Pages

‘பங்களாதேஷும் தமிழ் ஈழமும்'

இந்திரா பார்த்தசாரதி

(இந்த கட்டுரை உயிர்ம்மை இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டது. நேரடியாகப் படிக்க இங்கே சொடுக்குங்கள்: http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=935)


1971. பாகிஸ்தான் அதிபர், ராணுவத் தலைவர், மது-மங்கைப் பிரியர் யாயாகான், கிழக்குப் பாகிஸ்தான்(இப்பொழுதைய பங்களா தேஷ்) தேர்தல் முடிவுகளைப் புறக்கணித்து தேர்தலில் அமோக வெற்றி பெற்ற வங்கபந்து முஜிபுர் ரஹ்மானைச் சிறையில் அடைத்தார். இந்தியாவில் மேற்கு வங்காள மக்கள் கொதித்தெழுந்தனர். காரணம், அவர்களுக்கும் கிழக்குப் பாகிஸ்தான் மக்களுக்குமிடையே இருந்த மொழிப் பற்று.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே இருந்த மரபுப் பகையின் காரணமாக, இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி இதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். ரகசிய இந்திய ராணுவப் பயிற்சி பெற்ற கிழக்கு வங்காள விடுதலை வீரர்கள்(முக்தி போனி) அணி அணியாகச் சென்று கிழக்குப் பாகிஸ்தானில் கிளர்ச்சி செய்தனர். கண்மூடித்தனமான அடக்குமுறையைக் கையாண்டு விடுதலைப் போராட்டத்தை அடக்க முயன்றார் யாயாகான். கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து ஏராளமான அகதிகள் இந்தியாவுக்கு வரத் தொடங்கினர்.

இந்தியாவில் இப்பிரச்சினையைப் பற்றிய ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காக, அதிகாரபூர்வமாக அரசாங்கம் இதில் கலந்து கொள்ளாவிட்டாலும், அறிவு ஜீவிகளின் கூட்டம் ஆங்காங்கே நடப்பதற்குத் தூண்டு கோலாக இருந்தார் இந்திரா காந்தி. தில்லியில், சாப்ரு ஹௌஸில், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவராக இருந்துவிட்டு, சோவியத் யூனியன் நிர்ப்பந்தத்தில், இந்திரா காந்தி அமைச்சரவையில் பங்கு பெற்றிருந்த மோகன் குமாரமங்கலம் தலைமையில் ஒரு பெரிய கூட்டம் நடந்தது.மேற்கு வங்க எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், சிந்தனை வாதிகள் பலர், கிழக்குப் பாகிஸ்தான் ஏன் தனிநாடாக வேண்டுமென்று வற்புறுத்திப் பேசினார்கள். முக்கிய காரணம், மதத்தைக் காட்டிலும், மக்களை இணைக்கும், வலிமையான கலாசார அடையாளம் மொழிதான் என்பது அவர்கள் வாதம். பங்களா தேஷ் உருவான பிறகு, ‘உலக

வரலாற்றிலேயே மொழிப் போராட்டத்தின் காரணமாக விடுதலை பெற்ற ஒரே நாடு பங்களா தேஷ்தான்' என்று முஜிபுர் ரஹ்மான் கூறினார். (இந்தியாவுக்கும், பங்களா தேஷுக்கும் தனித் தனியான நாட்டுப் பண்கள் வழங்கிய வங்கமொழிக் கவிஞர் ரவீந்தரநாத் தாகூர்.)

‘இது பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சினை என்றாலும், ஏராளமான அகதிகள் இந்தியாவுக்கு வருவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது' என்றார் இந்திரா காந்தி. ‘கிழக்குப் பாகிஸ்தான் கிளர்ச்சிகளுக்கு இந்தியா உதவி செய்கின்றது' என்று சொல்லி இந்தியாவின் வடகிழக்குப் பகுதி எல்லை ஓரங்களில் படைகளைக் குவித்தார் யாயாகான். இந்திரா காந்தி எதிர்பார்த்ததும் இதுதான். கிழக்குப் பாகிஸ்தான் விடுதலைப் போர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே அதிகாரபூர்வமாகத் தொடங்கியது.

ஆங்கிலத்தில் கூறுவது போல், ‘the rest is history'

இப்பொழுது நடக்கும் சம்பவமொன்று முன்பு நடந்தவொன்றை நினைவூட்டுவது போலிருந்தால், அதற்கு ஆங்கிலத்தில் ‘ deja vu' என்பார்கள். இன்று இலங்கையில் நடப்பதும், ஒரு குறிப்பட்ட மொழியைத் தங்கள் கலாச்சார அடையாளமாகக் கொண்ட ஒரு சிறுபான்மை இனம், பறிக்கப்பட்ட உரிமைகளுக்காகப் பேரினத்துடன் போராடுகிறது. இலங்கைத் தமிழர்களையும், இந்தியத் தமிழர்களையும் இணைக்கும் கலாச்சாரப் பாலம், தமிழ் மொழி. ஒரு பஞ்சாபிய இந்திய ஹிந்துவும், பாகிஸ்தானிய பஞ்சாப் முஸ்லீமும் மொழியின் காரணமாகக் கலாசார ரீதியாக ஒன்றுபடுவது போல், ஒரு இந்திய பஞ்சாபியும், ஒரு இந்தியத் தமிழனும் ஒன்றுபடமுடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தியாவில் அரசியல் ஆதிக்கத்தையுடைய வட நாட்டு தேவநாகரிக மொழியினரினால், இந்தியத் தமிழருக்கும் இலங்கைத் தமிழருக்குமிடையே இருக்கக்கூடிய உணர்ச்சிபூர்வமான பிணைப்பைப் புரிந்து கொள்ள முடியாது.இல்லாவிட்டால், 1971இல், மேற்கு வங்கத்தினர் கூக்குரலுக்குச் செவிசாய்த்த இந்திய அரசாங்கம், இன்று ஏன் ராஜபக்ஷேக்கு ஆதரவாக வெளிப்படையாகவே இயங்குகிறது? குழந்தைகளுக்கு லாலிப்பாப் வழங்குவது போல், பிரதிபா பாட்டீல், இப்பிரச்சினையைப் பற்றிப் பாராளுமன்றத்தில் தம் உரையில் குறிப்பிட்டுவிட்டாரென்று, சில அரசியல் கட்சித் தலைவர்கள் ஆனந்தப்படுவது வேடிக்கையாக இருக்கிறது!

இரண்டாம் உலகப் போரின் போது, போலந்தை ஆக்கிரமித்த ஹிட்லர், யூதர்களைத் தனிமைப்படுத்த ஒரு தனி இடத்தில் அவர்களுடைய இருக்கைகளுக்கு ஏற்பாடு செய்தான்.இதற்கு ‘ghetto' என்று பெயர். இது, யூதர்களை ஆஷ்விட்ச் என்ற இடத்தில்

படுகொலை(Holocaust) செய்வதற்கு முன்னால் போலிஷ் மக்களிடமிருந்து அந்நியப்படுத்திய செய்கை. வன்னிப் பகுதியில் இலங்கைத் தமிழர் யாவரையும் ஒரு குறுகிய பகுதியில் அந்நியப்படுத்தி , அவர்கள் குடியிருப்புக்கு ஏற்பாடு செய்துவிட்டு, பிறகு, தந்திரமாக அவர்களுக்குச் சொந்தமான பெரும் பகுதிகளில் சிங்களவரைக் குடியேற்றத் திட்டமிட்டிருக்கிறார் இலங்கை அதிபர்.

லாலிப்பாப்புடன் நாம் திருப்தி அடையவேண்டியதுதானா, அல்லது எதிர்கொள்ள வேண்டிய வகையில் இதை எதிர்கொண்டு போராட வேண்டுமா என்பதுதான் இந்தியத் தமிழினம் தீர்மானிக்க வேண்டிய விஷயம்.

1 comment:

benza said...

[[[ படுகொலை(Holocaust) செய்வதற்கு முன்னால் போலிஷ் மக்களிடமிருந்து அந்நியப்படுத்திய செய்கை. வன்னிப் பகுதியில் இலங்கைத் தமிழர் யாவரையும் ஒரு குறுகிய பகுதியில் அந்நியப்படுத்தி , அவர்கள் குடியிருப்புக்கு ஏற்பாடு செய்துவிட்டு, பிறகு, தந்திரமாக அவர்களுக்குச் சொந்தமான பெரும் பகுதிகளில் சிங்களவரைக் குடியேற்றத் திட்டமிட்டிருக்கிறார் இலங்கை அதிபர். ]]]
Are you NOT misquoting History here?
Did Your Mahinda tell you about this settlement.
What authority or source do you have for this scheme?
Why are you wasting your time defending a mass murderer like Pirapakaran who killed all Tamil Leaders so that only he may rule the roost.
Don't you know this little History?
Or have you accepted money from the Tigers?