Pages

சென்னை சட்டக்கல்லூரி - தமிழன் வாழ்வில் இன்னுமொரு கரிநாள்

சென்னை சட்டக் கல்லூரியில் நடந்திருக்கும் சம்பவங்கள் நம் சமுதாயத்தை மீண்டும் ஒரு முறை தோலுரித்துக் காட்டியிருக்கிறது. சில மாணவர்களோடு சேர்த்து நீதி தேவதையும், கலைமகளும் கொலை செய்யப்பட்டிருப்பது நம் தமிழ்ச் சமுதாயத்தின் பெருத்த அவமானம். இது போன்று நடப்பது முதல் முறை இல்லை என்றாலும், நிகழும் பொழுது மிக விகாரமாகத்தான் தெரிகிறது. அவர்கள் நடத்திய வெறியாட்டத்தைப் பார்க்கும் போது அவர்கள் உண்மையாகவே மாணவர்கள்தானா என்ற கேள்வி எழுகிறது. அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த காவலர்கள் தமிழக காவல்துறையின் கையாலாகத்தனத்தையும், அரசியல் அழுக்குகளையும் காண்பிக்கிறது. அவர்கள் உண்மையிலே மாணவர்களாக இருந்தால், கலைமகளை களங்கப்படுத்திய குற்றம் இந்த தமிழ்ச் சமுதாயத்தைச் சேரும். சட்டக்கல்லூரி மாணவர்களின் இந்த வெறியாட்டம் தமிழக சட்டத்துறையின் லட்சணத்தையும், அதே சமயம் நாம் இனி சட்டத்தின் துணையை நாடினால் நியாயம் கிடைக்காது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

இந்த சம்பவத்தைப் பற்றி சட்டசபையில் விவாதிக்கும் போது முதலமைச்சர் உடல்நலம் குன்றியிருப்பதாகவும், அதனால் திரு. துரைமுருகன் பதில் கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. சென்னை காவல்துறை உயரதிகாரி மாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் குற்றம் நடக்கும் போது வேடிக்கை பார்க்கும் அவலத்தை அரங்கேற்றிவிட்ட பிறகு என்ன செய்தாலும் அது தீர்வாகாது. காவல்துறை இவ்வாறே இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஒரு சம்பவம் மட்டுமே நம் கண்களுக்கு புலப்பட்டிருக்கிறது என்பது வருந்தத்தக்க உண்மை.

அதேவேளை, இந்த கலவரம் நடந்த நேரத்தை சற்றே உற்றுப் பார்த்தால் இது ஒரு வேளை அரசின் வேலையாகவே இருக்குமோ என்ற எண்ணம் தோன்றத்தான் செய்கிறது. இலங்கையில் தமிழர் பிரச்சனை உச்ச கட்டத்தை அடையும் வேளையில், திரு. கருணாநிதி அவர்களின் சாமர்த்தியமான ஏமாற்று வேலை சில நாட்கள் முன்பு அம்பலமானது. அவர் தமிழர் போர்வையில் இத்தனை காலம் அரசியல் நடத்திவிட்டு தமிழனுக்கு பச்சைத் துரோகம் செய்யத் துணிந்து விட்டார் என்பது தெரிகிறது. தமிழகம் ஈழப் பிரச்சனையில் கொதித்துக் கொண்டிருக்கையில் புதிதாய் ஒன்றைக் கிளப்பி திசை திருப்ப முயற்சி மேற்கொள்ளப்படுகிறதோ என்று தோன்றுகிறது. எது எப்படியாயினும் தமிழன் விழித்துக் கொள்ள வேண்டும்.

கடவுள் என்ற ஒன்று இருந்தால் அதைக் கேட்க விரும்புகிறேன்:

கலைமகளுக்கும், நீதி தேவதைக்கும் பாதுகாப்பும் நீதியும் இல்லை என்றால் நீ எதற்கு?

தமிழன் வாழ்வில் இன்னுமொரு கரிநாள். வெட்கித் தலைகுனிகிறேன்.

புதுச்சுவை - கவிதை (22)

சாமியாரின் மரச்செருப்பு பூசையில. வயசான
மாமியார் வீட்டு மூலையில.

*****************************

வெள்ளை நூல் அது புனிதம்
கொள்ளை போனது மனிதம்.

****************************

சாமிகளுக்கெல்லாம் பாலில் குளியல்
பூமியில் பட்டினிச் சாவுக் குவியல்.

****************************

கங்கை நதி தேசிய மயமாக்கம்
அரசியல் பாவங்கள் கரைக்கப்பட.

****************************

பாரதத்தில் ஏற்றமாம் பாஞ்சாலிக்கு.
பாரதத்தில் அது ஏனோ குற்றமாம்.

****************************

வெட்டியான வீட்டுக்குள்ள விடாதேன்னு சொன்னவரு
வெட்டியான் வீட்டுக்குள்ள வசமா மாட்டிகிட்டவரு.

****************************

கனி தரும் காலம்.. - பழைய எழுத்து - கவிதை (21)

எத்திணையும் அறியா சிந்தனைகள் எத்துனை?
சிந்தனை என்ன என் இணையா?
இல்லை நான் என்ன சிந்தனையின் பிணையா?
இத்துனைக்கும் யார் யார் துணை?

சித்திரை வந்தாலும் குளிர்கிறது?
நினைவுகளுக்கு நித்திரை கிடையாதா?
இல்லை நித்திரைக்கு நினைவில்லியா?
எனக்கு வரவில்லை?

விழித்திரையில் விதித்த கட்டுப்படுகளுக்கெல்லாம்
விதிவிலக்களித்து உள்ளே நுழைந்தவள் நீதானே?
விளக்கம் அளிக்காமல்
விளக்கணைத்து விட்டாய்.. யாரென்றறிவேன்?

என் சிந்தனையை சிறை தள்ளி
என்ன சாதிக்கப் போகிறாய்?

இனி வரும் காலம் கனி தருமா? அல்ல..
கனி தரும் காலம் இனி வருமா?

காலம் தரும் என நம்புகிறேன்
என் சுய நினைவுகளை.. சிந்தனைகளை.

வா வாழ்வோம் - பழைய எழுத்து - கவிதை (20)

பூக்கள் கொல்லுமோடீ வண்டுகளை?
பின் ஏனடி என்னை கொல்கிறாய்?

தென்றலைத் துரத்துமோடீ கடலலைகள்?
பின் ஏனடி என்னைத் துரத்துகிறாய்?

கடலலைகள் பாடம் கற்பிக்கும் கரைக்கு
நீ கூட அப்படித்தானோ?

பூவோடு வாசம் போல் வேண்டாம்
தென்றலோடு சுகம் போல் வேண்டாம்

கடலலைகளுக்கும் கரைக்கும் உள்ளது போல்
போதும் எனக்கு உன் உறவு.

நில்லாது நீ எனை நினைத்தால் போதும்
கரைந்தாலும் பரவாயில்லை.. கரைபோலிருப்பேன்.

கடலலைதான் நீ!
கரை நான்!
ஒவ்வொரு முறை என் நெஞ்சைத் தொடும் போதும்
கரைகின்றேன்
உன்னுள் தான்
ஆயினும் நிரந்தரமில்லை

காய்ந்து கிடக்கும் மணலாக்கிவிடாதே என்னை
உன் ஈரம் வேண்டும் எனக்குள்
அது ஆற்றும் என் காயங்களை

நீ ஆற்றும் செயல்கள் புரியவில்லை
பற்றும் அற்றதோ உன் நினைவு?
உன் நினைவற்றிருக்காது என் வாழ்வு.

வற்றாத ஊற்றடீ அது
சிற்றோடை சலசலக்கும்
செவ்வாடை கமகமக்கும்
புத்தாடை பூண்டிருக்கும்
அத்தோடு நின்றிருக்காது

கானம் பாடும்
வானம் ஏறும்
தினம் தினம் பிறக்கும் என் வாழ்வு
கனம் கனம் சுவைக்கும்
தரம் தரம் கேட்கும் இவ்வரம்
கிடைக்குமோடீ என் கையில்?

விதைத்து விட்டாயடீ
வதைபடும் நெஞ்சம்
சதையோ உனது?
சுதை போலாக்கி விடாதே என்னை.

சுவை வேண்டுமடீ.. வாழ்வில்
எவை வேண்டும் சொல் உனக்கு?
ஊண் தரட்டுமா? உயிர் தரட்டுமா?
பயிர் செய்த நீ.. காதல்
பயிர் செய்த நீதானடீ நீரூற்ற வேண்டும்

வா.. வாழ்வோம் இவ்வுலகம் வியக்க.

காதல் ஸ்நேகிதத்திற்கு.. - பழைய எழுத்து - கவிதை (19)

காதல் ஸ்நேகிதத்திற்கு,
நிறங்கள் நிஜமானது என்றே நம்புகிறேன்
நிஜங்கள் நிறம் மாறாது எனவும் நம்புகிறேன்.

என் தடம் தேடும் கண்களுக்கு
என் மனதில் ஓர் இடம் உண்டு என்றும்.

நீ அருகில் இருந்தும்
நின் அருகாமை இல்லாதது கடினம் தான்.

நீ எனை நினைக்கையில்..
நினை உணர்கிறேன்.
கனமும், எனை நீயும் உணர்வாய் என
என் நினைவு சொல்லும்.

இந்த இன்பத் திளைப்பு என்றென்றும் வேண்டும் எனக்கு
பொழுது புலர்கையில்
தூங்கி விழித்ததும் துணை தேடுகிறேன்
துயில் பாடவும் உனையே தேடுகிறேன்

பொழுது போகாதிருக்கையில்
உன் பொய்க்கோபம் தேடுகிறேன்

பொழுது சாய்கையில்
என் தூக்கம் தொலைத்தாலும்
நின் புன்சிரிப்பையே தேடுகிறேன்

புருவம் உயர்த்திப் பார்த்தாலும்
புதிர் பதில் சொல்லாது
அது போலவே நீயும்.

சகலமும் நீ.. அகிலமும் நீ - பழைய எழுத்து - கவிதை (18)

பால்நிலா பார்த்ததும்
பாவை நினைவு
இரவு களவு

சித்துவேலை செய்யும் உன்
சிலம்பொலி கேட்க வந்த என்னை
சிதறடித்து விடாதே

தேவன் தேடிவந்து
தீந்தமிழ்த் தேற்றுதல் சொன்னாலும்
திகட்டும் என தள்ளினேன்.

சிற்பி சிலகணம் தூங்கினாலும்
சிலை கண் விழியாது

காற்றைத் தேடச் சொல்லியும்
காணவில்லை என் களவுபட்ட நெஞ்சம் என்றேன்.. உண்மையா?

பூட்டி வைத்துப் பார்த்தேன் பலனில்லை
தட்டியபடியே இருந்தது

விடைதேடும் வாடல் நெஞ்சம்
உன் வாசல் வடம் பிடித்து நிற்க
நான் என்ன செய்ய இயலும்?

அது பொய் வேய்ந்தது என்பார் சிலர்
இது மெய்யா?

பொய்யொன்றிருக்க..
மெய்யொன்றிருக்கும்;
ஒப்புகிறேன்

உய்யும் உணர்வு சொல்வது பொய்யா?
பிறவும் பலவும் உலகம் சொல்லும்
அது மெய்யா?

இறைவனை பகைவனாக்கிக் கொண்டேன்
அடடா! இனியும் வகை தெரிய வரம் கேட்கலாகுமா?

பிறைநிலவாயினும்
முறைநிலவுதான்
முறையாகத்தானே வளரும்
தேவை.. பொறுமை

சிறைப்பட்ட நாளிலிருந்து
சிந்திக்கிறேன்
சற்றே விடுபட்டுப் பார்க்க

வானம்பாடி கானம் பாடினாலும்
வானம் வசப்படாது

காற்று காலம் முழுதும் தேடினாலும்
காவல் கிடையாது.

இரந்ததை
இறந்ததாக்கினால்?
பிறந்ததில் பயனொன்றும் இல்லை

பரந்ததில் நிரந்தரம் செய் உன்னை
பிறிதொரு வரம் வரும்
கரம் கோர்க்க

வள்ளுவனைக் கேட்டிருந்தாலும்
தெள்ளு தமிழில் இதைத்தான் சொல்லியிருப்பான்

தவறொன்றுமில்லை திருத்திக் கொள்ள
திருத்தம் கொள்க

ஆதவனாகிவிடு
ஆதியும் அந்தமுமாய் நீ
சகலமும் நீ
அகிலமும் நீ.

பெருமை வர பொறுக்கலாம் - பழைய எழுத்து - கவிதை (17)

கனவு கண்டேனடி
உன் நினைவு கொண்டேனடி

இரவு நித்தம்
நிலவு முத்தம்
உனை வேவு பார்க்க வந்ததா?
ஏதும் தந்ததா?

கானம் பாடும் காற்றும்
காதில் சொல்லும் சேதி

சிந்திக்க மறந்த என்
சிதைபட்ட நெஞ்சைக் கேட்டேன்
பதைபதைப்போடு
பூவும் பூவிற்குச் சிறகு முளைத்துப் பயன் தான் என்ன?

வெறுமை நெஞ்சம்
எறும்பையும் திண்ணும்

சிறுமை தேடி சிறகொடிவதை விட
பெருமை வர பொறுக்கலாம்

பெறுகையில் திண்ணம் நீ இருப்பாய்
பருகுகையில் பகிரலாம்
பாசத்தோடு
நேசத்தோடு.

விடியல் தேடும் எனக்கு விளக்கெதற்கு? - பழைய எழுத்து - கவிதை (16)

சில கவிதை உருமாறும்
சில கவிதை பரிமாறும்

என்னுள் என்ன?
உருமாற்றமா? பரிமாற்றமா?

புரியாத கவிதை புகழ் பாடுகிறேன் நான்.
புதிதாக ஆரம்பிக்கப் பட்டதா? இல்லை...?
முடியாமல் மொழியப்பட்டதா?

கவியழகின் கூறு சரி.
கவி மனதின் கரு?

வருநாட்கள் தருமா?
அதுவரை இது இருமா?

பலவாறு சிந்தித்தும் பயனில்லை
பலகூறு கேட்டும் கனிவில்லை.

என்ன இது?

சூரியன் நிலவாயிற்றா?
நினைவு கடலாயிற்றா?

அலைபாயும் நித்தம்
வலையிலும் சிக்காது வஞ்சம் செய்யும்
விளங்காது விளக்காது விடைதேடாது
அது எது?

ஓடும் நதியும்
பாடும் காற்றும்
நிலவும் நிலமும்
கேட்கும்.. ஏன் மெளனம்?

நிலவில் முகம் பார்க்க ஆசை
நதியை நாடி
நிலவைத் தேடி
முகம் பார்த்து
அகம் தேற்றி..

வானவில் தேடி வானத்தில் பாய்ந்ததில் பார்த்ததென்னவோ கருநிறம் தான்
கண் மூடினேன்.. தெரிந்ததென்னவோ அதேதான்.
அதனால்?

மாற்றமில்லை
ஒரு புதிய கூற்றுமில்லை

விடியல் தேடும் எனக்கு விளக்கெதற்கு?
அந்தி வரட்டும் சிந்திக்கலாம் அதைப்பற்றி

நான் விளக்கைப் பற்றிச் சொன்னேன்
விளக்கம் கேட்காதீர் விபரீதமாக.

சவமாயினும் சாகாதிருப்போம் - பழைய எழுத்து - கவிதை (15)

எரித்திடும் சூரியனும் எனைப் பார்த்து
சிரித்திடும் போது யார் என்ன செய்ய முடியும் என்னை?

சித்திரச் சிறகுகள்
சித்திரைப் பூக்கள்
பத்திரப் படுத்தினும் பயன் தாரா

வாடிடும் பூக்கள்
தேடிடும் போது வண்டுகள் வாரா

சூடிடும் போது
சுவைத்திட வேண்டும்..
சிறை வைத்திட்டால்.. சரிப்படாது.

அத்து மீறி நுழைந்து என் அறிவை அகழ்ந்தவள் நீ..
பத்து மாதம் சுமந்தவளையும் மறக்கச் செய்யும் அளவிற்கு உன்னிடம் என்ன?

சிந்தனைத் தீற்றல்கள் என்னுள் தூரிடும் போது
சிறை பட்ட வானவில் நீ.

எண்ணக் கீற்றுக்கள்.. உன் எண்ணக் கீற்றுக்கள் வேயப்பட்ட வீட்டில் வாழும் நான்..
திண்ணைக் காற்றாய் உன் வரவைப் பார்த்து..

சின்னக் கனவுகள் என்னுள் சிரித்திடும் போது
வண்ணக் கோலங்கள் போடும் புதிய வரவுகள்

ஒவ்வாது ஒன்று இருப்பினும்
ஒப்புக் கொள்வேன் உன்னிடம்

பொய்யே ஆயினும்
புகழ் பெறுவேன் உன்னிடம்

மருந்தினும் இனிய
உன் கோபம் தனிய
சாபம் தருவாய்.. காலம் முழுதும் என் காலடியில் நீ என.

பாவம் பார்த்திட்டு
பழி தீராமல்
பழியாய்க் கிடப்பேன் உன் காலடியில்

சாத்திரம் பேசும்
ஆத்திரம் கொள்ளும்
தரித்திரம் எனத் திட்டும் சமூகம்

சரித்திரம் எழுத நாம்
எண்ணித் துணிந்திட்ட பின்
யாரால் என்ன செய்ய இயலும்?
சவமாயினும் சாகாதிருப்போம்.