Pages

Showing posts with label தமிழகம். Show all posts
Showing posts with label தமிழகம். Show all posts

அறிவு தரும் நூல்கள் (கண்ணதாசனின் சுய சரிதையிலிருந்து)

கவியரசு கண்ணதாசனின் சுய சரிதை, வனவாசம் நூலிலிருந்து...

(இதில் கண்ணதாசன் 'அவன்' என்று தன்னைத் தான் குறிப்பிடுகிறார்)

அந்த நேரத்தில் அவன் அவர்களைப் பற்றி ஆராய விரும்பவில்லை. காரணம் அவனும் உடன்பட்டே தான் அந்தக் காரியங்களில் இறங்கினான். பணக்கார மைனர்களைப் போன்று, பகலிரவு பாராமல் அவர்கள் ஆடினார்கள். 'கொந்தளிக்கும் கடல்', 'குமுறும் எரிமலை' என்றெல்லாம் படங்களிலே வசனங்கள் வரும். அவை வேறெவையுமல்ல! பல பெண்களுடைய இருதயங்களே! 'தமிழ்ப் பண்பாடு! தமிழ்ப் பண்பாடு!' என்ற கூக்குரல்கள் மேடையிலே கேட்கும். தன்பாடு தீரும் வரைக்கும் தான் அந்தப் பண்பாடு எல்லாம்!

இந்த நேரத்தில் அவனுக்குச் சில செய்திகள் தரப்பட்டன. நாம் மட்டும் தவறு செய்யவில்லை! முக்கியத் தலைவரே அதைத்தான் செய்கிறார் - என்று அந்தச் செய்திகள் கூறின! கலா ரசிகரும், இன்றைய எம். எல். ஏ ஒருவரும், அந்த நிகழ்ச்சியினை விரிவாகவே கூறினார்கள். அந்த எம்.எல்.ஏ முக்கியத் தலைவரின் பத்திரிக்கையிலே வேலை பார்த்தவர். ஆதலின், அவர் சொன்னவற்றை அவன் நம்பினான்.

அது இது:

ஓர் இரவு, முக்கியத் தலைவர் தூக்கம் பிடிக்காமல் முன்னும் பின்னும் நடக்கிறார். வெளியிலே இருவர் போயிருக்கிறார்கள். அவர்களை அவர் எதிர்பர்த்துக் கொண்டிருக்கிறார். மணி பத்தடிக்கிறது. பதினொன்று! கோவிலில் அர்த்த ஜாம மணி அடிக்கிறது. மணி பனிரெண்டு. அதற்குள் தலைவர் ஏழெட்டு முறை வெற்றிலை போட்டுத் துப்பி விட்டார். அதோ அவர்கள் வரும் சத்தம் கேட்கிறது. கதவு திறக்கப்படுகிறது. மூன்று ஆடவர்கள் உள்ளே நுழைகிறார்கள். 'ஆடவர்கள்தானா? அழகு மயில் வரவில்லையா?' ஓர் ஆடவனின் தலைக்கட்டு அவிழ்க்கப்படுகிறது. ஆண் உடைகள் களையப் பெறுகின்றன. என்ன ஆச்சர்யம்! அந்த உடைக்குள் ஓர் அழகு மயிலல்லவா ஒளிந்து கொண்டிருக்கிறது. அழைத்து வந்தோர் குறிப்பறிந்து வெளியேறுகிறார்கள். பகுத்தறிவுத் தலைவரின் அறை பண்டாரச்சன்னதியின் மடமாகிறது. பொழுது விடியும் முன்னே பூவை திரும்புகிறாள். ஓர் இரவு, இன்ப இரவாகிறது. இந்த நிகழ்ச்சியைப் பற்றி அறிந்த கட்சிப் பிரமுகர்கள், இதற்குக் கொடுத்த பெயரென்ன தெரியுமா? "சுந்தரகோஷ்" என்பதாகும். 'வேலைக்காரி' படத்தில் ஆண்வேடம் தாங்கிய பெண்ணொருத்தி 'சுந்தரகோஷ்' என்று அழைக்கப்படுவதையே அவர்கள் அப்படிக் குறிப்பிட்டார்கள்.

(குறிப்பு: 'வேலைக்காரி' நாடகம் அறிஞர் அண்ணா எழுதியது என்பதை நினைவில் கொள்க)

...

கழகத்திற்கென்றே (திமுக) ஒரு தனித்தமிழ் நடை உண்டு. அண்ணாத்துரையின் நடயைப் பின்பற்றி, எல்லோருமே ஒரே மாதிரி 'துள்ளு தமிழ்' எழுதுவார்கள். எழுதுவரின் பெயரை எடுத்துவிட்டுப் பார்த்தால் யார் எழுதியதென்றே தெரியாது. கதை ஒன்றில் தொடங்கி, பிறகு அதைக் கட்டுரையாக விரிக்கும் அலுத்துப் போன முறையை அனைவருமே கையாண்டார்கள்.

அவற்றில் எதையும் அவன் படிப்பதில்லை! காரணம், அந்த நோய் தன்னையும் பற்றிக் கொள்ளக் கூடாது என்பதுதான்.

தன்னுடைய எழுத்துக்களை அவன் படிபதில்லை என்பதிலே அவனுடைய நண்பர் கருணாநிதிக்கு (ஆம்! இன்றைய முதல்வர்தான்) அசாத்தியக் கோபம் வரும்.

ஒருநாள் அவர், புதிதாக வெளியாகியிருந்த தனது இரண்டு புத்தகங்களை எடுத்து அவன் முன்னால் போட்டு " இதெல்லாம் படியய்யா" என்றார். ஒரு புத்தகத்தை விரித்தான்.

நல்ல பண்பாடு உள்ள கதை அது! 'வாழ முடியாதவர்கள்' என்ற தலைப்பில் வெளியாகியிருந்தது. கதையென்ன தெரியுமா? படிக்காதவர்களும் படித்துப் பயனடைய வேண்டிய கதையல்லவா! விவரமாகவே சொல்கிறேன்.

மனைவியை இழந்த ஒரு போலீஸ்காரன். வறுமை தவழ்ந்து விளையாடும் சின்னஞ்சிறு வீடு அவன் குடியிருப்பு. மாண்டுபோன அவன் மனைவி சும்மா போகக் கூடாதென்று ஒரு மகளை விட்டுப் போயிருந்தாள். கதையின் ஆரம்பத்திலேயே அந்த மகள் தளதளவென்று வளர்ந்து பளபளவென்று மெருகேறிக் கவர்ச்சிப் பாவையாக விளங்குகிறாள். சின்னஞ்சிறிய வீட்டில் தன்னந்தனியாக இருக்குமவள், திருமணத்திற்காகக் காத்துக் கிடக்கிறாள். இரவுகள் வந்து போகின்றன, திருமணம் வரவில்லை. ஒவ்வோர் இரவிலும், தந்தையும் மகளும் மட்டுமே அந்த வீட்டில் துயிலுகின்றனர். அவளோ கல்யாணமாகாதவள்; அப்பனோ மனைவியை இழந்தவன். தந்தை மகளையே மனைவியாக்கிக் கொள்கிறான். கதாசிரியர் கதையை முடிக்கிறார்.

மேலை நாட்டு ஆபாசக் களஞ்சியங்களான; 'மாபசான்' கூட்டத்தினருக்குக் கூட, இத்தகைய கற்பனை தோன்றியதில்லை.

அவர் எந்த நோக்கத்தோடு இந்தக் கதையை எழுதினார்? நாட்டின் வறுமை நிலையைப் படம் பிடித்துக் காட்ட என்பது அவரது வாதம்.

...

பண்பாடற்றவர்களெனக் கருதப்படும் வெளி நாட்டவர் கூட, வறுமையைச் சித்தரித்துக் கதை எழுதும் போது, பண்பாட்டோடு எழுதினார்கள்.

ஆனால், மகளைக் கெடுத்த தந்தையை, வறுமைக்கு உதாரணமாக்கினார் 'முற்போக்கு'க் கதாசிரியர். அவன் அந்தப் புத்தகத்தை முழுவதையும் படித்து முடித்தான். தமிழ்ச் சமுதாயத்தின் எதிர் காலத்தைப் பற்றிய பயம், அவன் நெஞ்சில் சூழ்ந்தது. அடுத்தடுத்து 'குமரிக் கோட்டம்' 'ரோமாபுரி ராணிகள்' 'கபோதிபுரக் காதல்' முதலிய நூல்களைப் படித்தான்.

அந்த நூல்களில், பலரிடம் கெட்ட ஒருத்தியை பளபளப்பாக வருணித்திருந்தார் கட்சியின் மூலத் தலைவர். சமுதாயத்தில் தாழ்ந்து கிடப்போர், மேலெழ வேண்டும், என்ற நோக்கத்திற்கு, இவை எவ்வகையில் துணை புரியும்? எழுதுகின்றவனின் வெறித்தனத்தை இவையுணர்த்துமேயல்லாது, நாட்டுக்கு என்ன பயன் தரும்? பொது இடத்திலோ, குல மகளிர் மத்தியிலோ வைக்கக் கூடாத அளவுக்குப் பகுத்தறிவு வீரர்கள் புத்தகம் எழுதுவானேன்?

மாளிகையைப் பார்க்க வந்தவன் மாட்டுக் கொட்டகையை ரசிப்பது போல், ஒளி உலகைக் காணவந்த சீர்திருத்தவாதிகள், இருண்ட பகுதிகளையே சுவைத்து எழுதினார்கள். 'ஆபாசம்' என்ற கணக்கில் நான் சேர்க்க வரவில்லை. அவை என்ன பயன் தரும் என்பதுதான் என் கேள்வி.

அன்றிலிருந்தே கட்சியின் முக்கியஸ்தர்கள் எழுதும் கதை கட்டுரைகளை அவன் படிப்பதில்லை.

ஓடிப்போனவர்கள் கதையும், உருப்படாதவள் வாழ்க்கைச் சித்திரமும்; ஆட்டங்கண்ட கிழவனுக்கெழுந்த ஆசையும், அந்தி நேரத்து சுந்தரியின் தளுக்கும் நிரம்பி வழிந்த கழகப் புத்தகங்கள், ஆயிரக்கணக்கில் விற்பனையாயின. இளைஞர்களை அந்த மயக்கம் பற்றியது உண்மை. வெளியிலிருந்து வந்த விமர்சனங்களை வெறுத்தொதுக்கி அவற்றை இளைஞர்கள் விரும்பிப் படித்தார்கள்.

நாகரிகம் மிகுந்த ஒரு சமுதாயத்தின், அழிவு காலம் அதிலேதான் தொடங்கிற்று என்றும் சொல்லலாம். கட்சியின் வளர்ச்சியை அவன் கவனிக்க ஆரம்பித்தான். ஏராளமானவர்கள் கையில் கழகப் புத்தகங்கள் தவழ ஆரம்பித்தன. அடிப்படை அமைப்பில்லாத கட்சி, நல்ல வளர்ச்சியினைப் பெறத் தொடங்கிற்று.



இந்தக் கட்டுரை கிட்டத்தட்ட 1965ம் ஆண்டு வாக்கில் எழுதப்பட்டது. இதில் அரசியல் சாயங்களை விலக்கிவிட்டுப் பார்த்தால் கூட தமிழகத்தின் இன்றைய நிலை புரியும். மக்கள் அக்பர், ஔரங்கசீப் வரலாறுகளை ஒதுக்கிவிட்டு சமீபத்திய வரலாறுகளைப் படித்தால் உதவியாக இருக்கும் போலிருக்கிறது.

சென்னை சட்டக்கல்லூரி - தமிழன் வாழ்வில் இன்னுமொரு கரிநாள்

சென்னை சட்டக் கல்லூரியில் நடந்திருக்கும் சம்பவங்கள் நம் சமுதாயத்தை மீண்டும் ஒரு முறை தோலுரித்துக் காட்டியிருக்கிறது. சில மாணவர்களோடு சேர்த்து நீதி தேவதையும், கலைமகளும் கொலை செய்யப்பட்டிருப்பது நம் தமிழ்ச் சமுதாயத்தின் பெருத்த அவமானம். இது போன்று நடப்பது முதல் முறை இல்லை என்றாலும், நிகழும் பொழுது மிக விகாரமாகத்தான் தெரிகிறது. அவர்கள் நடத்திய வெறியாட்டத்தைப் பார்க்கும் போது அவர்கள் உண்மையாகவே மாணவர்கள்தானா என்ற கேள்வி எழுகிறது. அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த காவலர்கள் தமிழக காவல்துறையின் கையாலாகத்தனத்தையும், அரசியல் அழுக்குகளையும் காண்பிக்கிறது. அவர்கள் உண்மையிலே மாணவர்களாக இருந்தால், கலைமகளை களங்கப்படுத்திய குற்றம் இந்த தமிழ்ச் சமுதாயத்தைச் சேரும். சட்டக்கல்லூரி மாணவர்களின் இந்த வெறியாட்டம் தமிழக சட்டத்துறையின் லட்சணத்தையும், அதே சமயம் நாம் இனி சட்டத்தின் துணையை நாடினால் நியாயம் கிடைக்காது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

இந்த சம்பவத்தைப் பற்றி சட்டசபையில் விவாதிக்கும் போது முதலமைச்சர் உடல்நலம் குன்றியிருப்பதாகவும், அதனால் திரு. துரைமுருகன் பதில் கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. சென்னை காவல்துறை உயரதிகாரி மாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் குற்றம் நடக்கும் போது வேடிக்கை பார்க்கும் அவலத்தை அரங்கேற்றிவிட்ட பிறகு என்ன செய்தாலும் அது தீர்வாகாது. காவல்துறை இவ்வாறே இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஒரு சம்பவம் மட்டுமே நம் கண்களுக்கு புலப்பட்டிருக்கிறது என்பது வருந்தத்தக்க உண்மை.

அதேவேளை, இந்த கலவரம் நடந்த நேரத்தை சற்றே உற்றுப் பார்த்தால் இது ஒரு வேளை அரசின் வேலையாகவே இருக்குமோ என்ற எண்ணம் தோன்றத்தான் செய்கிறது. இலங்கையில் தமிழர் பிரச்சனை உச்ச கட்டத்தை அடையும் வேளையில், திரு. கருணாநிதி அவர்களின் சாமர்த்தியமான ஏமாற்று வேலை சில நாட்கள் முன்பு அம்பலமானது. அவர் தமிழர் போர்வையில் இத்தனை காலம் அரசியல் நடத்திவிட்டு தமிழனுக்கு பச்சைத் துரோகம் செய்யத் துணிந்து விட்டார் என்பது தெரிகிறது. தமிழகம் ஈழப் பிரச்சனையில் கொதித்துக் கொண்டிருக்கையில் புதிதாய் ஒன்றைக் கிளப்பி திசை திருப்ப முயற்சி மேற்கொள்ளப்படுகிறதோ என்று தோன்றுகிறது. எது எப்படியாயினும் தமிழன் விழித்துக் கொள்ள வேண்டும்.

கடவுள் என்ற ஒன்று இருந்தால் அதைக் கேட்க விரும்புகிறேன்:

கலைமகளுக்கும், நீதி தேவதைக்கும் பாதுகாப்பும் நீதியும் இல்லை என்றால் நீ எதற்கு?

தமிழன் வாழ்வில் இன்னுமொரு கரிநாள். வெட்கித் தலைகுனிகிறேன்.
ரஜினிகாந்த்: இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது?

ஒரு முறை, இரு முறை அல்ல; மற்றுமொரு முறை என்று செல்கிறது ரஜினியின் அரசியல் ப்ரவேச அறிவிப்பு கணக்கு. மீண்டும் ஒரு முறை ரஜினியின் அரசியல் ப்ரவேசம் குறித்து செய்திகள் வெளியாகி, அதற்கு கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் கழித்து மறுப்பு வெளியிட்டு இருக்கிறார். இது அவரது சொந்த விருப்பு வெறுப்புக்கு உட்பட்டதாக இருந்தாலும், கொஞ்சமாவது தமிழக மக்களை மனதில் கொள்ள வேண்டாமா? என்ன கொடும சார் இது? நீங்கள் நீங்கள் மட்டுமாக இருக்கும் வரையில் தொந்தரவு இல்லை. தமிழக மக்கள் என்ன பாவம் செய்தார்கள். சினிமாவில் உங்கள் முட்டாள்தனமான வசனங்களை ரசித்த குற்றத்திற்கான தண்டனையா இது? "நா ஒரு தடவா சொன்னா நூறு தடவ சொன்னா மாதிரி". யோவ், ஒரு தடவ சொல்லும் போது ஒரு தடவதான் சொன்னா மாதிரிதான். தண்ணி அடிச்சு இருந்தீங்களா என்ன? எப்டி நூறு தடவ சொன்னா மாதிரி இருக்கும். உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா? இல்ல சைடிஷ்ஷா? இந்த வடிகட்டின பைத்தியக்காரத்தனத்த சினிமாவோட நிறுத்திகிட்டா போதாதா? எதுக்கு பொதுவாழ்க்கையிலயும்? தமிழக மக்கள் ஏற்கனவே ரொம்ப நொந்து போயாச்சு. இதுல இவரோட அலம்பல் வேற.

இவர் ரசிகர்களை சந்திக்க போகிறார்; சந்தித்து அரசியல் ப்ரவேசம் குறித்து இறுதி முடிவு எடுக்கப் போகிறார் என்ற செய்தி மூன்று வாரங்களுக்கு முன்பே வட்டமடிக்கத் துவங்கியாயிற்று. மூன்று வாரங்கள் மெளனம் காத்துவிட்டு இப்போது அறிக்கை வெளியிட்டு இருப்பது ஒரு குழப்பவாதியின் தெளிந்த ஏமாற்று வேலை. இவருக்கு உண்மையாகவே அரசியல் ஆசை இல்லேன்னா இந்த செய்தி வந்த உடனேயே மறுப்பு வெளியிட்டு இருக்கனும். மூனு வாரமா என்ன சார் செய்துகிட்டு இருந்தீங்க? இமயமலை போயி கபிலமுனி கிட்ட ஆசிர்வாதம் கேட்டீங்களா? அவர் உங்ளுக்கே அல்வா குடுத்துட்டாரா? அது பரவாயில்ல. இப்போ வெளியிட்ட மறுப்பு செய்தியில் கூட தன்னுடைய சாமர்த்தியமான பைத்தியக்காரத்தனத்தோட சினிமாவையும் கலந்துதான வெளியிட்டு இருக்காரு. "இவரு வந்தா யாராலயும் தடுக்க முடியாதான்" எந்த நம்பிக்கையில இவரு இப்டி சொல்லலாம்? எல்லாம் நம்ம மக்க மேல இருக்கற அசட்டு நம்பிக்கதான். தமிழக மக்கள் இப்போவாவது முழிச்சுக்கனும். இனிமே ரஜினிகாந்த் பத்தி அரசியல் செய்தி வந்தா புறக்கணிக்கனும். அவர் அரசியலுக்கு நெசமாவே வந்தா அவரையே புறக்கணிக்கனும். இந்த சமயத்துல ஜெயகாந்தனுடைய "நடிகர்களின் சமுதாய பங்கு" பற்றிய கட்டுரைய பதிவு செய்தா ரொம்ப நல்லா இருக்கும். தேடிப் பார்க்கிறேன். இருந்தா பதிவு செய்யறேன்.

குசேலனில் இவர் உண்மையை சொல்லி இருக்கிறாராம். "இதற்கு முன் திரைப்படங்களில் பேசிய வசனமெல்லாம் ஒரு வசனகர்த்தாவோ இயக்குனரோ எழுதி கொடுத்து பேசினாராம்". ஏன் சார் அந்த மாதிரி வசனம் எழுதும் போது உங்க புத்தி எங்க போச்சு? உங்களுக்கு தமிழ் தெரியாதா? அப்போ தமிழ் மக்கள வெச்சு சம்பாதிக்கறத்துக்காக என்ன வேனா பேசுவீங்க. சுயபுத்தி இல்லாம காசு பாத்தா போதும் உங்களுக்கு. ஒரு பரபரப்ப உண்டாக்கனுன்னா பொது மேடையில "அவங்கள ஒதச்சா என்னன்னு" பேசுவீங்க. யாரு கண்டா? அது கூட யாராச்சும் எழுதி கொடுத்து பேசினேன்னு சொல்லி சுலபமா தப்பிக்கலாம். இந்த அறிக்கையும் ஒரு வேளை யாராச்சும் எழுதி கொடுத்துதான் வெளியிட்டு இருக்கிறாரோ என்னமோ? அடுத்த படம் "இயந்திரன்" வர்ற வரைக்கும் பொறுக்கனும். ஏன்னா இதுக்கான விளக்கம் அதுல தான் வரும். அப்புறம் அதுக்கு அடுத்த படத்துல "முன்னாடி படத்துல பேசினது ஒரு ரோபோ. அதுக்கு சொந்த புத்தி கிடையாது. அதுனால அத நம்பாதீங்க".. அப்டின்னு சொல்லுவார். என்ன ஒரே தில்லாலங்கடியா இருக்கு.

கடைசியா ஒரு வரி. ரஜினிகாந்த் பாணியில் சொல்ல வேண்டுமானால்:

இன்னும் தமிழ் மக்கள் இந்த நடிகரை நம்பினால், "தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது".