Pages

தேடாத ஞானம் (சிறுகதை முயற்சி)

"எழுந்துருடா கண்ணா... நேரமாச்சுப் பாரு..." என்று சொல்லிக்கொண்டே கணேசய்யர் அங்கு சிதறிக்கிடந்த காகிதங்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தார்.

"இன்னும் கொஞ்ச நேரம் தாத்தா... வேணுன்னா நீயே வந்து தூக்கேன்..." என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டான் ரமேஷ்.

"நான் குளிச்சு ஜபமெல்லாம் ஆச்சு. இப்போ உன்ன எப்டி தூக்கறது. அதோட உங்க அப்பன் வந்தான்னா நீ தொலஞ்சே... சீக்கிரமா எழுந்து பல் தேச்சு குளிச்சுட்டு கிளம்பிடு... இல்லேன்னா அவன் வந்தா ருத்ர தாண்டவமாடுவான்... நம்மளால ஆகாதுப்பா..."

கணேசய்யர் ஒரு ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். உள்ளூரில் டுட்டோரியல் காலேஜ் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார். அதோடு, ஒரு நர்சரி பள்ளியும் உண்டு. குழந்தைகள் மேல் அவ்வளவு பிரியம் அவருக்கு. இரண்டு பிள்ளைகள். மூத்தவன் ராமநாதன். ராமநாதன் சிங்கப்பூரில் ஒரு நல்ல வேலையில் இருக்கிறான். ராமநாதனுக்கு ஒரே மகன் ரமேஷ். கணேசய்யரின் இரண்டாவது மகன் வைத்தியநாதன். ஊரிலேயே ஒரு விளம்பர ஏஜன்ஸியும், இன்டர்நெட் பிரவுசிங் சென்டரும் வைத்திருக்கிறான். வைத்திக்கு மணமாகி இரண்டு குழந்தைகள். குழந்தைகள் இருவரும் சென்னையில் இருக்கிறார்கள். அவர்கள் சென்னையில் இருப்பதற்குக் காரணம், டான் பாஸ்கோ பள்ளிக்கூடத்தில்தான் படிக்கவேண்டும் என்பது மருமகளின் ஆசை. கணேசய்யர் "இங்க நானே பள்ளிக்கூடம் வச்சு நடத்தறேன். என் பேரப்பசங்களுக்கு இடம் கிடையாதா? அதோட சென்னையில் ஒன்றும் இங்கே இருப்பதை விட மேலான படிப்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. என்னமோ அவங்க ஆசை. மருமகள் சொல்லும் போது நம்ம என்ன சொல்றது...?" என்று வருத்தப்படுவார்.

ரமேஷைப் பார்க்கும் போது அவருக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கும். தவமிருந்து கிடைத்த பேரப்பிள்ளையாயிற்றே. தவமிருந்து பெற்ற பிள்ளை என்று பலபேர் சொல்லக் கேட்டதுண்டு. ஆனால் இவருக்கு ரமேஷைப் பொறுத்தவரை தவமிருந்து கிடைத்த பேரப்பிள்ளை. ராமநாதன் ஒரு கட்டத்தில் சாமியாராகவே போயிருப்பான். அவனை வழிக்குக் கொண்டு வந்து எல்லாரையும் போல குடும்ப வாழ்க்கையில் திருப்பிவிட கணேசய்யர் பிரம்மப் பிரயத்தனம் பட்டிருக்கிறார். சாமியார் சமாச்சாரங்களில் ராமநாதன் மீது வருத்தமிருந்தாலும், அவனைப்பற்றி நல்ல அபிப்ராயமே கொண்டிருந்தார். நன்றாகப் படிப்பான். பாடுவான். ரொம்ப புத்திசாலி. ராமநாதனைப் பற்றி இப்போதும் வருத்தப்படுவார். ஆனால் முன்பு அவன் இருந்ததற்கு இப்போது எவ்வளவோ பரவாயில்லை.

அவன் அப்போது அமெரிக்காவில் பிஹெச்டி படித்துக் கொண்டிருந்தான். வருடம் ஒருமுறை வீட்டிற்கு வருவான். வரும்போதெல்லாம் அவனுடைய நடவடிக்கை கணேசய்யருக்கு வருத்தமளிக்கக் கூடியதாகவே இருந்தது. மிகப் பிரமாதமாகப் படித்து வந்தாலும், எல்லாரையும் போல அவன் இல்லை. எப்பொழுதும் புத்தகங்கள் படித்துக் கொண்டிருப்பான். உலக விவரங்கள், வியாபாரம், அரசியல் பற்றியும் அறிவு உண்டு. வேதம் படிப்பான். வேதாந்தம் பேசுவான். அதே சமயம் சம்பிரதாயங்களை மறுப்பான். திருமணம், குடும்ப வாழ்க்கை வீண் என்று வாதம் செய்வான். கணேசய்யருக்கு மிகவும் கவலையாக இருக்கும். ஆனால் ஒன்றும் சொல்ல மாட்டார். கொஞ்சநாளில் அவனாகவே சரியாகிவிடுவான் என்ற நம்பிக்கை இருந்தது அவருக்கு. அதோடு வாழ்க்கையில் மிகுந்த அனுபவம் கொண்டவர்களுக்கு நிச்சயம் பரிச்சயமானது 'மாற்றம்'. அவர் மாற்றங்கள் மீது மாறாத நம்பிக்கை கொண்டிருந்தார். எல்லாமும் ஒரு சுழற்சி தான். பல சமயங்களில் நாம் பயணித்த அதே இடங்களுக்கு மீண்டும் வருகையில் ஞாபகம் இருப்பதில்லை. சில சமயங்களில் மாறிவிட்டது நினைவுக்கு வரும்; நினைவுக்கு வந்தவுடன் ஒரு குற்ற உணர்ச்சி வந்து குடி கொள்ளும். அது தேவையில்லை என்றும் நினைப்பவர் கணேசய்யர்.

பிஹெச்டி நான்காம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் போது ராமநாதன் இந்தியாவுக்கு ஓடிவந்துவிட்டதாகச் செய்தி வந்தது. கணேசய்யருக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் நம்பிக்கை என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. அவன் கல்கத்தா சென்றிருப்பதாகவும் ராமகிருஷ்ண மடத்தில் சேரப் போவதாகவும் செய்தி வந்தது. அவருக்கு அழுவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை. ஒரு பிராமணனாய், தன்னுடைய மகன் வேதம் பயின்றதும், வேதாந்தம் அறிந்ததும் அவருக்கு ரகசியமான மகிழ்ச்சியைத்தான் தந்திருக்கிறது. அதுவும் இப்படிக் காலம் கெட்ட கலி காலத்தில் தன் மகன் இப்படி இருந்தது அவருக்கு கொஞ்சமாவது மனநிறைவை அளித்திருக்கிறது. அதை அவர் வெளியில் சொன்னதில்லை. அப்படி ஒரு புறம் மகிழ்ச்சியாய் இருந்தாலும் இந்தக் காலத்தில் வேதம் படிப்பவனுக்கு மரியாதை இல்லை என்று நினைத்ததால் தன் மகன் ஒரு ஆராய்ச்சியாளன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைதான். கடல் கடந்து போகலாம், நாளைக்கு என்று சேர்த்து வைத்துக் கொள்ளலாம், வேதம் பிடித்தால் படிக்கலாம் இல்லையென்றால் பரவாயில்லை என்று நவீன கால பிராமணத்துவத்தை அவர் ஏற்றுக் கொண்டுதான் விட்டார். சில சமயம் அவருக்கு சந்தேகமாய் இருக்கும் போதெல்லாம் தன்னுடைய பூனூலை ரகசியமாகத் தொட்டுப் பார்த்துக் கொள்வார். பத்து காயத்ரி சொல்லுவார். ஆனால் தான் நினைத்ததை மட்டும் வெளியில் சொல்லமாட்டார். குடித்துவிட்டுத் தெருவில் விழுந்து கிடக்கும், மாமிசம் சாப்பிடும், தேவடியாள் வீட்டிற்குச் செல்லும் பல வகையான பிராமணர்களுக்கு மத்தியில் நான் தேவலை என்று நினைத்துக் கொள்வார். இன்னும் பிராம்மணனாக இருப்பதாகவே தன்னைத் தேற்றிக் கொள்வார்.

ராமநாதன் கல்கத்தா சென்று கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் அங்கே இருந்தான். என்ன காரணமோ என்னவோ, அங்கிருந்து வெளியேறி ஊருக்கு வந்துவிட்டான். இந்த மூன்று வருடங்கள் கணேசய்யர் பட்ட கஷ்டம் அவருக்கு மட்டுமே தெரியும். அவரால் என்ன செய்ய முடிந்திருக்கும். தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை அடிக்கவா முடியும். ராமநாதன் ஊருக்குத் திரும்பியது மகிழ்ச்சியே. அவன் திரும்பி வந்து ஏதோ சுய தொழில் செய்வதாக ஏற்பாடு. தொழிலும் செய்து கொண்டிருந்தான். அவன் படிப்பிற்கும், அறிவிற்கும் ஏற்ப சம்பாதிக்கவில்லை என்றாலும் வீட்டில் இருப்பது கணேசய்யருக்கு மகிழ்ச்சிதான். அவனுக்கு ஒரு திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் என்று பேசும் போதெல்லாம் அவன் ஒத்துக்கொள்ள மாட்டான். அதற்கும் சரியென்றுதான் அவர் இருந்தார். மகன் தன்னோடு இருப்பது ஒன்றே போதும் என்பது போல. ஆனால் அவருக்கு மீண்டும் ஒரு அடி. ராமநாதன் இப்போது புத்த மதத்தை தழுவப் போவதாகவும், புத்த பிட்சுவாக வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கப் போவதாகவும் அறிவித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டான். கணேசய்யருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. கேட்டால், அறுதியான உண்மையை அறிந்து கொள்ளவே தான் முயற்சிப்பதாகவும் அதற்கு குடும்ப வாழ்க்கை தடையாக இருப்பதாகவும் சொன்னான். என்ன உண்மை? எனக்குத் தெரியாத உண்மை? என் தகப்பனுக்குத் தெரியாதது, என் சுற்றத்தில் இருப்பவனுக்குத் தெரியாதது? அதோடு குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்றும் சொன்னான். அவர் அவனுக்கு என்ன குறை வைத்தார் என்று சிந்தித்துக் கொண்டிருந்தார். ஆனால் கணேசய்யர் சென்ற முறையையும் விட அமைதியாய் இருந்தார். வாய் திறக்கவில்லை. தானே மீண்டும் வருவான் என்று நினைத்திருந்தார் போலும்.

அவர் நினைத்ததைப் போலவே மீண்டும் திரும்பி வந்தான். திரும்பி வந்தானே தவிர திருந்தி வரவில்லை என்று தெரிந்தது அவருக்கு. புத்த பிட்சுவாக வேண்டுமானால் தாயினுடைய அனுமதி வேண்டும் என்று அவனைத் திருப்பி அனுப்பி விட்டார்கள். அவனும் இங்கே வந்து அழுது சிரித்து ஆர்ப்பாட்டம் செய்து பார்த்தான். ஆனால் அம்மா வாய் திறக்கவில்லை. அவனுக்கும் அம்மா அனுமதி கொடுத்துவிட்டதாகப் பொய் சொல்ல மணமில்லை. பொய் சொன்னால் புத்த பிட்சுவாகும் தகுதி அக்கணமே அகன்றுவிடும் என்று அவன் அறிந்திருந்தான். கடுமையாக முயற்சித்து விட்ட பிறகு கைவிட்டான். இதில் அவனுடைய அம்மாவின் பிடிவாதம் அவனுடையதை விடவும் அழுத்தமாக இருந்தது. அவள் அவனுடைய தாயல்லவா? இந்த நிகழ்வுக்குப் பிறகு மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப சற்று நாளாயிற்று அவனுக்கு. காலையில் மிகத் தாமதமாகத்தான் எழுவான். வேலைக்குச் செல்லமாட்டான். ஆனால் வீட்டில் அவனை ஒன்றும் சொல்வது கிடையாது. எப்படியாவது இங்கேயே இருந்துவிட்டுப் போகட்டும் என்று நினைத்துவிட்டார்கள். கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு தானே தன் வேலையை மீண்டும் தொடங்கினான். வெளியில் சென்று வருவான். மீண்டும் பழையபடி பேச ஆரம்பித்தான். கிட்டத்தட்ட ஒருவருடம் இப்படியே ஓடிய பிறகு மீண்டும் பூசைகள் செய்யத் தொடங்கினான். பழைய பூதம் மீண்டும் வந்துவிட்டதோ என்ற அச்சம் கணேசய்யருக்கு. ஆனால் இம்முறை வேறு மாதிரி. காலையில் இரண்டு மூண்று மணி நேரம் பூசை செய்தாலும், வழக்கம் போலவே வேலையெல்லாம் செய்து கொண்டிருந்தான். அதோடு நல்ல வருமானமும் ஈட்டிக் கொண்டிருந்தான். இந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவனுக்குத் திருமணம் செய்து வைத்தார் கணேசய்யர். அவருக்கு அப்பாடா என்றிருந்தது. ராமநாதனைத் திருமணம் செய்து கொண்டவள் மிக சாமர்த்தியசாலி. அவனை மீண்டும் வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டாள். நல்ல பணம், நல்ல சேமிப்பு. இரண்டு வீடு கூட வாங்கிவிட்டான். இரண்டு வருடத்தில் ஒரு குழந்தை வேறு. கணேசய்யருக்கு அதனால்தான் ரமேஷைப் பார்க்கும் போது ஒரு தனி மகிழ்ச்சி வரும். தன் மகன் தொலைந்தே விட்டான் என்று நினைத்தப் பிறகு, இப்படி ஒரு குடும்பம் குழந்தை எல்லாம் இருப்பது கண்டு ஆனந்தம் தான்.

இவற்றையெல்லாம் யோசித்துக் கொண்டே ரமேஷைத் தூக்கி தன் இடுப்பில் உட்கார வைத்துக் கொண்டார். "கொல்லைக்குப் போயி ஈ தேக்கலாமா?" என்று கேட்டுக் கொண்டே கொல்லைக்கு அழைத்துச் சென்றார். "உங்க மடி ஆசாரமெல்லாம் இப்ப எங்க போச்சு சாமி?" என்று வேலைக்காரி கேட்க, கணேசய்யர் அதற்கு, "அடிப்போடி... பிரம்மச்சாரிக்கு ஒன்னும் தோஷமில்ல.. அதோட என் பேரன விட எனக்கென்னடி மடி ஆசாரம்" என்று சொல்லிக்கொண்டே கொல்லைக்குச் சென்றார்.

ரமேஷை இன்று பாடசாலையில் சேர்க்கப் போகிறான் ராமநாதன். கணேசய்யருக்கு இதில் சற்றும் உடன்பாடில்லை. "நன்னா படிக்கற கொழந்தய போயி பாடசாலைல விடப்போறியேடா... என்கிட்ட விட்டுடு... நான் அவன படிக்க வெச்சுக்கறேன்.." என்று மன்றாடிப் பார்த்தார். ராமநாதன் கேட்கவில்லை. மாறாக, தன் மகன் ஒரு பிராம்மணனாக வளருவதையே தான் விரும்புவதாகச் சொன்னான். பிராம்மணனாக வாழ வேதம் கற்கவேண்டும், கற்பிக்க வேண்டும் என்றும் சொன்னான். இதைச் செய்து விட்டால் மட்டும் பிராம்மணனாக முடியுமா என்ற சந்தேகம் நியாயமானதாகவே பட்டது கணேசய்யருக்கு. ஆனால் வழக்கம் போல இதையும் கேட்காமல் இருந்துவிட்டார். தானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டு போகட்டும் போ என்று விட்டுவிட்டார். ஆனால் இதில் அவருக்கு ஒரே ஆறுதல் தன்னுடைய பேரன் தன் பக்கத்திலேயே இருக்கப் போகிறான் என்பது. வேதபாடசாலை ஊருக்குப் பக்கத்திலேயே இருந்தது. விடுமுறைக்கு ரமேஷ் இங்கேதான் வருவான். அதோடு நாமும் அவனை சென்று பார்த்துக் கொள்ளலாம் என்ற ஆறுதல் இருந்தது அவருக்கு. ஆனால் இந்தக் குழந்தை எப்படி அங்கே இருப்பான் என்பது மிகுந்த கவலையளித்தது. ரமேஷ் ஒன்றும் கைக்குழந்தை அல்ல. எட்டு வயதாகிறது அவனுக்கு. இதுவரை அவன் வெளிநாட்டில் இருந்திருக்கிறான். சரளமாக ஆங்கிலம் பேசத் தெரிந்த அளவு தமிழ் தெரியாது அவனுக்கு. தரையில் உட்கார்ந்து சாப்பிடத்தெரியாது. ஆனால் பாடசாலையில் எல்லாவற்றையும் தானே பார்த்துக் கொள்ள வேண்டும். காலையில் பழையது, மதியம் பத்தியச் சாப்பாடு போன்றொரு உணவு. ருசியான சாப்பாட்டுக்கெல்லாம் வழியில்லை. யாராவது பெரிய மனிதர்களின் பிறந்தநாள், நினைவு நாளென்றால் இனிப்பு, பலகாரங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. துண்டு வேஷ்டியைத் தவிர வேறொன்று அணிய முடியாது. குடுமி வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி எதுவுமே இன்றைய வெளியுலக வாழ்க்கைக்குச் சற்றும் தொடர்பில்லாத இடமிது. ஆனால் அங்குதான் பிராம்மணர்கள் பிராம்மணர்களாக உருவாக்கப்படுகிறார்கள் என்று ராமநாதன் திடமாக எண்ணினான். அன்றைய தினம் ரமேஷைப் பாடசாலையில் கொண்டு சேர்த்தே விட்டான். கணேசய்யருக்கு வருத்தமாய் இருந்தாலும், தான் செய்தது சரியே என்று ராமநாதன் சொல்லிக்கொண்டே இருந்தான்.

ராமநாதன் ஊருக்குக் கிளம்பிச் சென்று பத்து நாட்கள் கூட இருக்காது. ரமேஷ் பாடசாலையில் இருந்து மூட்டை முடிச்செல்லாம் கட்டிக் கொண்டு, தன்னால் இனிமேல் அங்கே இருக்க முடியாதென்று சொல்லிவிட்டுத் தாத்தா வீட்டிற்கே வந்துவிட்டான். கணேசய்யருக்கு சிரிப்புதான் வந்தது. யாருடைய பிள்ளை இவன்? அப்பனுக்குத் தப்பாத பிள்ளை என்று நினைத்துக் கொண்டே அவனைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு அவன் திரும்பி வந்ததற்கான காரணத்தைக் கேட்டார். "தாத்தா... அங்க நிம்மதியே இல்ல தாத்தா.. ஏதோ எனக்கு சம்பந்தமில்லாத இடத்துல இருக்கறா மாதிரி இருந்தது.. நிம்மதியா நா ஆத்துலயே இருக்கேன்...". இதைக் கேட்ட கணேசய்யருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ராமநாதன் பத்து பனிரெண்டு வருடங்களுக்கு முன்னால் சொன்ன நிம்மதிக்கும் இதற்கும் என்ன தொடர்பென்று தெரியாமல் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கண் மூடினார். அது குழப்பமா அமைதியா என்று புரியவில்லை அவருக்கு. விநோதமாய் இருந்தது. அறுபது வயதிற்கு மேல் அவர் தேடாத ஞானம் அவரைத் தேடி வந்தது போலத் தோன்றியது.

4 comments:

santhanakrishnan said...

பலருக்கு தேடினாலும் கிடைக்காத
ஞானம் சிலருக்கு தேடிவருகிறது
மகன் ரூபத்திலோ அல்லது பேரன்
ரூபத்திலோ.

வாழ்த்துக்கள்.

Matangi Mawley said...

namma generation ippadi irukku! etha eduththaalumey oru extremist view. enga paatti- "vechchaa kudumi illa mottai"nnu adikkadi onnu solluvaa. athu thaan ninaivirkku varathu. enakku therinja oru case-um kitta thatta itha pola undu. enakku oru view undu. 7 vayasu varaikkum thaan oru kuzhandaya, namma ishta padi valarkka mudiyum. atharkku pin- intha samoohamum antha kuzhandayin suyamum thaan antha kuzhandaya muzhukka muzhukka valarkkum. appadippatta valarchchi-la nammoda eedupaadungarathu romba kuraivu thaan. substandard life-style-um ideas-um nirainja intha samudaaya soozhnilai-la- oru chinna maaruthalaaka kaattappadum entha oru vishayamumey- oru periya maatramaa antha kuzhandayoda vaazhkaila amainthu poi vidukirathu.

"amaithiya theduvathu" enbathu oru cliche. "amaithi kidaiththathu" enbathum oru cliche. intha rendu vishayangalayum "ezhuththu chiththarkal" thangal ezhuththukkalaal poosi moodi vittu- "purinthavarkal purinthu kollattum" endra innum ori cliche-vinaal moodi vidukiraarkal.

no offense intended.. :)

"srirangaththu devathaigal" la "thinna" nnu oru katha padichchen.. atha pola beautiful-a irunthathu!

romba nalla ezhuththu... kudos!

ராமகிருஷ்ணன் ராஜகோபாலன் said...

@Matangi:

நன்றி மாதங்கி. நீங்கள் சொல்வது மிகச் சரி. நம்முடைய தலமுறைக்கு ஒரு முடிவு வேண்டியிருக்கிறது. 'வெச்சா குடுமி, சரச்சா மொட்டை'. நமக்கு இடைப்பட்ட எதுவும் தேவையில்லை; ஆர்வமுமில்லை. மற்றபடி ஒரு குழந்தை ஒருவாறு வளர்வதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கு. அது தனி விவாதத்துக்குரியது.

அமைதியைத் தேடுவதென்பது ஒரு க்ளிஷே. ஆனா வாழ்க்கை என்பதே க்ளிஷேதான். எல்லோருக்கும் ஒரே உயிர், ஒரே வாழ்க்கை. ஆனால் அனுபவம் வேறு.

என்னுடைய அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாமே தவிர அதை உங்களிடம் நிகழ்த்த முடியாது. அதைத்தான் எழுத்துச் சித்தர்கள் செய்கிறார்கள். அவர்கள் விடும் இடைவெளிகளில் உங்கள் அனுபவம் நிரம்பி வழிகையில் தான் தங்களுக்கான தரிசனம் கிடைக்கப்பெறும். அந்த இடைவெளியில் மிகுந்த நம்பிக்கை கொண்டவன் நான்.

அமைதி என்பது அனுபவத்தைப் பொறுத்தது. நான் தேடியவரை, வாழ்விற்கு ஏதும் ஆடை அணிகலன்கள் அணிவிக்காமல், அதன் நிர்வானத்தை ஏற்றுக் கொள்வது. அந்தத் தைரியம் தான் தரிசனம்.

அதுதான் என் கதையில் வரும் கணேசய்யர் தேட விரும்புவது, ஆனால் முடியாதது. மூன்று தருணங்களில் சொல்லப்படும் ஒரே செய்தி, வேறு வேறு அர்த்தங்களை ஏற்படுத்தும் போது அதன் பொருள் கேள்விக்குறியாகிறது. இதில் எது சரி? அல்லது, இந்த மூன்றிலிருந்தும் அப்பார்ப்பட்ட ஒன்று இருக்கிறதா? அல்லது, இந்த மூன்றுமே ஒன்றின் வேறுவேறு வடிவங்களா?

இதை உங்களின் தனிப்பட்ட அனுபவம் மட்டுமே சொல்ல முடியும்.

மீண்டும் ஒருமுறை நன்றி.

ராமகிருஷ்ணன் ராஜகோபாலன் said...

@santhanakrishnan:

ரொம்ப நன்றி சந்தானகிருஷ்ணன்.

நீங்கள் சொல்வது சரிதான். ஞானம் கிடைத்துக் கொண்டேதான் இருக்கிறது. அதைப் பல நேரங்களில் கண்டுகொள்வதில்லை. இப்படிப்பட்டவர்கள் (மகனோ, மகளோ...) சொல்லும் போது அது உறங்கிக் கொண்டிருந்த நெஞ்சில் கத்தி போல் இறங்கும்.