ஈழத்தில் எப்போதும் இருந்திராத அளவு போர் உச்சகட்டத்தை எதிர்நோக்கியிருக்கிறது. புலிகள் வெறும் 200 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். முல்லைத்தீவு அவர்களின் கடைசி கோட்டை. இதை விட்டுவிட்டால் அவர்களின் இயக்கம் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டதாகிவிடும். புலிகளை தோற்கடித்த பிறகு தமிழர்களின் நல்வாழ்வுக்கு வேண்டியவை செய்யப்படும் என்று மகிந்த ராஜபக்சே அறிவித்திருக்கிறார். ஆனால் இவர் ஒன்றும் புதிதாக சொல்லிவிட வில்லை. இலங்கையின் ஒவ்வொரு தலைமுறை அரசியல்வாதிகளும் பேசியதைத் தான் இவரும் பேசுகிறார். தமிழர்களுக்கான சுய உரிமையோ அல்லது அங்கீகாரமோ கிடைக்கப்போவதில்லை. தமிழர்களுக்கு அங்கீகாரம் கிடைக்குமாயின் பல வருடங்களுக்கு முன்னேயே கிடைத்திருக்க வேண்டும். விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு தோன்றியிருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. அங்கே தமிழர் மத்தியில் பல விடுதலை இயக்கங்கள் தோன்றியிருந்தாலும் புலிகள் மட்டுமே உறுதியாக போராடிக் கொண்டிருப்பது. அதற்குக் காரணம் அவர்கள் மற்ற இயக்கங்களை அழித்ததால் அல்ல; அவர்கள் கோரிக்கையில் உறுதியாய் இருப்பதால் தான்.
ஈழப்போரில் இந்தியாவின் பங்கு புதிதல்ல. புலிகள் இயக்கம் தோன்றிய காலங்களில் இருந்து ராஜீவ் கொலை வரை இந்தியா ஈழத்திற்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தது என்று எல்லாரும் அறிந்த ஒன்று. ஆனால் இந்திய அமைதிப்படை தமிழர் பகுதியில் அட்டகாசங்கள் செய்து புலிகளிடம் தோற்று திரும்பியதில் இருந்து ஆரம்பித்தது பிரச்சனை. இன்று ஈழத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் செய்திகள் இந்தியாவின் பாவக் கணக்கில், துரோக சரித்திரத்தில் நிச்சயம் இடம்பெறும். அங்கிருப்பவர்களைத் தமிழர்களாகக் பார்க்க வேண்டாம்; மனிதர்களாகக் கூட பார்க்க மறுக்கிறது இந்திய அரசு. இலங்கைப் போருக்கு தன்னாலான எல்லா உதவிகளையும் செய்து வருகிறது இந்திய அரசு. இன்னும் சொல்லப் போனால் இந்திய அரசின் ஆதரவு இருப்பதாலேயே இன்னும் வெறி பிடித்து போரிடுகிறது இலங்கை. ஒன்று மட்டும் நிச்சயம். நாளை இதற்கு எல்லாம் சேர்த்து இந்தியா விலை கொடுக்க வேண்டி இருக்கும்.
இலங்கையைப் பொறுத்தவரை இன்றைய தேதியில் அதற்கு சாதகமாக யார் உதவி செய்தாலும் ஏற்றுக்கொள்ளவே தயாராக இருக்கிறது. இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தான் மற்றும் 'எப்போதும் முதுகில் குத்தும் நண்பன்' சீனா என்று இலங்கைக்கு ஆதரவு நீட்டும் பட்டியல் நீள்கிறது. இவை எல்லாமே தன்னலமின்றி செய்யும் உதவி இல்லை. சீனா, பாகிஸ்தான் மற்றும் எல்லா நாடுகளுக்கும் இலங்கையின் மீது ஒரு தனி ஆர்வம் உண்டு. திரிகோணமலை எண்ணை கிடங்குகளில் ஆரம்பித்து அங்கே ராணுவத் தளம் அமைப்பது வரை அவரவருக்கு ஏற்ற ஆசை இல்லாமல் யாரும் இலங்கைக்கு உதவ மாட்டார்கள். அதே நேரம் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் உறவு கொள்வது இந்தியாவை ஒரு கட்டுக்குள் வைக்கும் என்ற கணக்கும் இலங்கை அரசுக்கு தெளிவாக உண்டு. நாளை ஒரு வேளை இலங்கை போரில் வெற்றி பெற்றால் என்னவாகும்? எல்லா நாடுகளும் அங்கே தன் பங்குக்கு என்ன வேண்டுமோ அதை கேட்கத்தான் போகிறது. அமெரிக்க ராணுவத்தளம் அங்கே அமைந்து விட்டால் தெற்காசிய பிராந்தியத்திற்கே ஒரு அச்சுறுத்தலாக அமையக்கூடும். சீனாவிற்கு எண்ணை வளங்கள் மற்றும் கடல்வழிப் போக்குவரத்தில் இலங்கை உதவ நேரிட்டால் அது இந்தியாவின் எண்ணைப் போக்குவரத்திற்கு நிச்சயம் இடையூறாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. பாகிஸ்தான் பற்றி கேட்கவே வேண்டாம்.
இன்றைய ஈழப்போரில் விடுதலைப் புலிகள் தோல்வி காண்பதற்கு அவர்களுடைய பலம் குன்றிவிட்டது என்பது காரணமில்லை. பத்து பேர் சேர்ந்து கூட்டத்தில் ஒருவனை அடித்தால் அவன் எவ்வளவு வலிமையானவனாயிருந்தாலும் தோல்வி காணவே வேண்டும். 25 வருட போராட்டத்தில் இலங்கை அரசு இந்த அளவு வெற்றி பெற்றதும் இல்லை; புலிகள் இந்த அளவு தோல்வியுற்றதுமில்லை. ஏன்? ஏனெனில், 2006 வரை புலிகளுடன் போரிட்டது இலங்கை அரசு மட்டுமே. இப்போது நடக்கும் ஈழப்போர் புலிகளுக்கும் பல வல்லரசுகளுக்கும் நடப்பது; பல குள்ள நரிகளுடன் நடப்பது. அதில் இந்தியா குள்ளநரியானது காலத்தின் அசிங்கம். மிகப்பெரிய பாரம்பரியமும், கலாச்சாரமும் உள்ள இந்தியா எப்போது முதுகில் குத்த பயின்று கொண்டது என்று தெரியவில்லை. தமிழர்களை காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த அடுத்த நொடி இந்திய தொழில்நுட்பம் இலங்கை ராணுவத்திற்கு உதவுகிறது. இந்த இரட்டை வேஷம் மிகக் கொடூரம்.
இன்றைய இந்திய/ தமிழக அரசியல் அப்படி இருக்கிறது. ஊழல் ஊறிப்போனவர்கள், துரோகத்தில் திளைத்தவர்கள் ஆண்டு கொண்டிருக்கிறார்கள். தமிழனுக்காக கலைஞரோ மற்ற அரசியல்வாதிகளோ போராடுகிறார்கள் என்று ஒருவன் நம்பினால் அவன் ஏமாளி. தமிழக அரசியல் களம் துர்நாற்றம் உள்ள ஒரு சாக்கடை. புழுத்திருந்தாலும் ஆதாயம் தேடும் பிணம் திண்ணிகள் நிறைந்தது. தமிழன் ஆதாயத்தில் ஓட்டு சேர்க்கும் பிசாசுகள். ஈழத்தில் கசியும் ரத்தத்தை அரசியலாக்கும் ரத்தக்காட்டேரிகள். இவர்களால் ஈழத்தில் ஒரு நண்மையும் ஏற்படப் போவதில்லை. போராட்டங்களும், மனிதச் சங்கிலிகளும், ராஜினாமா அறிக்கைகளும் வெறும் கண்துடைப்பு. அதற்கு சோ, ஜெயலலிதா போன்று பகிரங்கமாக புலிகளை எதிர்ப்பவர்கள் எவ்வளவோ மேல்.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தில் நடக்கும் போருக்கு வருந்தும் அல்லது ஆப்ரிக்காவில் நடைபெறும் இனப் போருக்கு வருந்தும், இந்தியா இங்கே என் கண்ணெதிரில் நடக்கும் கொலைகளுக்கு பயிற்சி அளிக்கிறது. அதைக் கேட்க ஒரு நாதியில்லை. உங்கள் பார்வையில் புலிகள் தீவிரவாதிகளாகவே இருக்கட்டும். ஆனால் அங்கே இருப்பவர்கள் மனிதர்கள். அவர்கள் தமிழ் பேசும் இனத்தவர் என்பதாலேயே அவர்களுடைய வாழ்வுரிமை பறிக்கப்படவேண்டாம். புலிகளுக்கு ஆதரவாக நான் பேச முனையவில்லை. அங்கே இருப்பவனுக்கும் வாழ உரிமை உண்டு என்பதாலேயே பேசுகிறேன். குத்துவதென்றால் நெஞ்சில் குத்துங்கள். ஏனெனில் ஈழத்தமிழன் வீரன். புறநானூற்றுத் தமிழச்சியை தமிழகத்தில் காண முடியாது. ஈழத்தின் சகோதரிகள்தாம் உண்மைத் தமிழச்சி.
என் அருமை ஈழத்து சகோதரர்களே, இந்தியாவையும் தமிழக அரசியல்வாதிகளையும் தயவு செய்து நம்பாதீர்கள். அவர்கள் உங்களை முதுகில் குத்துபவர்கள். நீங்கள் திறமைசாலிகள். உங்கள் வெற்றி உங்களால்தான் முடியும்.
1 comment:
Amazing!!
Post a Comment