Pages

விடியல் தேடும் எனக்கு விளக்கெதற்கு? - பழைய எழுத்து - கவிதை (16)

சில கவிதை உருமாறும்
சில கவிதை பரிமாறும்

என்னுள் என்ன?
உருமாற்றமா? பரிமாற்றமா?

புரியாத கவிதை புகழ் பாடுகிறேன் நான்.
புதிதாக ஆரம்பிக்கப் பட்டதா? இல்லை...?
முடியாமல் மொழியப்பட்டதா?

கவியழகின் கூறு சரி.
கவி மனதின் கரு?

வருநாட்கள் தருமா?
அதுவரை இது இருமா?

பலவாறு சிந்தித்தும் பயனில்லை
பலகூறு கேட்டும் கனிவில்லை.

என்ன இது?

சூரியன் நிலவாயிற்றா?
நினைவு கடலாயிற்றா?

அலைபாயும் நித்தம்
வலையிலும் சிக்காது வஞ்சம் செய்யும்
விளங்காது விளக்காது விடைதேடாது
அது எது?

ஓடும் நதியும்
பாடும் காற்றும்
நிலவும் நிலமும்
கேட்கும்.. ஏன் மெளனம்?

நிலவில் முகம் பார்க்க ஆசை
நதியை நாடி
நிலவைத் தேடி
முகம் பார்த்து
அகம் தேற்றி..

வானவில் தேடி வானத்தில் பாய்ந்ததில் பார்த்ததென்னவோ கருநிறம் தான்
கண் மூடினேன்.. தெரிந்ததென்னவோ அதேதான்.
அதனால்?

மாற்றமில்லை
ஒரு புதிய கூற்றுமில்லை

விடியல் தேடும் எனக்கு விளக்கெதற்கு?
அந்தி வரட்டும் சிந்திக்கலாம் அதைப்பற்றி

நான் விளக்கைப் பற்றிச் சொன்னேன்
விளக்கம் கேட்காதீர் விபரீதமாக.

No comments: