ந்து தொடர்பு கொள்க. புத்தகத்தின் பெயர்: 'பரமார்த்த தரிசனமென்னும்' பகவற்கீதை மூலமும் ' கூடார்த்த தீபிகை' என்னும் அதன் உரையும்)

அன்னவர்கள் சோகிதர் எனா அழுவதாலும்
பன்ன அரியோர்கள் முறையே பகர்தலாலும்
மன்ன மயல் ஏறி உள் மயங்கினை கொல் வாயாது
இன்ன தொழிலானதை மறந்திடு இவையும் கேள்.

(அட! கீதையை (எதையும்) தமிழில் படிப்பது சுகமாகத்தான் இருக்கிறது)


பொருள் விளக்கம்:
ஏ! அர்ச்சுனா! நீ சோகப்படாதவர்களைப் பற்றி சோகப்படுகிறாய். மேலும் அனேக விஷயங்களறிந்த பண்டிதனைப் போலும் பேசுகிறாய். வார்த்தைமாத்திரத்தால் பண்டிதர் போல பேசுகிறாய்; ஆனால் உண்மையில் அந்த உயர்ந்த நிலையை நீ அடையவில்லை....

'முத்து ஐயர்' அவர்களின் இப்பாடலுக்கான அடிக்குறிப்பு: (இந்த பாடலுக்கான முதண்மை பொருள் வேறொன்றைக் குறிப்பதாயினும், கீழவருவனவையும் அர்த்தத்திற்குரியதே)

"அறிவின் நல்லுரையும் சொல்வாய் - சூரனைப்போல் பேசுகின்றான், கோழையைப்போல் பதறுகின்றான்; நான் சிஷ்யன், நீ சொன்னபடி செய்கிறேனென்கின்றான். யுத்தம் செய்யமாட்டேன் என்ற தீர்மானத்தையுங் கைவிடவில்லை. இதைச் சுட்டிக்காட்டி பகவான் நகைப்பவர் போல் காண்கின்றார்."

ஆக நாமும் இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறோம். எதோ ஒன்று முடிவு செய்து கொண்டு, மற்றவையையும் சிந்தித்து அவற்றின் உதவியும் நாடி, கடைசியில் புலம்புகின்றோம்.

இந்த நிலையிலதான் அர்ச்சுனன் கண்ணனிடம் பாடம் பயில்கிறான். நாமும் அதை கற்க வேண்டும்.

தொடரும்...