Pages

சகலமும் நீ.. அகிலமும் நீ - பழைய எழுத்து - கவிதை (18)

பால்நிலா பார்த்ததும்
பாவை நினைவு
இரவு களவு

சித்துவேலை செய்யும் உன்
சிலம்பொலி கேட்க வந்த என்னை
சிதறடித்து விடாதே

தேவன் தேடிவந்து
தீந்தமிழ்த் தேற்றுதல் சொன்னாலும்
திகட்டும் என தள்ளினேன்.

சிற்பி சிலகணம் தூங்கினாலும்
சிலை கண் விழியாது

காற்றைத் தேடச் சொல்லியும்
காணவில்லை என் களவுபட்ட நெஞ்சம் என்றேன்.. உண்மையா?

பூட்டி வைத்துப் பார்த்தேன் பலனில்லை
தட்டியபடியே இருந்தது

விடைதேடும் வாடல் நெஞ்சம்
உன் வாசல் வடம் பிடித்து நிற்க
நான் என்ன செய்ய இயலும்?

அது பொய் வேய்ந்தது என்பார் சிலர்
இது மெய்யா?

பொய்யொன்றிருக்க..
மெய்யொன்றிருக்கும்;
ஒப்புகிறேன்

உய்யும் உணர்வு சொல்வது பொய்யா?
பிறவும் பலவும் உலகம் சொல்லும்
அது மெய்யா?

இறைவனை பகைவனாக்கிக் கொண்டேன்
அடடா! இனியும் வகை தெரிய வரம் கேட்கலாகுமா?

பிறைநிலவாயினும்
முறைநிலவுதான்
முறையாகத்தானே வளரும்
தேவை.. பொறுமை

சிறைப்பட்ட நாளிலிருந்து
சிந்திக்கிறேன்
சற்றே விடுபட்டுப் பார்க்க

வானம்பாடி கானம் பாடினாலும்
வானம் வசப்படாது

காற்று காலம் முழுதும் தேடினாலும்
காவல் கிடையாது.

இரந்ததை
இறந்ததாக்கினால்?
பிறந்ததில் பயனொன்றும் இல்லை

பரந்ததில் நிரந்தரம் செய் உன்னை
பிறிதொரு வரம் வரும்
கரம் கோர்க்க

வள்ளுவனைக் கேட்டிருந்தாலும்
தெள்ளு தமிழில் இதைத்தான் சொல்லியிருப்பான்

தவறொன்றுமில்லை திருத்திக் கொள்ள
திருத்தம் கொள்க

ஆதவனாகிவிடு
ஆதியும் அந்தமுமாய் நீ
சகலமும் நீ
அகிலமும் நீ.

No comments: