Pages

வெண்பா முயற்சி...தளை தட்டி....தலையிலயே தட்டுதுப்பா...

இப்போதுதான் வெண்பா பற்றி படிக்க ஆரம்பித்திருக்கிறேன். வெண்பா இலக்கணம் சிறுவயதில் படித்ததுதான் என்றாலும் நிறைய மறந்துவிட்டேன். மறந்துவிட்டேன் என்பதை மறந்துவிட்டு எழுத ஆரம்பித்திருக்கக் கூடாது, ஒரிரு முறை படித்து தெளிவு பெற்றிருக்க வேண்டும். இப்போது என்னுடைய வெண்பாக்களை சரிபார்க்க ஆரம்பித்திருக்கிறேன். தமிழ் விக்கீ மற்றும் தமிழார்வலர்களின் வலைப்பதிவுகள் (http://payananggal.blogspot.com/) மிகவும் உதவியாக இருக்கின்றன. சரிபார்த்துவிட்டு மீண்டும் தொடர்வேன். இப்போதைக்கு டாடா.

வெண்பா முயற்சி - கவிதை (7, 8, 9, 10)

தொடரும் வெண்பா....

தேடி எடுத்துவிட்டேன். எங்கோ பத்திரமாக வைக்கவேண்டும் என்று, வைரமுத்து கவிதைகள் புத்தகத்தில் வத்திருக்கிறேன் போலும். அல்ல, என் வெண்பாக்களை வைரமுத்து சரிபார்த்துச் சொல்லட்டும் என்று வைத்திருந்தேனோ என்னவோ. எதுவாயினும் சரி, தொடர்ந்து படியுங்கள்.

வெண்பா இரண்டு

புடம் போட்டுப் பார்த்தாலும் ஓர்
இடம் இல்லை ஐயத்திற்கு - தடம்
மாறா எனக்கு காதலும் உயிரும்
வேறா கா தென்றும்.

வெண்பா மூன்று

காத்திருக்கும் நேரம் நொடிப் பொழுதாயினும்
பூத்திருக்கும் பூ உலர்ந்திடுமோ? - ஏத்திவைத்த
மனது தவிக்குமோ அல்ல தவிர்க்குமோ
எனது நேர ஒழுக்கமோங்குக.

வெண்பா நான்கு

கரம் கொடு காதலே எனக்கொரு
வரம் கொடு தினமும் - சிரம்
முழுதும் உன் நினைவே என்னகம்
எழுதும் ஆயிரங் கனவே.

வெண்பா ஐந்து

ஆயிரம் ஆண்டுகள் மறவா உனை
பாயிரங் கொண்டு பாடவந்தேன் - தீயிடம்
இட்டு சுட்டாலும் என் தமிழ்ப்
பாட்டு என்றும் உனைப்பாடும்.

படிப்பவர்களில் வெண்பா புலமை இருப்பவர்கள் அருள்கூர்ந்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள். கற்றுக்கொள்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.

வெண்பா முயற்சி - கவிதை (6)

வெகு நாட்களாக இருந்த வெண்பா முயற்சி

வெகு நாட்களாக எனக்கு வெண்பா எழுத வேண்டும் என்று ஆசை. எவ்வளவுதான் புதுக்கவிதை போல எழுதினாலும் இலக்கணம் கொண்டு எழுதும் போதுதான் ஒருவனுடைய கவியார்வம் முழுமை அடையும் என்பது என் தாழ்மையான கருத்து (மாற்றுக் கருத்து இருப்பது நியாயமே). என்னைப் பொறுத்த வரை நினைத்ததை எழுத்தில் வடிப்பது சுலபம். ஆனால் சில கட்டுப்படுகளுக்கும், வரைமுறைகளுக்கும் உட்பட்டு ஒரு கருத்தை எழுதுவது எல்லாராலும் இயலாது. மேலும் இதில் சுவாரஸ்யமான மற்றும் சவாலான விஷயம் என்னவென்றால், இலக்கணம், அழகு, கருத்து இவை மூன்றும் சேர்ந்து இருக்கவேண்டும்.

சரி, இப்போது என்னுடைய முதற் முயற்சியைப் பாருங்கள். இது சரியா என்பது தெரியாது. சரியாக இருப்பது போன்று தோன்றினாலும் எனக்கு நம்பிக்கை இல்லை. நன்கு அறிந்தவர்கள் இருந்தால் என்னைத் தெளிவுபடுத்தவும்.

இனிமேலும் காத்திருக்க என்னா லியலாது
கனிமொழி பேசும் காரிகையே - தனியே
விழியோரம் ஓரிடம் கொடு ஒருநாள்
மொழிவேனென் காத லுனக்கு.

இது போன்று மொத்தம் ஆறு பாடல்கள் எழுதினேன். ஆனால் அந்த காகிதம் தொலைந்தாயிற்று. கிடைத்தால் பதிவு செய்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.

சிந்தையில் இனித்தது... - கவிதை (5)இன்றைய தினமலரில் வெளியான புகைப்படம் (நன்றி: www.dinamalar.com)

ஆடை கிடையாது
அது என் வறுமை.
ஈடு இணையேது உனக்கு
இன்று ஆடையாகு நீ எனக்கு.

மழை நூலெடுத்து
இழை தொடுத்து
ஆடை நெய்து, ஆனந்தக்கூத்தாடப்
புறப்பட்டுவிட்டேன்.

இயற்கையோடு இயைந்து
மழையோடு குழைகிறேன்
இனி எந்நாளில் வருமோ?
இந்த கனிச்சுவைக் களிப்பு.

வானம் தொடுக்கும் அம்புகள்
என்னைத் துளைக்கட்டும்.
பரவாயில்லை
இது ஆனந்தப் போர்க்களமே.
ஒவ்வொரு அம்பிலும் நான்
மறுபிறவி கொள்கிறேன்
ஆயிரம் ஆயிரம் ஜென்மங்கள்
எனக்கு மழையின் பரிசு.

காய்ந்த நிலத்தில்
நீரள்ளித் தெளித்தால் தெரியும்
எவ்வளவு வேகமாக ஆட்கொள்ளுமென்று
நீ என்னையும் அது போலவே ஆட்கொண்டு ஆள்.