Pages

வா வாழ்வோம் - பழைய எழுத்து - கவிதை (20)

பூக்கள் கொல்லுமோடீ வண்டுகளை?
பின் ஏனடி என்னை கொல்கிறாய்?

தென்றலைத் துரத்துமோடீ கடலலைகள்?
பின் ஏனடி என்னைத் துரத்துகிறாய்?

கடலலைகள் பாடம் கற்பிக்கும் கரைக்கு
நீ கூட அப்படித்தானோ?

பூவோடு வாசம் போல் வேண்டாம்
தென்றலோடு சுகம் போல் வேண்டாம்

கடலலைகளுக்கும் கரைக்கும் உள்ளது போல்
போதும் எனக்கு உன் உறவு.

நில்லாது நீ எனை நினைத்தால் போதும்
கரைந்தாலும் பரவாயில்லை.. கரைபோலிருப்பேன்.

கடலலைதான் நீ!
கரை நான்!
ஒவ்வொரு முறை என் நெஞ்சைத் தொடும் போதும்
கரைகின்றேன்
உன்னுள் தான்
ஆயினும் நிரந்தரமில்லை

காய்ந்து கிடக்கும் மணலாக்கிவிடாதே என்னை
உன் ஈரம் வேண்டும் எனக்குள்
அது ஆற்றும் என் காயங்களை

நீ ஆற்றும் செயல்கள் புரியவில்லை
பற்றும் அற்றதோ உன் நினைவு?
உன் நினைவற்றிருக்காது என் வாழ்வு.

வற்றாத ஊற்றடீ அது
சிற்றோடை சலசலக்கும்
செவ்வாடை கமகமக்கும்
புத்தாடை பூண்டிருக்கும்
அத்தோடு நின்றிருக்காது

கானம் பாடும்
வானம் ஏறும்
தினம் தினம் பிறக்கும் என் வாழ்வு
கனம் கனம் சுவைக்கும்
தரம் தரம் கேட்கும் இவ்வரம்
கிடைக்குமோடீ என் கையில்?

விதைத்து விட்டாயடீ
வதைபடும் நெஞ்சம்
சதையோ உனது?
சுதை போலாக்கி விடாதே என்னை.

சுவை வேண்டுமடீ.. வாழ்வில்
எவை வேண்டும் சொல் உனக்கு?
ஊண் தரட்டுமா? உயிர் தரட்டுமா?
பயிர் செய்த நீ.. காதல்
பயிர் செய்த நீதானடீ நீரூற்ற வேண்டும்

வா.. வாழ்வோம் இவ்வுலகம் வியக்க.

No comments: