நீ வந்ததில்
உலரும் நீலப் புடவை கொடியில்
நீ கண்ணாடியில் ஒட்டிய பொட்டு, முகம் பார்க்கையில் என் நெற்றியில்
தேர்ந்தெடுக்கப்பட்ட வாசனை திரவியம் என் நாசியில்
என் செருப்புக்குப் பக்கத்தில் உன் காலணி
அடுக்கி வைக்கப்பட்ட அலமாரி
பளிச்சென சிரிக்கும் கடவுளர்
மேசையில் கலைந்து கிடக்கும் என் காகிதங்களுக்கிடையில் சில அழகுக் குறிப்புகள்
வெட்கத்தோடு மறைந்தும் மறையாமலும் இருக்கும் உன் உள்ளாடைகள்
பாதியான என் மெத்தை; ஒளி நிறைந்த என் படுக்கையறை
என் வீட்டிற்குப் பெண்மை வந்தது
என் வீடு அழகானது
நீ வந்ததில்.
ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?
அருமையான கட்டுரை. எழுத்தாளர் ஜெமோவின் வலைத்தளத்தில் படித்தது.
//
தஞ்சாவூர் பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த வேளையில் நான் படித்த ஒரு கட்டுரை http://koodal.com/article/tamil/ilakkiyam.asp?id=864&title=astonishing-era-and-few-questions-on-emperor-raja-raja-chozhan பற்றி உண்மையை தெரிந்து கொள்ள ஆவல் கொண்டேன்… இது போன்ற கட்டுரைகள் அனைத்தும் முற்றிலும் உண்மையாக இருக்க முடியாது / பொய்யாகவும் இருக்க முடியாது என்பதால் , இதை பற்றி உண்மையை தங்கள் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும் என நெனைக்கிறேன்.
முழுக்கட்டுரையில் இருந்து எனக்கு நெருடலை ஏற்ப்படுத்தய அந்த வரிகளை மற்றும் கீழே இணைத்துள்ளேன்… தங்கள் கருத்துக்காக காத்திருக்கிறேன்…
சரி… இப்படி சோழர் காலத்து அரண்மனைகள்… வழிபாட்டுத்தலங்கள்… சிற்பங்கள்… ஓவியங்கள்… அவர்களது வீர தீர பராக்கிரமங்கள் எல்லாம் அற்புதம்தான். ஆனால் மக்கள் எப்படி இருந்தார்கள் அவர்கள் காலத்தில்? அதுதானே முக்கியம்?
//
முழுமையான கட்டுரைகளை படிக்க:
ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா? - பாகம்1
ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா? - பாகம் 2
நன்றி: ஜெயமோகன்.இன்
நான்
மழைக்கு இடமில்லை
மழைபோல்
விழுந்தேன்
விழுந்தவன்
எழுந்தேன்
எல்லாம்
என்னுடையதாயிற்று
உறவு
பகை
ஒன்றே மற்றொன்றாக
மாறி மாறி
இறையுண்டு என்றேன்
பின்
இறையில்லை என்றேன்
கரை தேடுவதாய்
ஒரு கதை
பின் கதை
தேடிக் கரையில்
அதுவும் நானே.
புரியாதது சில
புரிந்தது போலும் பல.
இவையில் நானெங்கே?
தேடுவதும் நானே.
'சா'தக(ன)ம் - சிறுகதை முயற்சி
தொலைபேசி மீண்டும் அதே பாடலை ஒலித்தது. அதற்கு சலிப்பேதும் இல்லை. மீண்டும் என் அம்மாதான் அழைத்தாள். இம்முறை அழுகை இல்லை. ஓய்ந்த மழைக்குப் பிறகு இலைகளிலிருந்து ஒழுகும் துளிகளின் சத்தம் போல விசும்பல் மட்டும் தெரிந்தது. தொலைபேசியாய் இருந்தாலும் அடுத்த முனையில் பேசுபவர் என்ன செய்கிறார் என்று ஊகிக்கும் திறம் அநேகமாய் அடுத்த தலைமுறையின் மரபணுவில் எழுதப்பட்டுவிடும். தெரிந்தும் தெரியாதவன் போலிருந்தேன் நான். என்னிடம் பதிலேதும் இல்லை. பத்து நிமிட இடைவெளியில் என் வாழ்வைத் தீர்மானிக்கும் விளையாட்டை விளையாட நான் தயாரில்லை. ஆனால் என் தாயார் தயார். அவளுக்கென்ன, அது என் வாழ்க்கை.
அவளுக்கு ஒரே விடைதான் தேவை. விநோதமான பரீட்சை அது. வினாவோடு விடையும் சேர்ந்தே அளிக்கப்படும். அதே விடையை மீண்டுமொருமுறை ஒப்பித்தால் போதும். மிக எளிது; ஆனால் மிகக் கடிது. நீங்களாக ஒரு விடையைத் தெரிவு செய்ய உங்களுக்கு உரிமை இல்லை. பிறப்புரிமை பிறப்பளித்தவளிடம் மட்டும் செல்லாது. இந்திய சட்டத்தில் இதற்கான குறிப்பேதும் இல்லை; ஆனால் அது உண்மை. என்னால் அவள் எதிர்பார்க்கும் விடையை சொல்ல முடியாது என்று அறிந்திருந்தேன். ஆனால் அதை அவளிடம் சொல்ல வார்த்தைகள் வரவில்லை. இப்படி என் அவயங்கள் அவ்வப்போது செயல்படாமல் போவதற்கு மிகுந்த பயிற்சி அடைந்திருந்தது. என் மூளை உட்பட. நான் செலுத்திய அம்பு இன்று என்னிடமே திரும்புகிறது. சிறுவயதில் நான் பயன்படுத்திய அதே ஆயுதம். அழுது சாதித்தவன் நான். இன்று அவள் சொல்வதுதான் சரி என்று சாதித்து அழுகிறாள். பாலனாக இருந்தபோது பால பாடம் கற்றுக் கொடுத்துவிட்டேன்.
அவளை நான் சமாதானம் செய்ய முற்படவில்லை. அது முடியாது என்று நன்கு அறிவேன். அமைதியாகவே இருந்தேன். அந்த அமைதி என் சார்பில் வார்த்தைகளை இட்டு நிரப்பும் என்று காத்திருந்தேன். மீண்டும் அவளே பேசினாள். நாளை மறுபடியும் அழைப்பதாகக் கூறி தொலைபேசியைத் துண்டித்தாள். என் சிந்தனை துண்டிக்கப்படாமல் தொடர்ந்தது.
இதுவரை இப்படிப்பட்ட குழப்பத்தில் இருந்ததாக நினைவில் இல்லை. எல்லா இடையூறுகளையும் இடையில் இருக்கும் கண்ணாடியைப் போலவே பார்த்திருக்கிறேன். மறுபக்கம் தெரிந்துகொண்டே இருக்கும். எளிதில் முடிவுகளை எடுத்து விடுவேன். தெளிந்த அறிவோடு அணுகும் முறை எனது. பலமுறை என் நண்பர்கள் கூட என்னிடம் ஆலோசனை கேட்டுச் செல்வார்கள். ஆனால் இன்று என் மனதில் ஒரு குழப்பம். என் முடிவுகளை பிரேத பரிசோதனை செய்ய நேரிடுமோ என்ற அச்சம் உதிக்கும் போல் இருந்தது. ச்சி...சீ.. அதெல்லாம் இருக்காது. மறுபரிசீலனை, அவ்வளவுதான். அதற்குள் நான் ஏன் என் முடிவுகள் காலாவதியானதாக சிந்திக்க வேண்டும்? மறுபரிசீலனையா? அப்போது முடிவுகளின் முடிவுகள் மாறுமா? பதற்றத்தில் என் சுயத்தையே மெதுவாக இழந்து கொண்டியருப்பதாகத் தோன்றுகிறது.
என் மனம் அமைதியைத் தேடி கதறுகிறது. சட்டென்று ஒரு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுவிட்டது. என் ஞாபக அறைகளை வேகமாக திறந்து திறந்து மூடுகிறது. பேய்க்காற்றில் அடிபடும் ஜன்னல்களின் சத்தம் போல என் மனதில் ஒரே இரைச்சல். கதறும் மனதிற்கு அதைப்பற்றி கவலை இல்லை. பசியில் அழும் குழந்தைக்குப் பால் கொடுப்பதற்குள் அழுது தீர்த்து விடும். பொறுமை இருக்காது. அது போலவே என் மனதும். இந்த நொடி நடந்தாக வேண்டும். மனதின் கதறல் அதிகமாகி இரைச்சல் மூளையின் காதுக்கு எட்டியது. பல சமயங்களில் இந்த மூளை-மனது சண்டையைப் புரிந்து கொள்ளவே முடியாது. இடம் பொருள் ஏவல் தெரியாமல் சண்டை போட்டுக்கொளும் குழந்தைகளைப் போண்றது. சில வருடங்களுக்கு முன்பு வரை நான் மனதின் அடிமையாய் இருந்தேன். சமீமத்தில் என் மூளையின் கட்டளைகளுக்குக் கீழ்ப் படிய ஆரம்பித்திருக்கிறேன். ஆனால் இப்போதும் அவசர காலங்களில் தானியங்கி மனம் மட்டுமே. இதில் கவனிக்கப்பட வேண்டியது ஒன்று இருக்கிறது. ஏதாவது ஒன்றிற்கு அடிமையாய் இருப்பதே அது. சரியென்றும் தவறென்றும் சொல்லத் தெரியவில்லை. அடிமை சொன்னால் அது உண்மையாக இருக்கவும் வாய்ப்பில்லை.
என் மூளை அவசரமாக சிந்தித்து ஒரு அறையைத் திறந்து விட்டது. என் ஜன்னலில் வீசிய அதே குளிர் காற்று என் மனதிற்குள். என் நாசிகள் அனுமதிக்காத அதே குளிர்மை. அதுவும் சந்தன வாசத்தோடு. அது அவளை சந்தித்த முதல் நாளின் நினைவு. இது முதலில் வந்த 'அவள்' அல்ல. இது என் 'அவள்', என்னவள். என் தாயவளின் வார்த்தைகள் சுட்ட புண்களுக்கு மருந்தாய் அந்த சந்தனக்க்காற்று வீசும் போதே ஏனோ சட்டென தொடர்பு துண்டிக்கப்பட்டது. கதவு அடைக்கப்பட்டது. இதுதான் மூளையின் பிரச்சனை. வந்த வேலையைச் செய்துவிட்டு விலகாமல் அது தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தது.
பிடிக்கவில்லை. சரிதான். 'அவள்'தான் பிரச்சனை. அவள்தான் என் தாயவளுக்கு பிரச்சனை. அவளை விட்டுவிடச்சொல்லி அவள் கோருவது தான் அது. எதற்காக? .... எல்லாம் ஒரு சாவுக்காகத்தான். 'சா'வுக்கா? ஆமாம். அவள் வேறு 'சா'தி. அத்தோடு நில்லாமல் 'சா'தகம் (ஜாதகம்) வேறு சாதகமில்லை. அதனால் என் தாயவள் என்னவள் நினைவிற்கு சாவு மணி அடிக்கிறாள். அது சாக்காடு போலிருக்காதே. கொலை போலிருக்குமே. 'சா'வோடு, 'சா'வாக இருப்பதால், அதற்குச் சாவு ஒன்றே நன்று என்று என் தாய் நம்பியிருந்தாள் போலும். அவள் அதைச் சொன்னபோது, என் காதில் கொலை என்றே விழுந்தது; இப்போது எதைக் கொலை செய்வது என்ற சிந்தனையுடன் என்னுள் எண்ணிப்பார்க்கும் பொழுது மனதும் மூளையும் ஒன்றை ஒன்று கொலை செய்யத் தயாராவதைக் காண்கிறேன். எது வெல்லும் என்ற சிந்தனையில் கூட இரு பக்கம் இருப்பதைக் கண்டு நான் மெதுவாக இறந்து கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். என்னை நானே தகனம் செய்துவிட்டேன். நான் இப்போது எரிந்து கொண்டிருக்கிறேன்.
தேடாத ஞானம் (சிறுகதை முயற்சி)
"இன்னும் கொஞ்ச நேரம் தாத்தா... வேணுன்னா நீயே வந்து தூக்கேன்..." என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டான் ரமேஷ்.
"நான் குளிச்சு ஜபமெல்லாம் ஆச்சு. இப்போ உன்ன எப்டி தூக்கறது. அதோட உங்க அப்பன் வந்தான்னா நீ தொலஞ்சே... சீக்கிரமா எழுந்து பல் தேச்சு குளிச்சுட்டு கிளம்பிடு... இல்லேன்னா அவன் வந்தா ருத்ர தாண்டவமாடுவான்... நம்மளால ஆகாதுப்பா..."
கணேசய்யர் ஒரு ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். உள்ளூரில் டுட்டோரியல் காலேஜ் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார். அதோடு, ஒரு நர்சரி பள்ளியும் உண்டு. குழந்தைகள் மேல் அவ்வளவு பிரியம் அவருக்கு. இரண்டு பிள்ளைகள். மூத்தவன் ராமநாதன். ராமநாதன் சிங்கப்பூரில் ஒரு நல்ல வேலையில் இருக்கிறான். ராமநாதனுக்கு ஒரே மகன் ரமேஷ். கணேசய்யரின் இரண்டாவது மகன் வைத்தியநாதன். ஊரிலேயே ஒரு விளம்பர ஏஜன்ஸியும், இன்டர்நெட் பிரவுசிங் சென்டரும் வைத்திருக்கிறான். வைத்திக்கு மணமாகி இரண்டு குழந்தைகள். குழந்தைகள் இருவரும் சென்னையில் இருக்கிறார்கள். அவர்கள் சென்னையில் இருப்பதற்குக் காரணம், டான் பாஸ்கோ பள்ளிக்கூடத்தில்தான் படிக்கவேண்டும் என்பது மருமகளின் ஆசை. கணேசய்யர் "இங்க நானே பள்ளிக்கூடம் வச்சு நடத்தறேன். என் பேரப்பசங்களுக்கு இடம் கிடையாதா? அதோட சென்னையில் ஒன்றும் இங்கே இருப்பதை விட மேலான படிப்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. என்னமோ அவங்க ஆசை. மருமகள் சொல்லும் போது நம்ம என்ன சொல்றது...?" என்று வருத்தப்படுவார்.
ரமேஷைப் பார்க்கும் போது அவருக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கும். தவமிருந்து கிடைத்த பேரப்பிள்ளையாயிற்றே. தவமிருந்து பெற்ற பிள்ளை என்று பலபேர் சொல்லக் கேட்டதுண்டு. ஆனால் இவருக்கு ரமேஷைப் பொறுத்தவரை தவமிருந்து கிடைத்த பேரப்பிள்ளை. ராமநாதன் ஒரு கட்டத்தில் சாமியாராகவே போயிருப்பான். அவனை வழிக்குக் கொண்டு வந்து எல்லாரையும் போல குடும்ப வாழ்க்கையில் திருப்பிவிட கணேசய்யர் பிரம்மப் பிரயத்தனம் பட்டிருக்கிறார். சாமியார் சமாச்சாரங்களில் ராமநாதன் மீது வருத்தமிருந்தாலும், அவனைப்பற்றி நல்ல அபிப்ராயமே கொண்டிருந்தார். நன்றாகப் படிப்பான். பாடுவான். ரொம்ப புத்திசாலி. ராமநாதனைப் பற்றி இப்போதும் வருத்தப்படுவார். ஆனால் முன்பு அவன் இருந்ததற்கு இப்போது எவ்வளவோ பரவாயில்லை.
அவன் அப்போது அமெரிக்காவில் பிஹெச்டி படித்துக் கொண்டிருந்தான். வருடம் ஒருமுறை வீட்டிற்கு வருவான். வரும்போதெல்லாம் அவனுடைய நடவடிக்கை கணேசய்யருக்கு வருத்தமளிக்கக் கூடியதாகவே இருந்தது. மிகப் பிரமாதமாகப் படித்து வந்தாலும், எல்லாரையும் போல அவன் இல்லை. எப்பொழுதும் புத்தகங்கள் படித்துக் கொண்டிருப்பான். உலக விவரங்கள், வியாபாரம், அரசியல் பற்றியும் அறிவு உண்டு. வேதம் படிப்பான். வேதாந்தம் பேசுவான். அதே சமயம் சம்பிரதாயங்களை மறுப்பான். திருமணம், குடும்ப வாழ்க்கை வீண் என்று வாதம் செய்வான். கணேசய்யருக்கு மிகவும் கவலையாக இருக்கும். ஆனால் ஒன்றும் சொல்ல மாட்டார். கொஞ்சநாளில் அவனாகவே சரியாகிவிடுவான் என்ற நம்பிக்கை இருந்தது அவருக்கு. அதோடு வாழ்க்கையில் மிகுந்த அனுபவம் கொண்டவர்களுக்கு நிச்சயம் பரிச்சயமானது 'மாற்றம்'. அவர் மாற்றங்கள் மீது மாறாத நம்பிக்கை கொண்டிருந்தார். எல்லாமும் ஒரு சுழற்சி தான். பல சமயங்களில் நாம் பயணித்த அதே இடங்களுக்கு மீண்டும் வருகையில் ஞாபகம் இருப்பதில்லை. சில சமயங்களில் மாறிவிட்டது நினைவுக்கு வரும்; நினைவுக்கு வந்தவுடன் ஒரு குற்ற உணர்ச்சி வந்து குடி கொள்ளும். அது தேவையில்லை என்றும் நினைப்பவர் கணேசய்யர்.
பிஹெச்டி நான்காம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் போது ராமநாதன் இந்தியாவுக்கு ஓடிவந்துவிட்டதாகச் செய்தி வந்தது. கணேசய்யருக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் நம்பிக்கை என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. அவன் கல்கத்தா சென்றிருப்பதாகவும் ராமகிருஷ்ண மடத்தில் சேரப் போவதாகவும் செய்தி வந்தது. அவருக்கு அழுவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை. ஒரு பிராமணனாய், தன்னுடைய மகன் வேதம் பயின்றதும், வேதாந்தம் அறிந்ததும் அவருக்கு ரகசியமான மகிழ்ச்சியைத்தான் தந்திருக்கிறது. அதுவும் இப்படிக் காலம் கெட்ட கலி காலத்தில் தன் மகன் இப்படி இருந்தது அவருக்கு கொஞ்சமாவது மனநிறைவை அளித்திருக்கிறது. அதை அவர் வெளியில் சொன்னதில்லை. அப்படி ஒரு புறம் மகிழ்ச்சியாய் இருந்தாலும் இந்தக் காலத்தில் வேதம் படிப்பவனுக்கு மரியாதை இல்லை என்று நினைத்ததால் தன் மகன் ஒரு ஆராய்ச்சியாளன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைதான். கடல் கடந்து போகலாம், நாளைக்கு என்று சேர்த்து வைத்துக் கொள்ளலாம், வேதம் பிடித்தால் படிக்கலாம் இல்லையென்றால் பரவாயில்லை என்று நவீன கால பிராமணத்துவத்தை அவர் ஏற்றுக் கொண்டுதான் விட்டார். சில சமயம் அவருக்கு சந்தேகமாய் இருக்கும் போதெல்லாம் தன்னுடைய பூனூலை ரகசியமாகத் தொட்டுப் பார்த்துக் கொள்வார். பத்து காயத்ரி சொல்லுவார். ஆனால் தான் நினைத்ததை மட்டும் வெளியில் சொல்லமாட்டார். குடித்துவிட்டுத் தெருவில் விழுந்து கிடக்கும், மாமிசம் சாப்பிடும், தேவடியாள் வீட்டிற்குச் செல்லும் பல வகையான பிராமணர்களுக்கு மத்தியில் நான் தேவலை என்று நினைத்துக் கொள்வார். இன்னும் பிராம்மணனாக இருப்பதாகவே தன்னைத் தேற்றிக் கொள்வார்.
ராமநாதன் கல்கத்தா சென்று கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் அங்கே இருந்தான். என்ன காரணமோ என்னவோ, அங்கிருந்து வெளியேறி ஊருக்கு வந்துவிட்டான். இந்த மூன்று வருடங்கள் கணேசய்யர் பட்ட கஷ்டம் அவருக்கு மட்டுமே தெரியும். அவரால் என்ன செய்ய முடிந்திருக்கும். தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை அடிக்கவா முடியும். ராமநாதன் ஊருக்குத் திரும்பியது மகிழ்ச்சியே. அவன் திரும்பி வந்து ஏதோ சுய தொழில் செய்வதாக ஏற்பாடு. தொழிலும் செய்து கொண்டிருந்தான். அவன் படிப்பிற்கும், அறிவிற்கும் ஏற்ப சம்பாதிக்கவில்லை என்றாலும் வீட்டில் இருப்பது கணேசய்யருக்கு மகிழ்ச்சிதான். அவனுக்கு ஒரு திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் என்று பேசும் போதெல்லாம் அவன் ஒத்துக்கொள்ள மாட்டான். அதற்கும் சரியென்றுதான் அவர் இருந்தார். மகன் தன்னோடு இருப்பது ஒன்றே போதும் என்பது போல. ஆனால் அவருக்கு மீண்டும் ஒரு அடி. ராமநாதன் இப்போது புத்த மதத்தை தழுவப் போவதாகவும், புத்த பிட்சுவாக வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கப் போவதாகவும் அறிவித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டான். கணேசய்யருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. கேட்டால், அறுதியான உண்மையை அறிந்து கொள்ளவே தான் முயற்சிப்பதாகவும் அதற்கு குடும்ப வாழ்க்கை தடையாக இருப்பதாகவும் சொன்னான். என்ன உண்மை? எனக்குத் தெரியாத உண்மை? என் தகப்பனுக்குத் தெரியாதது, என் சுற்றத்தில் இருப்பவனுக்குத் தெரியாதது? அதோடு குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்றும் சொன்னான். அவர் அவனுக்கு என்ன குறை வைத்தார் என்று சிந்தித்துக் கொண்டிருந்தார். ஆனால் கணேசய்யர் சென்ற முறையையும் விட அமைதியாய் இருந்தார். வாய் திறக்கவில்லை. தானே மீண்டும் வருவான் என்று நினைத்திருந்தார் போலும்.
அவர் நினைத்ததைப் போலவே மீண்டும் திரும்பி வந்தான். திரும்பி வந்தானே தவிர திருந்தி வரவில்லை என்று தெரிந்தது அவருக்கு. புத்த பிட்சுவாக வேண்டுமானால் தாயினுடைய அனுமதி வேண்டும் என்று அவனைத் திருப்பி அனுப்பி விட்டார்கள். அவனும் இங்கே வந்து அழுது சிரித்து ஆர்ப்பாட்டம் செய்து பார்த்தான். ஆனால் அம்மா வாய் திறக்கவில்லை. அவனுக்கும் அம்மா அனுமதி கொடுத்துவிட்டதாகப் பொய் சொல்ல மணமில்லை. பொய் சொன்னால் புத்த பிட்சுவாகும் தகுதி அக்கணமே அகன்றுவிடும் என்று அவன் அறிந்திருந்தான். கடுமையாக முயற்சித்து விட்ட பிறகு கைவிட்டான். இதில் அவனுடைய அம்மாவின் பிடிவாதம் அவனுடையதை விடவும் அழுத்தமாக இருந்தது. அவள் அவனுடைய தாயல்லவா? இந்த நிகழ்வுக்குப் பிறகு மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப சற்று நாளாயிற்று அவனுக்கு. காலையில் மிகத் தாமதமாகத்தான் எழுவான். வேலைக்குச் செல்லமாட்டான். ஆனால் வீட்டில் அவனை ஒன்றும் சொல்வது கிடையாது. எப்படியாவது இங்கேயே இருந்துவிட்டுப் போகட்டும் என்று நினைத்துவிட்டார்கள். கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு தானே தன் வேலையை மீண்டும் தொடங்கினான். வெளியில் சென்று வருவான். மீண்டும் பழையபடி பேச ஆரம்பித்தான். கிட்டத்தட்ட ஒருவருடம் இப்படியே ஓடிய பிறகு மீண்டும் பூசைகள் செய்யத் தொடங்கினான். பழைய பூதம் மீண்டும் வந்துவிட்டதோ என்ற அச்சம் கணேசய்யருக்கு. ஆனால் இம்முறை வேறு மாதிரி. காலையில் இரண்டு மூண்று மணி நேரம் பூசை செய்தாலும், வழக்கம் போலவே வேலையெல்லாம் செய்து கொண்டிருந்தான். அதோடு நல்ல வருமானமும் ஈட்டிக் கொண்டிருந்தான். இந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவனுக்குத் திருமணம் செய்து வைத்தார் கணேசய்யர். அவருக்கு அப்பாடா என்றிருந்தது. ராமநாதனைத் திருமணம் செய்து கொண்டவள் மிக சாமர்த்தியசாலி. அவனை மீண்டும் வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டாள். நல்ல பணம், நல்ல சேமிப்பு. இரண்டு வீடு கூட வாங்கிவிட்டான். இரண்டு வருடத்தில் ஒரு குழந்தை வேறு. கணேசய்யருக்கு அதனால்தான் ரமேஷைப் பார்க்கும் போது ஒரு தனி மகிழ்ச்சி வரும். தன் மகன் தொலைந்தே விட்டான் என்று நினைத்தப் பிறகு, இப்படி ஒரு குடும்பம் குழந்தை எல்லாம் இருப்பது கண்டு ஆனந்தம் தான்.
இவற்றையெல்லாம் யோசித்துக் கொண்டே ரமேஷைத் தூக்கி தன் இடுப்பில் உட்கார வைத்துக் கொண்டார். "கொல்லைக்குப் போயி ஈ தேக்கலாமா?" என்று கேட்டுக் கொண்டே கொல்லைக்கு அழைத்துச் சென்றார். "உங்க மடி ஆசாரமெல்லாம் இப்ப எங்க போச்சு சாமி?" என்று வேலைக்காரி கேட்க, கணேசய்யர் அதற்கு, "அடிப்போடி... பிரம்மச்சாரிக்கு ஒன்னும் தோஷமில்ல.. அதோட என் பேரன விட எனக்கென்னடி மடி ஆசாரம்" என்று சொல்லிக்கொண்டே கொல்லைக்குச் சென்றார்.
ரமேஷை இன்று பாடசாலையில் சேர்க்கப் போகிறான் ராமநாதன். கணேசய்யருக்கு இதில் சற்றும் உடன்பாடில்லை. "நன்னா படிக்கற கொழந்தய போயி பாடசாலைல விடப்போறியேடா... என்கிட்ட விட்டுடு... நான் அவன படிக்க வெச்சுக்கறேன்.." என்று மன்றாடிப் பார்த்தார். ராமநாதன் கேட்கவில்லை. மாறாக, தன் மகன் ஒரு பிராம்மணனாக வளருவதையே தான் விரும்புவதாகச் சொன்னான். பிராம்மணனாக வாழ வேதம் கற்கவேண்டும், கற்பிக்க வேண்டும் என்றும் சொன்னான். இதைச் செய்து விட்டால் மட்டும் பிராம்மணனாக முடியுமா என்ற சந்தேகம் நியாயமானதாகவே பட்டது கணேசய்யருக்கு. ஆனால் வழக்கம் போல இதையும் கேட்காமல் இருந்துவிட்டார். தானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டு போகட்டும் போ என்று விட்டுவிட்டார். ஆனால் இதில் அவருக்கு ஒரே ஆறுதல் தன்னுடைய பேரன் தன் பக்கத்திலேயே இருக்கப் போகிறான் என்பது. வேதபாடசாலை ஊருக்குப் பக்கத்திலேயே இருந்தது. விடுமுறைக்கு ரமேஷ் இங்கேதான் வருவான். அதோடு நாமும் அவனை சென்று பார்த்துக் கொள்ளலாம் என்ற ஆறுதல் இருந்தது அவருக்கு. ஆனால் இந்தக் குழந்தை எப்படி அங்கே இருப்பான் என்பது மிகுந்த கவலையளித்தது. ரமேஷ் ஒன்றும் கைக்குழந்தை அல்ல. எட்டு வயதாகிறது அவனுக்கு. இதுவரை அவன் வெளிநாட்டில் இருந்திருக்கிறான். சரளமாக ஆங்கிலம் பேசத் தெரிந்த அளவு தமிழ் தெரியாது அவனுக்கு. தரையில் உட்கார்ந்து சாப்பிடத்தெரியாது. ஆனால் பாடசாலையில் எல்லாவற்றையும் தானே பார்த்துக் கொள்ள வேண்டும். காலையில் பழையது, மதியம் பத்தியச் சாப்பாடு போன்றொரு உணவு. ருசியான சாப்பாட்டுக்கெல்லாம் வழியில்லை. யாராவது பெரிய மனிதர்களின் பிறந்தநாள், நினைவு நாளென்றால் இனிப்பு, பலகாரங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. துண்டு வேஷ்டியைத் தவிர வேறொன்று அணிய முடியாது. குடுமி வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி எதுவுமே இன்றைய வெளியுலக வாழ்க்கைக்குச் சற்றும் தொடர்பில்லாத இடமிது. ஆனால் அங்குதான் பிராம்மணர்கள் பிராம்மணர்களாக உருவாக்கப்படுகிறார்கள் என்று ராமநாதன் திடமாக எண்ணினான். அன்றைய தினம் ரமேஷைப் பாடசாலையில் கொண்டு சேர்த்தே விட்டான். கணேசய்யருக்கு வருத்தமாய் இருந்தாலும், தான் செய்தது சரியே என்று ராமநாதன் சொல்லிக்கொண்டே இருந்தான்.
ராமநாதன் ஊருக்குக் கிளம்பிச் சென்று பத்து நாட்கள் கூட இருக்காது. ரமேஷ் பாடசாலையில் இருந்து மூட்டை முடிச்செல்லாம் கட்டிக் கொண்டு, தன்னால் இனிமேல் அங்கே இருக்க முடியாதென்று சொல்லிவிட்டுத் தாத்தா வீட்டிற்கே வந்துவிட்டான். கணேசய்யருக்கு சிரிப்புதான் வந்தது. யாருடைய பிள்ளை இவன்? அப்பனுக்குத் தப்பாத பிள்ளை என்று நினைத்துக் கொண்டே அவனைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு அவன் திரும்பி வந்ததற்கான காரணத்தைக் கேட்டார். "தாத்தா... அங்க நிம்மதியே இல்ல தாத்தா.. ஏதோ எனக்கு சம்பந்தமில்லாத இடத்துல இருக்கறா மாதிரி இருந்தது.. நிம்மதியா நா ஆத்துலயே இருக்கேன்...". இதைக் கேட்ட கணேசய்யருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ராமநாதன் பத்து பனிரெண்டு வருடங்களுக்கு முன்னால் சொன்ன நிம்மதிக்கும் இதற்கும் என்ன தொடர்பென்று தெரியாமல் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கண் மூடினார். அது குழப்பமா அமைதியா என்று புரியவில்லை அவருக்கு. விநோதமாய் இருந்தது. அறுபது வயதிற்கு மேல் அவர் தேடாத ஞானம் அவரைத் தேடி வந்தது போலத் தோன்றியது.
முரண் (சிறுகதை முயற்சி)
வருடம் ஒருமுறை ஊருக்கு வருவதில் சில சௌகரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. கணினியில் சினிமா பார்ப்பது போல சுலபமாக தேவையில்லாத பகுதிகளை விட்டுவிட்டு சுவாரஸ்யமான பகுதிகளைக் காணும் வாய்ப்பு மிக அருமை. அந்த இருபது நாட்களில் நாம் சந்திக்கும் அத்துனை நண்பர்களும் உறவினர்களும் ஏதோ ஒரு வகையில் நல்லவர்காளாகவே தோன்றுவார்கள்; நாமும் அவர்களுக்கு அவ்வாறே. அதோடு மட்டுமில்லாமல் இங்கே ஆக வேண்டிய காரியங்கள் எல்லாவற்றிற்கும் ஒரு காரியதரிசி. சில நேரங்களில் அப்பா, சில நேரங்களில் நல்ல நண்பர்கள். தொலைபேசியில் சொல்லிவிட்டால் போதும் காரியங்கள் தானாக நடந்தேறிவிடும். இரண்டு முறை வங்கிக்குச் செல்லவோ, ஒரு மணி நேரம் ரயில் நிலையத்தில் காத்திருக்கவோ வேண்டாம். மிகச் சுலபம்.
நான் ஊருக்கு வரும் போது பரிசுப் பொருட்களும் சாக்லேட்டும் வாங்கி வருவது வழக்கம். முன்பெல்லாம் வாங்கி வரவேண்டும் என்று ஆசை இருந்தது. இப்போது அது வெறும் சடங்காக மாறிவிட்டது. இந்தியாவில் கிடைக்காத பொருட்களே இல்லை எனலாம். அப்படி இருக்கும் போது நானென்ன அங்கிருந்து வாங்கி வருவது. ஏன் எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்குப் புரிவதில்லை. வீட்டுக்கென்று வாங்கி வந்தால் அதை தெருவுக்கே பங்கு போடும் தாராளப் பேர்வழி என் அம்மா.
இந்த வருடம் நான் ஊருக்கு வந்திருக்கும் போது இன்னுமொரு விஷயம் என் கொள்ளுப்பாட்டியின் உடல்நிலை. அவர் என் அப்பாவுடைய பாட்டி. படுத்தப் படுக்கையாகி கிட்டத்தட்ட ரெண்டு வருடம் ஆகிறது. என்னுடைய பாட்டிதான் அவரை கவனித்துக் கொள்கிறார். நான் வாரமொருமுறை தொலைபேசியில் அழைத்து 'நலமா' என்று கேட்பது மட்டும் வழக்கம். மற்றபடி அந்தப் பாட்டியினுடைய பீ நாற்றமோ, மூத்திர வாசனையோ எனக்கு என்றுமே தெரிந்ததில்லை. என் பாட்டியின் சகோதரி உதவிக்கு வந்திருந்தார். நெருங்கிய உறவு. நானெல்லாம் அவர் வீட்டிற்கு விடுமுறைக்குப் பலமுறை சென்ற ஞாபகம். தாத்தா இருக்கும் போது அவருடன் சேர்ந்து காவேரிக்கு குளிக்கச் செல்லும் அனுபவம் அலாதி. தலையில் அழுக்குத் துணிக்கூடையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் என்னையும் பிடித்துக் கொண்டு நடந்து செல்வோம். ஆற்றங்கரைக்குச் செல்லும் வரை ஒரே பாட்டுத்தான். எனக்கு ஒன்றும் புரியாமல் இருந்தாலும் சிரித்துக் கொண்டே சென்ற ஞாபகம்.
அவருடைய மாப்பிள்ளை எனக்கு அத்திம்பேர் முறை. அவர் வீட்டுக்கும் அடிக்கடி செல்வேன். அவர் ஒரு ஆசிரியர். கடுமையான ஆசிரியர். மாணவர்கள் அவரைக் கண்டால் நடுங்குவார்கள். அவரிடம் படித்தால் மாணவர்கள் நன்றாகப் படிப்பார்கள் என்று தங்கள் பிள்ளைகளை அவரிடம் டியூஷனுக்கு அனுப்புபவர்கள் ஏராளம். எனக்கு இப்போது நினைவில் இருப்பவை எல்லாம் பத்து வயதிற்குள் நடந்தவைதாம். அப்போது நான் கண்டவை மிகக் குழப்பமாக இருக்கும். காலையில் எழுந்தவுடன் கழிப்பறைக்குச் சென்று சிகரெட் பிடிப்பார். மலம் கழிக்கச் செல்வதாக வேறு சொல்லிவிட்டுச் செல்வார். பிறகு சுத்தமாக குளித்துவிட்டு வந்து சஷ்டி கவசம் ஓதுவார், மனப்பாடமாக. ஒரே பூசையும், புகையும், மணியுமாக இருக்கும். எனக்கு இதில் பல கேள்விகள் தோன்றும். எதற்காக கழிப்பறையில் சென்று புகைக்க வேண்டும். மற்றவர்க்குத் தெரியாமல் செய்ய வேண்டுமென்றால் அங்கே செய்யக்கூடாது. அவர் விடும் புகை மேலெழும்பி வரும் போது நிச்சயமாகத் தெரியும். அல்லது அடுத்தவர் மலம் கழிக்க வந்தால் அங்கே இருக்கும் வாசனை காட்டிக் கொடுத்துவிடும். மூன்றாவதாக, எதற்காக மலம் கழிக்கச் செல்வதாகச் சொல்லிவிட்டு இதைச் செய்ய வேண்டும்? சொல்லாமலேயே செய்தால் ஆகாதா? இதற்கெல்லாம் மேலாக அவர் குளித்த பின்னாலும் கூட அவர் வாயிலிருந்து வரும் சிகரெட் நாற்றம் மற்றவர்க்குத் தெரியாதா. பிறகு ஆசிரியராய் இருந்து இப்படிச் செய்யலாமா? ஒழுக்கம் பற்றி வேறு மாதிரி போதித்துவிட்டு இப்படிச் செய்தாலும், ஆசிரியர் ஏன் இவ்வளவு முட்டாளாக இருக்கிறார் என்ற கேள்வியும் என் மனதில் எழாமல் இருந்ததில்லை. அதோடு விடுவதில்லை; அவருடன் நான் வெளியே செல்லும் போது என்னை சைக்கிளில் உட்கார வைத்துவிட்டு கடைக்குச் சென்று ஏதோ வாங்கி வருவதாகச் சொல்வார். சிகரெட் என்பது எனக்குத் தெரியாத பொருள் போலவே நினைத்துக் கொள்வார். தமிழ்க் கலாச்சாரத்தின் மீதும், சமுதாயத்தின் ஒழுக்க விதிகளின் மீதும் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை. எட்டு வயதில் தமிழ் சினிமாவும் இவரைப் போன்றவர்களும் ஒழுக்கங்களையும், ஒழுங்கீனங்களையும் ஒருசேர கற்பித்திருக்கும் போது இவையெல்லாம் எப்படித் தெரியாமல் இருக்க முடியும்? வேண்டுமானால் தெரியாது போன்று நடிக்க முடியும். கலாச்சாரக் கட்டுப்பாடுகளும், ஒழுக்கக் கற்பிதங்களும் நம்முன் செயற்கையாகக் கட்டியெழுப்பப்பட்ட சல்லடைச் சுவர். நாம் திடப் பொருளாக இருக்கும் வரை அந்தத் துளைகள் கண்ணில் தெரிவதில்லை. சுற்றத்தின் வெப்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக, உருக உருக, அந்த ஓட்டைகளுக்குள் ஒழுகி அந்தப்புறம் செல்வது சுலபமாகிவிடுகிறது.
அவருக்குத்தான் சென்ற வருடம் இருதய நோய் வந்து திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர தேவைக்காக நான் ரத்தம் கொடுக்க வேண்டி வந்தது. ரத்தம் கிடைத்திருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும் என்று தெரியாது. ஆனா அவர் பிழைத்தார் என்பது உண்மை. அதில் மிகவும் நெகிழ்ந்து விட்டதாகச் சொன்னார். அவர் மிகவும் நெகிழ்ந்ததற்குக் காரணமும் இருக்கிறது. என் பத்து வயதிற்குப் பிறகு எங்களின் குடும்பங்களுக்கு இடையில் நடந்த பெரிய தகராறு. மிகக் குறைந்த பணத்திற்காக என் தந்தையை அவர் அவமானப்படுத்திவிட்டார். எனக்கு அப்பவும் வயது பெரிதாக ஒன்றுமில்லை. பன்னிரெண்டு அல்லது பதிமூன்று. இன்றும் நன்றாக நினைவிருக்கிறது. என் வீட்டிற்கு வந்து சத்தமாக பேச ஆரம்பித்தவர், திடீரென என் பாட்டியை அடித்தே விட்டார். அது என் அப்பாவின் மேல் விழவேண்டிய அடி. தவறி என் பாட்டி மேல் விழுந்தது. அடித்ததோடு மட்டுமில்லாமல் தெரு வாசலில் நின்று கூவிக் கூவிக் கெட்ட வார்த்தைகள் வேறு. இதையெல்லாம் நான் அமைதியாகவே கவனித்துக் கொண்டிருந்தேன். வேறென்ன செய்ய இயலும் அந்த பதிமூன்று வயதுச் சிறுவனால்? எனக்கு ஒருபுறம் செய்வதறியாமல் அழுகையும் கோபமும் வந்தாலும் பிற்பாடு மீண்டும் கேள்விகள். இவர் திருக்குறள் படித்திருப்பாரோ? இல்லை அவர் படிக்கும் போது அதெல்லாம் பாடத்திட்டத்தில் இருந்திருக்காதோ? அல்ல பள்ளியில் ஆசிரியர் வேறு, வெளியில் ஆசிரியர் வேறா? அல்ல, அவருடைய அப்பா என் அப்பா போல போதித்ததில்லையா? இப்படி மாறி மாறிக் கேள்விகள்.
இந்த அமளிக்கெல்லாம் பிறகு ஒரு பத்து வருட இடைவெளியில் பழைய பகையெல்லாம் மறந்து (!?) மீண்டும் இரண்டு குடும்பங்களும் இணைந்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் நான் அப்போது இளைஞனாகிவிட்டேன். இளைஞன் சிறுவனைப் போன்று மனதிற்குள் யோசிப்பதில்லை. எல்லாவற்றிலும் ஒரு விளம்பரம். தாந்தோன்றி போன்றொரு நினைப்பு. எல்லாவற்றிற்கும் ஒரு கேள்வி, ஒரு பதில், ஒரு சார்பு. மேலும் கோபம். இதெல்லாம் இளமையின் அடையாளங்கள். என் இளமைக் கோபமும், நடைமுறைக்குச் சாத்தியமில்லாத நியாயமும் அவரிடம் பேச அனுமதிக்கவில்லை. என் குடும்பம் எப்படியோ மறந்துவிட்டது. அறுபது வயதுக் கிழவியை அடித்தது, தெருவில் நின்று கெட்ட வார்த்தைகளால் திட்டியது; இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இப்படி நடந்து கொண்டது எல்லாமே கொஞ்சம் பணத்திற்காக. இப்படிப்பட்ட மனிதனை ஏன் மன்னிக்க வேண்டும் என்பதென் வாதமாக இருந்தது. ஆனால் காலப் போக்கில் நானும் எனக்கு பிடிக்காதவற்றையும் என்னில் அனுமதித்துக் கொள்ளும் நல்ல பழக்கத்தைக் கற்றுக் கொண்டுவிட்டேன்.
பழைய வருத்தத்தை எல்லாம் மறந்து அவருக்கு நான் ரத்தம் கொடுத்த போது மிகவும் நெகிழ்ந்து விட்டார். இல்லாமல் கூட இருக்கலாம். நான் அப்படி நினைக்கிறேன். மருத்துவர் இனிமேல் சிகரெட் பிடிக்கக் கூடாது என்று கட்டளையிட்டுவிட்டார். நான் அப்போதுதான் வெளிநாட்டிலிருந்து வாத்தியாருக்கு சிகரெட் வாங்கி வரலாமா என்று யோசித்திருந்தேன். அதற்குள்தான் இப்படி. போனால் போகட்டும். உயிர் பிழைப்பது தான் முக்கியம்.
நான் ஊருக்கு வந்து பத்து நாட்களுக்கும் மேலாகிவிட்டது. வந்த புதிதில் இருந்த ஆர்வம் எனக்குமில்லை என் வீட்டில் இருப்பவர்களுக்குமில்லை. அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கென்னவோ வீட்டிலிருப்பது நெளிய வைக்க ஆரம்பித்துவிட்டது. அன்று மாலை அந்த வாத்தியார் வீட்டிற்கு வந்திருந்தார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு வீடு செல்லத்தயாராகும் போது, "சாக்லேட் வாங்கின்டு வந்தியாமே? கண்ணுல காமிக்கவே இல்ல? சாமர்த்தியம்தான் போ. பொழச்சுப்ப. அதுக்கெல்லாம் ஒரு மனசு வேணும்...."
இதைக் கேட்டுக் கொண்டே என் வீட்டு முற்றத்தில் வந்து அன்னாந்து பார்த்தேன். வானம் விசாலமாய்த் தெரிந்தது.
காதறுந்த செருப்பு
கனவில் வந்தபோது
காதோரம் சொன்னது
இது தான்...
அடிப்பதற்காவது என்னை வைத்துக்கொள் என்று
அதன் மீதிருந்த கோபம்
அதிகமானதென்னவோ
அப்போதுதான்.
மனித ராசி -- ஜே. ஜே. சில குறிப்புகள் நூலிலிருந்து...
............. காரை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு, கீழே இறங்கி, பாதை விளிம்பில் நின்றுகொண்டு சூரியோதயத்தைப் பார்த்தேன். உள்ளங்கால் கூசும்படி விளிம்புக்குச் சென்றேன். முன்னால் அதல பாதாளம். அற்புதத்திலும் அற்புதமான அந்தக் காட்சியைப் பின்னகராமல் பார்த்துக் கொண்டிருந்தேன். மனித ஜென்மங்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் இது. அதிகாலையிலும், ஒவ்வொரு நாளும், ஒரே மாதிரியாகவும், அதே சமயம் வெவ்வேறு விதமாகவும், கணங்கள் தோறும் மாற்றிக்கொண்டும், முடிவற்ற அழகுகளை அள்ளி இறைத்துக் கொண்டும் கடவுள் மனிதன் முன் வருகிறார். தனது விசுவரூபத்தை மனிதனுக்குக் காட்டக் கடவுள் வருகிறார். இருந்தும் மனிதன் பார்ப்பது இல்லை. பழக்கத்தில் அறிவையும், அற்புதங்களையும், அதிசயங்களையும் முற்றாக இழந்து, தரித்திரத்திலும் பரம தரித்திரனாக நிற்கிறான். ஒவ்வொரு நாளும் இந்த விசுவரூப தரிசனத்திலிருந்து நாம் பெறக்கூடியவற்றில் மேலான ஞானம் லகுவாகவும் பக்குவமாகவும் நமக்குக் கிடைக்கும். வேறு எதிலிருந்தும் பெற முடியாத ஞானம் இதிலிருந்து பெற முடியும். இவ்வளவு நாட்களும் இதற்கு ஆட்பட மறுத்து ஏழ்மைப்பட்டுப்போனதை நினைத்து வருத்தமடைந்தேன். இனியேனும் எனக்கு இந்த நித்தியப் பரவசம் கிடைக்கட்டும். மனித ராசிக்குரிய விஷேஷ சொத்துக்களை நான் சேர்த்துக் கொள்ளாவிட்டால் என் பிறப்பு அர்த்தமற்றது.
கணத்துக்குக் கணம் அசைவின்றி மேலெழுந்து வருகிறது அது. புன்னை மரங்களிடையே ரச்மிகள் ஊடுருவி, சிதறிய கண்ணாடித் துண்டுகள் உருகி வழிகின்றன. அந்த உருகி வழியும் கண்ணாடிதான் என் கனவுகள் என்று நான் சொல்லிக் கொள்கிறேன். கனவுகளில் ஆத்மா கொள்ளும் ஆனந்தத்தில் பலம் பெற்று நடமாடிக் கொண்டிருக்கிறான் மனிதன். அந்த ஆனந்தங்களைக் கல்லிலோ வர்ணங்களிலோ மரத்திலோ பாட்டிலோ தேக்கி வைக்க முற்படுகிறான். ஒரு கனவைச் சொல்ல முற்படும் போது எப்போதும் அவன் தெரிந்து கொள்வது கனவைச் சொல்ல முடியவில்லை என்பதுதான். இதனால் அவனுக்கு ஏற்படும் விசனம் சொல்லத்தரமன்று. உடல்கூடித் திளைப்பவர்களிடங்கூடச் சொல்ல முடியாத இந்தச் சங்கடத்தை அவன் உலகுக்கு எப்படி எடுத்துச் சொல்ல முடியும்? இருந்தாலும் அவன் சொல்ல முற்படுகிறான். மீண்டும் கனவைச் சொல்ல வந்தவன் கனவைச் சொல்ல முடியவில்லை என்பதை மீண்டும் சொல்லிவிட்டுப் போகிறான். மீண்டும் சொல்ல முற்படிகிறான். சொல்லாமல் அவற்றைப் புரியவைக்க ஏன் அவனுக்குத் தெரியவில்லை? புரியவைக்க சொல்லப்பட வேண்டுமா? இந்தத் தவறான எண்ணம் எப்போது அவனுக்கு ஏற்பட்டது? எப்படி ஏற்பட்டது? இன்னும் கனவுகளின் விளிம்புகள் கூடச் சொல்லில் வகைப்பட்டு வரவில்லை. இந்தக் கனவுகள் அவற்றின் அர்த்தத்தை நம்மிடம் சொல்ல நாம் அவற்றை நிம்மதியாக இருக்க விடுவதில்லை. நனவுகளையும் நாம் நிம்மதியாக இருக்க விடுவதில்லை. நிம்மதியாக அவற்றை விட்டுவிட நம்மால் முடிவதில்லை. துடுப்புப் பிடிக்கும் நீரில் முகம் பார்க்கத் துடிக்கிறோம். நீச்சலடித்துக் கொண்டே முக்குளிக்க முயல்கிறோம். எப்படிக் கூடும் இது? 'இப்படிக் கேட்டால்?' என்று கேட்கிறார்கள் என் நண்பர்கள். எப்படிக் கேட்க வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லையே. விடை தெரியவில்லை என்பதில் கூட எனக்கு வருத்தம் இல்லை. கேள்விகள் கூட என்னிடம் உருக்கொள்ளவில்லை. இப்போது நான் இங்கு இருந்து கொண்டிருப்பது, என் முன் விரிந்து கிடக்கும் இந்த உலகம், மனித ஜீவங்கள், அவற்றின் அசைவுகள், இயற்கை, இயற்கையின் கோலங்கள் எல்லாவற்றின் மீதும் எனக்குத் திகைப்பு ஏற்படுகிறது. இந்த வித்தை எப்படிச் சாத்தியம்? அடிப்படையாக இதை ஒப்புக் கொண்டு விட்டதாக எடுத்துக்கொள்ள என்னால் முடிவதில்லை. எனக்கு பெரும் திகைப்பாக இருக்கிறது. ஒரு கணம் கூட இடைவெளி இன்றித் திகைத்துக் கொண்டு இருக்கிறேன். இந்தத் திகைப்பினால் எனக்குப் பெரும் பரபரப்பு ஏற்படிகிறது. இதைத் தவிர வேறொன்றும் எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ..........
எழுத்தாளர் இ. பா 80வது பிறந்தநாள் விழாவில் எஸ். ராமகிருஷ்ணன் ஆற்றிய உரை
MP3 கோப்பாக தரவிறக்கம் செய்க
நன்றி:
'பச்சைத்தமிழன்' பார்த்திபன் நெடுஞ்செழியன்
http://parthichezhian.blogspot.com/2010/07/80.html
அழுதழுது பேய் போல்...
போல் கருத்தில்
எழுகின்ற வெல்லாம்
என்னதறியாமை
அறிவென்னுமிரு
பகுதியால் ஈட்டு
தமிழென்
தமிழினுக்கின்னல்
பகராது உலகம்
ஆராமை
மேலிட்டிருந்தலால்..."
---- தாயுமானவ சுவாமிகள்
அடி ஓலவாயி...
அவளயெல்லாம் விட்டுப்புட்டு
மக்குப்பய மனசுக்குள்ள
உன் நெனப்பு ஏனிருக்கு?
அடி ஓலவாயி
வார்த்த ஒழுகும் ஓட்டவாயி
உன்னப்போல ஆள எங்கயும்
நான் பார்த்ததில்ல தாயி
ஊரு கத பேசுற
ஒறவு கத பேசுற
உன் கத என் கத கேட்டா
என்னையே நீ ஏசுற
வாய மூடமாட்ட
வம்பு சண்ட விடமாட்ட
ஒத்த சொல்லு நான் கேக்குறேன்
அந்த சொல்லு சொல்லமாட்ட
கொஞ்சிப் பேசயில
மிஞ்சி ஏசையில
மிஞ்சி ஒன்னு போட்டுவிட
கெஞ்சுதடீ என் மனசு
இப்போதும் ஒரே கேள்வி; நான் யார்?
என்னைக் கிடத்திப் போட்டிருக்கையில்
என்னையே கடத்தியதென் பிம்பம்.
எப்போதும் நடத்திய வேள்வி,
இப்போதும் ஒரே கேள்வி; நான் யார்?
இருக்கையில் இல்லாது போலும்,
இருக்கின்றனர் என் மக்கள்.
ஒருமையில் ஒளிய இடம் தேடுகிறேன்.
இரைதேடும் புலி கண்டு
இறைவேண்டி ஓடும் மான் போல ஓடுகிறேன்.
துரத்துவது யாரென்றறியேன்;
பயமுறுத்துவது ஏதென்றும் அறியேன்.
என்னில் என்னை ஒளித்தாலொழிய, அது நடவாதென்பதும் மறந்தேன்.
உண்மை என்னைச் சுட ஒரு நாளாகுமோ?
மெதுவாகத்தான் தெரிந்தது.
நிஜத்தை நேரில் சந்திப்பதுதான்,
நிஜம் என்று மனம் புரிந்தேன்.
அடடா! எத்துனை நேரம் புரியாமல் தவித்தேன்!
ஒருவேளை இதுதான் எங்கள் முதல் சந்திப்போ?
மனமொன்று கூற, மதியொன்றுரைக்க,
நிஜத்திற்கு பொய்(ச்) சாட்சி சொல்லியபடி,
என் மனைவியை நெருங்கினேன்.
பேதைப்பெண்ணோ என் பிம்பம் பார்த்து
கதைத்துக்கொண்டிருந்தாள்.
எனைப்பார்த்து அழும் விழிக்கு,
அணைபோட நான் முயல,
முடியாமல்தான் கலங்க,
கண்ணீர் அவள் கன்னம் கரைத்துக்கொண்டிருந்தது.
எதிரியும் புகழ்பாட,
எரிதிரியும் சில்லென்றிருக்க,
அப்போதுணர்ந்தேன் அகில உறவை அறுத்துவிட்டேனென்று!
வலம் இடம் மாறியதோ?
தத்தளித்துத் தானிருந்தேன்
தனித்தடத்தில் நானாக
தங்கத்தடாகத்து மீனாக
கற்றை முடி ஒதுக்கும்
ஒற்றை விரல் அழகே
மொழி ஒன்று பேசடி
வழி என்ன கூறடி
என் அகவை எல்லாம்
உன் அகம் தேடினேன் போலும்
உன் வரவை அறிந்ததில்
என் அறிவை மறந்தேன் மேலும்
வலக்கை வேண்டும் இடக்கைக்கு
இடக்கை வேண்டும் வலக்கைக்கு
என் கைகள் என்னோடிருந்தது
இதுநாள் வரையிலும்
ஒருகை உன்னோடிருக்க
மறுகை தனிமையில்
வலம் இடம் மாறியதோ?
மனம் தடம் மாறியதோ?
காதல்
பேதை மனம் போதையில் ஏதேதோ உளரும்
பருவம் பறந்து சென்று பால்நிலா மீதமரும்
நினைவு நீரில் நடக்கும்
கனமும் கனவு கதை சொல்லும்
எண்ணம் எங்கெங்கோ சிதறும்
அந்தி பகல் பாராது அடம்பிடிக்கும் நெஞ்சம்
பூமி ஆழம் பார்க்கத் தோன்றும்
வானம் தொட்டுப் பார்க்கத் தூண்டும்
சலனம் சித்து வேலை செய்தாலும்
புத்தி புகழ்பாடும் அதை
பார்வை பாதியாய்ப் போக
புது வழி தேடும் விழி
அறிவு அகழ்ந்தாலும் வாராது
துணிவு மட்டும் எங்கிருந்தோ வந்திடும்
தனிமை சுகம் தரும்
தட்டுப்படுவன எல்லாம் தலைகீழாய்
கேள்விகளுக்கெல்லாம் கேள்விகளாகவே பதில்
மனம் ஆடும் பாடும்
அறிவுரை மட்டும் அடங்காது அதில்
குழப்பம் குடை பிடிக்கும் எல்லாவற்றிலும்
உங்களுக்குமா என்ன?
இதெல்லாம் மதுவால் அன்று
மது மிஞ்சும் மாதுவால்.
அறிவு தரும் நூல்கள் (கண்ணதாசனின் சுய சரிதையிலிருந்து)
(இதில் கண்ணதாசன் 'அவன்' என்று தன்னைத் தான் குறிப்பிடுகிறார்)
அந்த நேரத்தில் அவன் அவர்களைப் பற்றி ஆராய விரும்பவில்லை. காரணம் அவனும் உடன்பட்டே தான் அந்தக் காரியங்களில் இறங்கினான். பணக்கார மைனர்களைப் போன்று, பகலிரவு பாராமல் அவர்கள் ஆடினார்கள். 'கொந்தளிக்கும் கடல்', 'குமுறும் எரிமலை' என்றெல்லாம் படங்களிலே வசனங்கள் வரும். அவை வேறெவையுமல்ல! பல பெண்களுடைய இருதயங்களே! 'தமிழ்ப் பண்பாடு! தமிழ்ப் பண்பாடு!' என்ற கூக்குரல்கள் மேடையிலே கேட்கும். தன்பாடு தீரும் வரைக்கும் தான் அந்தப் பண்பாடு எல்லாம்!
இந்த நேரத்தில் அவனுக்குச் சில செய்திகள் தரப்பட்டன. நாம் மட்டும் தவறு செய்யவில்லை! முக்கியத் தலைவரே அதைத்தான் செய்கிறார் - என்று அந்தச் செய்திகள் கூறின! கலா ரசிகரும், இன்றைய எம். எல். ஏ ஒருவரும், அந்த நிகழ்ச்சியினை விரிவாகவே கூறினார்கள். அந்த எம்.எல்.ஏ முக்கியத் தலைவரின் பத்திரிக்கையிலே வேலை பார்த்தவர். ஆதலின், அவர் சொன்னவற்றை அவன் நம்பினான்.
அது இது:
ஓர் இரவு, முக்கியத் தலைவர் தூக்கம் பிடிக்காமல் முன்னும் பின்னும் நடக்கிறார். வெளியிலே இருவர் போயிருக்கிறார்கள். அவர்களை அவர் எதிர்பர்த்துக் கொண்டிருக்கிறார். மணி பத்தடிக்கிறது. பதினொன்று! கோவிலில் அர்த்த ஜாம மணி அடிக்கிறது. மணி பனிரெண்டு. அதற்குள் தலைவர் ஏழெட்டு முறை வெற்றிலை போட்டுத் துப்பி விட்டார். அதோ அவர்கள் வரும் சத்தம் கேட்கிறது. கதவு திறக்கப்படுகிறது. மூன்று ஆடவர்கள் உள்ளே நுழைகிறார்கள். 'ஆடவர்கள்தானா? அழகு மயில் வரவில்லையா?' ஓர் ஆடவனின் தலைக்கட்டு அவிழ்க்கப்படுகிறது. ஆண் உடைகள் களையப் பெறுகின்றன. என்ன ஆச்சர்யம்! அந்த உடைக்குள் ஓர் அழகு மயிலல்லவா ஒளிந்து கொண்டிருக்கிறது. அழைத்து வந்தோர் குறிப்பறிந்து வெளியேறுகிறார்கள். பகுத்தறிவுத் தலைவரின் அறை பண்டாரச்சன்னதியின் மடமாகிறது. பொழுது விடியும் முன்னே பூவை திரும்புகிறாள். ஓர் இரவு, இன்ப இரவாகிறது. இந்த நிகழ்ச்சியைப் பற்றி அறிந்த கட்சிப் பிரமுகர்கள், இதற்குக் கொடுத்த பெயரென்ன தெரியுமா? "சுந்தரகோஷ்" என்பதாகும். 'வேலைக்காரி' படத்தில் ஆண்வேடம் தாங்கிய பெண்ணொருத்தி 'சுந்தரகோஷ்' என்று அழைக்கப்படுவதையே அவர்கள் அப்படிக் குறிப்பிட்டார்கள்.
(குறிப்பு: 'வேலைக்காரி' நாடகம் அறிஞர் அண்ணா எழுதியது என்பதை நினைவில் கொள்க)
...
கழகத்திற்கென்றே (திமுக) ஒரு தனித்தமிழ் நடை உண்டு. அண்ணாத்துரையின் நடயைப் பின்பற்றி, எல்லோருமே ஒரே மாதிரி 'துள்ளு தமிழ்' எழுதுவார்கள். எழுதுவரின் பெயரை எடுத்துவிட்டுப் பார்த்தால் யார் எழுதியதென்றே தெரியாது. கதை ஒன்றில் தொடங்கி, பிறகு அதைக் கட்டுரையாக விரிக்கும் அலுத்துப் போன முறையை அனைவருமே கையாண்டார்கள்.
அவற்றில் எதையும் அவன் படிப்பதில்லை! காரணம், அந்த நோய் தன்னையும் பற்றிக் கொள்ளக் கூடாது என்பதுதான்.
தன்னுடைய எழுத்துக்களை அவன் படிபதில்லை என்பதிலே அவனுடைய நண்பர் கருணாநிதிக்கு (ஆம்! இன்றைய முதல்வர்தான்) அசாத்தியக் கோபம் வரும்.
ஒருநாள் அவர், புதிதாக வெளியாகியிருந்த தனது இரண்டு புத்தகங்களை எடுத்து அவன் முன்னால் போட்டு " இதெல்லாம் படியய்யா" என்றார். ஒரு புத்தகத்தை விரித்தான்.
நல்ல பண்பாடு உள்ள கதை அது! 'வாழ முடியாதவர்கள்' என்ற தலைப்பில் வெளியாகியிருந்தது. கதையென்ன தெரியுமா? படிக்காதவர்களும் படித்துப் பயனடைய வேண்டிய கதையல்லவா! விவரமாகவே சொல்கிறேன்.
மனைவியை இழந்த ஒரு போலீஸ்காரன். வறுமை தவழ்ந்து விளையாடும் சின்னஞ்சிறு வீடு அவன் குடியிருப்பு. மாண்டுபோன அவன் மனைவி சும்மா போகக் கூடாதென்று ஒரு மகளை விட்டுப் போயிருந்தாள். கதையின் ஆரம்பத்திலேயே அந்த மகள் தளதளவென்று வளர்ந்து பளபளவென்று மெருகேறிக் கவர்ச்சிப் பாவையாக விளங்குகிறாள். சின்னஞ்சிறிய வீட்டில் தன்னந்தனியாக இருக்குமவள், திருமணத்திற்காகக் காத்துக் கிடக்கிறாள். இரவுகள் வந்து போகின்றன, திருமணம் வரவில்லை. ஒவ்வோர் இரவிலும், தந்தையும் மகளும் மட்டுமே அந்த வீட்டில் துயிலுகின்றனர். அவளோ கல்யாணமாகாதவள்; அப்பனோ மனைவியை இழந்தவன். தந்தை மகளையே மனைவியாக்கிக் கொள்கிறான். கதாசிரியர் கதையை முடிக்கிறார்.
மேலை நாட்டு ஆபாசக் களஞ்சியங்களான; 'மாபசான்' கூட்டத்தினருக்குக் கூட, இத்தகைய கற்பனை தோன்றியதில்லை.
அவர் எந்த நோக்கத்தோடு இந்தக் கதையை எழுதினார்? நாட்டின் வறுமை நிலையைப் படம் பிடித்துக் காட்ட என்பது அவரது வாதம்.
...
பண்பாடற்றவர்களெனக் கருதப்படும் வெளி நாட்டவர் கூட, வறுமையைச் சித்தரித்துக் கதை எழுதும் போது, பண்பாட்டோடு எழுதினார்கள்.
ஆனால், மகளைக் கெடுத்த தந்தையை, வறுமைக்கு உதாரணமாக்கினார் 'முற்போக்கு'க் கதாசிரியர். அவன் அந்தப் புத்தகத்தை முழுவதையும் படித்து முடித்தான். தமிழ்ச் சமுதாயத்தின் எதிர் காலத்தைப் பற்றிய பயம், அவன் நெஞ்சில் சூழ்ந்தது. அடுத்தடுத்து 'குமரிக் கோட்டம்' 'ரோமாபுரி ராணிகள்' 'கபோதிபுரக் காதல்' முதலிய நூல்களைப் படித்தான்.
அந்த நூல்களில், பலரிடம் கெட்ட ஒருத்தியை பளபளப்பாக வருணித்திருந்தார் கட்சியின் மூலத் தலைவர். சமுதாயத்தில் தாழ்ந்து கிடப்போர், மேலெழ வேண்டும், என்ற நோக்கத்திற்கு, இவை எவ்வகையில் துணை புரியும்? எழுதுகின்றவனின் வெறித்தனத்தை இவையுணர்த்துமேயல்லாது, நாட்டுக்கு என்ன பயன் தரும்? பொது இடத்திலோ, குல மகளிர் மத்தியிலோ வைக்கக் கூடாத அளவுக்குப் பகுத்தறிவு வீரர்கள் புத்தகம் எழுதுவானேன்?
மாளிகையைப் பார்க்க வந்தவன் மாட்டுக் கொட்டகையை ரசிப்பது போல், ஒளி உலகைக் காணவந்த சீர்திருத்தவாதிகள், இருண்ட பகுதிகளையே சுவைத்து எழுதினார்கள். 'ஆபாசம்' என்ற கணக்கில் நான் சேர்க்க வரவில்லை. அவை என்ன பயன் தரும் என்பதுதான் என் கேள்வி.
அன்றிலிருந்தே கட்சியின் முக்கியஸ்தர்கள் எழுதும் கதை கட்டுரைகளை அவன் படிப்பதில்லை.
ஓடிப்போனவர்கள் கதையும், உருப்படாதவள் வாழ்க்கைச் சித்திரமும்; ஆட்டங்கண்ட கிழவனுக்கெழுந்த ஆசையும், அந்தி நேரத்து சுந்தரியின் தளுக்கும் நிரம்பி வழிந்த கழகப் புத்தகங்கள், ஆயிரக்கணக்கில் விற்பனையாயின. இளைஞர்களை அந்த மயக்கம் பற்றியது உண்மை. வெளியிலிருந்து வந்த விமர்சனங்களை வெறுத்தொதுக்கி அவற்றை இளைஞர்கள் விரும்பிப் படித்தார்கள்.
நாகரிகம் மிகுந்த ஒரு சமுதாயத்தின், அழிவு காலம் அதிலேதான் தொடங்கிற்று என்றும் சொல்லலாம். கட்சியின் வளர்ச்சியை அவன் கவனிக்க ஆரம்பித்தான். ஏராளமானவர்கள் கையில் கழகப் புத்தகங்கள் தவழ ஆரம்பித்தன. அடிப்படை அமைப்பில்லாத கட்சி, நல்ல வளர்ச்சியினைப் பெறத் தொடங்கிற்று.
இந்தக் கட்டுரை கிட்டத்தட்ட 1965ம் ஆண்டு வாக்கில் எழுதப்பட்டது. இதில் அரசியல் சாயங்களை விலக்கிவிட்டுப் பார்த்தால் கூட தமிழகத்தின் இன்றைய நிலை புரியும். மக்கள் அக்பர், ஔரங்கசீப் வரலாறுகளை ஒதுக்கிவிட்டு சமீபத்திய வரலாறுகளைப் படித்தால் உதவியாக இருக்கும் போலிருக்கிறது.
ஒரு முகம்.. ஒரு பெயர்... ஒரு முகவரி...
தெரிந்த முகங்களை விட, பெயர்களை விட, உருவங்களை விட, அடையாளமில்லாத அருவமான மனிதர்கள் என்னைக் கவர்கிறார்கள். அவர்களிடமிருந்து நான் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவர்களும் அப்படியே. இது ஒரு ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மனநிலையைத் தருகிறது. தெரிந்த முகங்களிடம் தான் எனக்கு பல எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. என்னிடம் பலர் பலவற்றை எதிர்பார்க்கிறார்கள். இவை வாழ்வின் ஏமாற்றங்களை எனக்கு அறிமுகப்படுத்துகின்றன. கோபம், வஞ்சம், பொறாமை என மனித வாழ்க்கையின் சகல அசுத்தங்களையும் இந்த எதிர்பார்ப்புகள் எனக்குள் ஏற்படுத்துகின்றன. அந்த முகமும், பெயரும் தெரிந்ததனாலேயே நான் அவர்களிடம் யாசிப்பவனாகி விடுகிறேன்.
எந்த உறவாயினும் சரி, அது தொடங்கும் போது பனியிலிருந்து உருகும் நீர் போல, வானிருந்து வரும் மழை போலத்தான் தூய்மையாயிருக்கிறது. போகப் போக, என் மனதில் பல எதிர்பார்ப்புகள். எவ்வாறென்று நான் விளக்கிச் சொல்லத் தேவையில்லை. இது உறவுகளுக்கு மட்டுமல்ல; மொத்தமாக மனித உயிரின் தேடல் எதிர்பார்ப்புகளில் தான் தொடங்குகிறது; ஏமாற்றத்தில் நிறைவுறுகிறது.
வெற்றியின் ரகசியம் போல தோல்விக்கும் ஒரு ரகசியம் உண்டு. அது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆனால் நாம் அதை உணர மறுக்கிறோம். நாம் வாழ்வின் தோல்வியின் ரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டுமானல் நம் எதிர்பார்ப்புகளைப் பற்றி சிந்தித்தால் போதும். எத்தனையோ சந்தர்ப்பங்களில் இந்த உண்மை நம் கண் முன்னே வந்து கண்ணத்தில் அறைந்தாற்போல் சொல்லிவிட்டுப் போகும். ஆனால் அது அடுத்த நொடி என் அறிவிலிருந்து அகற்றப்பட்டுவிடும். அதுவும் எத்தனை முறை? ஆயிரமாயிரம் முறை; என் வாழ்வின் எல்லா நிமிடங்களிலும் நான் சந்தித்த உண்மை; ஆனால் உணர மறுக்கும் உண்மை.
இன்று என் தோல்விகளைப் பட்டியலிட்டுப் பார்க்கிறேன். என் தந்தையின், தாயின், உடன் பிறந்தோரின், நண்பனின், காதலியின், உறவுகளின் தோல்விகளையும் சேர்த்துத் தான். எல்லாருடைய தோல்விக்கும் ஒன்றே காரணம். அது எதிர்பார்ப்புகள்.
நானும் ஒரு நாள் இந்தப் புற உலகின் அடையாளங்களிலிருந்து விடுபட்டு, அருவமாக விரும்புகிறேன். அது என்னில் இருந்து என்னை எனக்கு எடுத்துக் காட்டும். அதற்காகக் காத்திருப்பேன்.
மீண்டும் சந்திப்போம்.
முட்டாள் மூவர் (சிறுகதை முயற்சி)
பொதுவாகப் பேருந்துப் பயணங்களில் நம் பக்கத்தில் அமர்வது யாரோ என்ற எதிர்பார்ப்பு இருக்கும். எப்போதும் ஜன்னல் இருக்கையில் அமர்வது ஒன்றே குறி. ஏனோ தெரியவில்லை. சிறு வயதிலிருந்து அந்த பழக்கம். இப்போதும் அது தொடர்கிறது. நான் குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறேனோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் தினமும் நான் காணும் காட்சி நான் மட்டும் அப்படி அல்ல என்பதைப் புரிய வைத்தது. அவ்வளவு பெரிய பேருந்தில் வெறும் பத்து பதினைந்து பேர் இருந்த்தாலும், அவ்வளவு பேரும் ஒரு தனி இருக்கையில் தான் இருப்பார்கள். ஜன்னலுக்குப் பக்கத்தில். அப்படிப்பட்ட தனிமை வேண்டியிருக்கிறது. அதோடு, ஜன்னல் தரும் பார்வை மிக முக்கியம். என் கண்கள் பேருந்த்தைவிட வேகமாகப் பயணிக்கும். என்னைக் கடக்க முயற்சிக்கும் காற்று என் கண்களையும், நாசிகளையும் துளைத்துச் செல்லும். வேகமாக பின்னோக்கிப் பயனிக்கும் தார் சாலை ஒரு மாயாஜாலம். நான் மாயைகளைப் பெரிதும் விரும்புகிறேன். என் கண்களைக் கட்டிப்போடவே விரும்புகிறேன். கண் திறந்து கொண்டே தூங்க வேண்டுகிறேன். உண்மையைப் புறம் தள்ளவே நினைக்கிறேன். ஏமாற்றப்பட ஏங்குகிறேன். இசை, மொழி, காதல், காமம், மற்றும் பிற எல்லாம் தரும் உணர்ச்சிகளில் மெய் மறக்கவே விரும்புகிறேன். சொல்லப்போனால், எனக்கும் போதையின் அடிமையாய் இருப்பவனுக்கும் பெரிய வித்தியாசமில்லை. பேருந்துப் பயணங்களில் நான் காணும் பெண்கள் எல்லாரும் என்னைப் பார்ப்பதாகவே நினைத்துக் கொள்வேன். அவர்கள் என்னிடம் வந்து பேசினால் என்ன சொல்வது என்பது வரை தயார் செய்து கொள்வேன். அவர்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதாகக் காட்டிக் கொள்ள முயற்சி செய்வேன். அது சாத்தியமில்லை. ஆனால் நான் என்னை ஏமாற்றிக் கொள்வதில் பேரானந்தம் காண்பவன்.
அவள் என் பக்கத்தில் வந்தமர்ந்ததும் மிக்க மகிழ்ச்சி. இது போன்ற சமயங்களில் நானாகப் பேச ஆரம்பிப்பது கிடையாது. ஓரக்கண்ணால் பார்ப்பதோடு சரி. எப்போதும் போல, அவள் என்னையே பார்த்துக் கொண்டிருப்பாள் என்ற பிரம்மை வேறு. அவள் பேசினால் என்ன பேசுவது என்று யோசித்தாகிவிட்டது. ஆனால் பேச்சைத் துவக்குவது மட்டும் கிடையாது. அது ஆணென்ற கர்வமா? இல்லை, பார்க்கும் பெண்கள் எல்லாரையுமே காதலிகளாக பாவிப்பதால் ஏற்படும் பதட்டத்தாலா? என்பது தெரியாது. கர்வமாகக்கூட இருக்கலாம். என் சமுதாயமும், வாழ்க்கை முறையும் அப்படியே என்னை வார்த்திருக்கிறது. அறியப்படாமல் இருந்தாலும், ஆண்மகனின் ஒவ்வொரு செயலிலும் அந்த ஆணவம் ஒளிந்திருப்பது சாத்தியமே. சிலர் அதை மறைக்க முயற்சிப்பார்கள். சிலர் பொய்யாக மறுக்க முயற்சிப்பார்கள். நான் எதையுமே முயல்வதில்லை. ஏனென்றால், அது என்னுடைய 'நான்' என்பதில் இரண்டறக் கலந்து விட்டது. நானும் அதை அழிக்க முயற்சி செய்யலாம். வாலிபத்தில், அதற்கான நேரம் கிடையாது. வீண் முயற்சிகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.
அவள் பேசத்துவங்கிய பிறகுதான் தெரிந்தது, அவளும் நானும் ஒரே அலுவலகத்தில்தான் வேலை பார்க்கிறோம் என்று. மிகவும் சந்தோஷப்பட்டேன். அற்ப சந்தோஷம். அவள் ஒன்றும் பேரழகி இல்லை. அதற்காக மோசமான அழகும் இல்லை. என் வசதியைப் போன்றே நடுத்தரமானது. அவள் புன்னகைப்பது, ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவள் செலவழிப்பதைப் போன்றே இருக்கும். புன்னகையைச் சேமித்தே செலவழிப்பாள் போலும். ஓடை சில கற்களைத் தாண்டிச் செல்லும் போது ஏற்படும் சிறிய சலசலப்பைப் போன்றதொரு சோகம் அவள் முகத்தில் இழையோடியது. அதை மறைக்க இந்த கஞ்சத்தனமான புன்னகை போதவில்லை. இதை எண்ணிக் கொண்டிருக்கும் போதே, நாங்கள் இறங்கும் இடம் வந்து விட்டிருந்தது. மீண்டும் சந்திப்பதாகக் கூறி அவள் வேறு வழியில் சென்றாள். அவள் அலுவகக் கட்டிடம் எங்கே இருக்கிறது என்ற விவரம் கூட கேட்காமல் விட்டுவிட்டேன். ஒரே அலுவலகம்தானெ என்ற நம்பிக்கை என்னை கவலையிலிருந்து காப்பாற்றியது.
அன்றய நாள் முழுவதும் அலுவல் மிக பரபரப்பாக இருந்ததால் மற்றது எதுவும் சிந்தனையில் இல்லை. வீடு வந்து, உணவருந்த்திப் படுக்கைக்கு வந்தாயிற்று. ஏனோ தூக்கம் வரவில்லை. இன்று நான் சந்தித்த பெண் நினைவிற்கு வந்தாள். மீண்டும் நினைவிற்கு வரும் அளவிற்கு ஒன்றும் அவள் அழகி இல்லையே. பின் ஏன் நான் அந்த பெண்ணைப் பற்றி சிந்திக்க வேண்டும். ஏதாவது ஒரு காரணமாவது இருந்தாக வேண்டும். எனக்கே தெரியாமல் ஏதாவது ஒன்று என்னைக் கவர முயற்சித்து, அதில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் இது சாத்தியமே இல்லை. சில நேரங்களில், நம் விருப்பு வெறுப்புகளை நாமே அறிந்து கொள்வது கடினமாவதுண்டு. நான் யார் என்பதில் தொடங்கும் விஷயம் அது. என் மனதை நானே கட்டுப்படுத்துகிறேன் என்று நம்பினால் என்னைத்தவிர இந்த உலகத்தில் பெரிய முட்டாள் யாருமில்லை என்பதை அறிவேன். என் சமூகமும், சூழலும், மனிதர்களும், தேவைகளும், எல்லாவற்றிற்கும் மேலாக, ரசயனங்களும் என்னை, என் மனதை, என் மூளையை இயக்குகின்றன. நான், என் மனது, என் மூளை என்று பிரித்துச் சொல்வதில் தவறில்லை. இவற்றிற்கிடையே சிறிய ஒற்றுமையே உண்டு. சில எல்லைகளுக்குட்பட்டு, இவை எல்லாம் ஒன்றாகும். பிறிதொரு தளத்தில் இவை சிதறுறும். என்னைத்தவிர எல்லாமும் என்னை இயக்குமளவிற்கு நான் தாழ்ந்துவிட்டேன். மரங்களும், செடிகளும், பறவைகளும், விலங்குகளும், இன்னும் சுயத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். நான் மட்டும் என் ஆறாவது அறிவை அறிவித்துக் கொண்டு வீழ்ந்து கொண்டிருக்கிறேன். என் எதிரிகளே என்னை இயக்குகிறார்கள்.
அவளைப் பார்த்து மூன்று நாட்கள் கடந்திருந்தது. அவள் முகம் என் மனத்திரையில் இருந்து விலகத் துவங்கிய போது, மீண்டும் எதிர்ப்பட்டாள். என்ன மாயம்? என் மனதில் இருந்து விலாகமல் இருக்கவே காலம் அவளை மீண்டும் அனுப்பி வைத்ததாக நினைத்தேன். இம்முறை, கொஞ்சம் அழுத்தமான புன்னகையுடன் உரையாடல் தொடங்கியது. இருவரும் சேர்ந்து மதிய உணவிற்குச் சந்திப்பதாக முடிவு. அன்றிலிருந்து தினமும் மதிய வேளையில் சந்தித்துக் கொள்வது வழக்கமாய் ஆகிவிட்டது. நாளடைவில் அது மாலை வேளையிலும் தொடந்தது. தொலைபேசியில் மணிக்கணக்கில் அரட்டை அடிப்பது கடமை. காலம் செல்லச் செல்ல எங்கள் உறவு தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டே இருந்தது. ஒவ்வொருமுறையும், அது முன்னையும் விட அழுத்தமாகவே இருந்தது.
அன்று மாலை சீக்கிரமே வந்து விட்டிருந்தது. தூறலின் இடையே நுழைந்து வரும் காற்று என்னை குளிர்வித்தது. சூடாக ஏதாவது கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. நான் அவளுக்காகக் காத்திருந்தேன். வந்து விட்டாள். என்றைக்கும் இல்லாத அளவு இன்றைக்கு அவள் என்னைச் சுண்டி இழுத்தாள். மழையில் நனைந்திருந்ததால், அவளின் தேகம் ஆடையை விழுங்கியிருந்தது. என் மனதின் ஓரத்தில் குப்பையைப் போன்று குவித்து வைத்திருந்த நல்லவற்றை எல்லாம் அபகரித்திருந்தது. என் மனப்பேய் எழுந்து ஆடத் துவங்கிவிட்டதன் அறிகுறி தென்பட்டது. மனதில் தோன்றும் சலனம், கையை நீட்டிக் கொண்டே வேண்டாம் என்று சொல்லும். அப்பட்டமான கபடம் அது. சலனம் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாத் தயங்கும். ஆனால், அது கர்ப்பம் போன்றது. காலம் செல்லச் செல்ல தன்னால் வெளியே தெரியும். இந்த அசிங்கத்தின் நிர்வானம் நாணம் என்னும் ஆடை தேடும். சமயங்களில் வெற்றியும் பெறக்கூடும். அவளுக்கும் இவையெல்லாம் தோன்றியிருக்க வேண்டும். இல்லையெனில், என் பார்வை அவளை விழுங்கும் போது அமைதியாய் அனுமதித்திருக்க மாட்டாள். இரண்டடி இடைவெளியில் நடந்தவள், அருகில் வந்து கை கோர்த்திருக்கமாட்டாள்.
காமத்தீ உடலை ஆக்ரமிக்கத் தயாராகிக் கொண்டிருந்தது. காமம் கடல் போலும். கடலுக்கு இந்த மண்ணின் மீது தீராத பற்று. இந்த உலகையே விழுங்க முயற்சிக்கிறது. எவ்வளவு மண்ணை விழுங்கினாலும், மீண்டும் கரையைத் தொடாமல் இருப்பதில்லை. ஆம், சதைப் பிண்டங்களின் மீது தீராத காதல். காமம் தீர்வதில்லை. காமம் தோற்பதில்லை. காமம் மறைவதில்லை. காமத்தின் பசி தன்னையே கூட விழுங்க முயற்சிக்கும். விழுங்கவும் கூடும். தன்னையே புசித்து, அது முன்னை விடவும் பலமானதாகவே மீண்டும் பிறக்கும். அவள் கைகோர்த்தவுடன், எங்கள் பிடி தானாகவே இறுகிக் கொண்டது. இயந்திர மனிதனைப் போல இயங்கினேன். காமம் கொடுத்த கட்டளைகளை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டிருந்தேன்.
இருவரும் தனியான இடத்தில் ஒன்றானோம். காமத்தின் ராஜ்ஜியத்தில் பிரஜைகள் பேசக்கூடாது. மௌனமாய், அமைதியாய் நாங்கள் ஆவேசமானோம். கைகள் எதைஎதையோ தேடிக் கொண்டு அலைந்தன. அவசர கதியில், திருட வந்தவனைப் போல ஏதாவது கிடைத்தால் போதும் என்பது போல இருந்தது அந்தத் தேடல். பலமாக வீசும் காற்றுக்கு, நேற்றைய உதிர்ந்த இலைகளுக்கும், இன்று பூத்த பூவிற்குமான வித்தியாசம் தெரிவதில்லை. அது எல்லாவற்றையும் சேர்த்தே அடித்துச் செல்லும். அது போல இருந்தது என் காமம். அவளுடையது, சற்று வித்தியாசமாய் இருந்தது. அவள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்பவளாய் இருந்தாள். அவள் கொடுப்பவளாயிருந்தாலும், அதில் பெருமகிழ்ச்சி அடைபவள். கொடுப்பது போன்று கொடுத்துப் இரட்டிப்பாகப் பெறுபவள் போலும். அவள் ஆழ்ந்து அனுபவித்திருந்தாள். வார்த்தைகளும், புன்னகைகளும் மட்டுமே கொண்டிருந்த உதடுகளுக்கு முத்தங்கள் பரிமாறப்பட்டன. பந்தியில் கூச்சமில்லாமல் கேட்டுக் கேட்டு உணவருந்துவதைப் போல மீண்டும் மீண்டும் மீண்டும். எங்களின் மூச்சுக்காற்று, சற்றே ஓய்வு வேண்டுமென்று மன்றாடியது.
நாங்கள் அடுத்தக் கட்டத்திற்கு ஆயத்தமான போது, ஒரு இடம் தேவைப்பட்டது. அவளுடைய வீட்டிற்கு விரைந்தோம். ஆடைகளைக் களைந்து கொண்டே கட்டிலில் குதித்த போது, ஏதோ தட்டுப்பட்டது. அவசரத்தில், இடது கையால் தள்ளிவிட்டேன். கண்ணாடி போட்ட புகைப்படமொன்று கீழே விழுந்து நொறுங்கியது. அது என் மனத்தையும் சேர்த்தே நொறுக்கியது. கணவனைப் பிரிந்து வாழ்பவள் போலும். மேல் நோக்கி எழுந்த புகை போல, என் காமம் சட்டெனத் தொலைந்தே போனது. வேலை இருப்பதாகச் சொல்லி உடனே கிளம்பிவிட்டேன். அவள் வீட்டை விட்டு வெளியேறும் முன்பே, என் முன்னாள் காதலிகள் வரிசையாக என் கண்ணில் தென்பட ஆரம்பித்தார்கள். நான், என் மூளை, என் மனது மூவரும் முட்டாளானோம்.
சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு...
1. குச்சி மிட்டாய்
2. தேன் மிட்டாய்
3. பஞ்சு மிட்டாய்
4. ஜவ்வு மிட்டாய்
5. குச்சி ஐஸ்
6. பால் ஐஸ்
7. குல்ஃபி ஐஸ்
8. சோன் பப்டி
9. மசலா காரக் கடலை
10. இளந்தைப் பழம்
11. இளந்தைப் பொடி
12. மாங்காய் வித் பொடி
13. பெப்ஸி ஐஸ்
14. ஜிகிர்தண்டா
15. சேமியா ஐஸ்
16. பொட்டலம் (பக்கோடா, மெது பக்கோடா, காராசேவு... ஒரு ரூபா)
17. வெள்ளரிப் பிஞ்சு வித் பொடி
18. கொய்யாப்பழம்
19. முந்திரி (பன்ருட்டி பஸ்டான்ட்)
20. வத்தல் (ஒன்னு 5 பைசா)
21. பூமர் பப்புள் கம்
22. சென்டர் ஃப்ரெஷ்
23. கடலை மிட்டாய்
24. பொறி/ பட்டானி
25. கல்கண்டு
26. எக்ளேர்ஸ் (50 பைசா)
27. ஆசை சாக்லேட் (25 பைசா)
28. காஃபி பைட் (50 பைசா)
29. பொவன்டோ
30. காளி மார்க் ஜிஞ்சர் சோடா
31. தேங்காய் பன்
இன்னும் நிறைய....
உங்கள் நினைவிலிருப்பவை இங்கே இல்லாமலிருந்தால் பின்னூட்டத்தில் எழுதவும்.
ஆயிரத்தில் ஒருவன்: சர்ச்சைகளும் சரித்திரமும் (சொல்வனம்)
ஜி.சாமிநாதன்
சமீபத்தில் வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் தொடர்பாக எழுந்த வரலாற்றுச் சர்ச்சைகள் குறித்துத் தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவன நிறுவனரும், ஆய்வாளருமான எஸ். இராமச்சந்திரன் அவர்களின் கருத்தினை அறிய விரும்பினோம். சொல்வனத்துக்காக அவருடன் உரையாடியவர் ஆய்வாளர் ஜி. சாமிநாதன்.
Interesting interview in 'Solvanam'
Read more at http://solvanam.com/?p=6441
கர்ண மோட்சம் - National award winning short film (S. Ramakrishnan)
நானொரு சூரியன்
ஒவ்வொருமுறை விழும் போதும் எழுகிறேன்
எழும் போதெல்லாம் விழுகிறேன்...
எல்லாமே உன்னால்...
எது காதல்?
முன்னோக்கி நாட்கள் நகர
ஓரிடத்தில் நாம் அமர
யாரிடத்திலும் இல்லாத அன்பு
உன்னிடம் மட்டும்.
பழைய எழுத்து
என் மயில் நினைவு
என் ஒருமையை ஒழிக்க
ஒரு மயில்
நித்தம் நீ இங்கு வரத்தேவையில்லை
என் நினைவுக்கு வந்தாலே போதுமடி
இடைவெளி விடாது இயங்கினாலும்
இடையிடையே உன் நினைவு வந்து
எனை இன்பப்படுத்தும்
நீ இல்லாத நேரங்கள்
ஒரு நொடி கழிக்க
ஒரு மணி யோசித்தேன்
எழுத்துக்கோர் அர்த்தம் கொண்டு பேசுவாய்
நீ மொழிகையில் என் மொழி ஊனமாகும்
தமிழில் இவ்வளவு தெரியாத அர்த்தங்களா?
காதல் அருவமாய் இருந்தாலும்
அதை வழிபடக் கற்றுக்கொண்டேன்
'காத்தல்'
எனக்கும் இறைவனுக்கும் பொதுவாகிப் போயிற்று
ஒவ்வொரு முறை உனைக் காணும் பொழுதும்
புதுமையாய்ப் புகழ் பாடக் கற்றுக் கொள்கிறேன்