Pages

முரண் (சிறுகதை முயற்சி)

ஊருக்கு சென்ற வருடம் தான் வந்திருந்தேன். ஒரு வருடத்திற்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது போன்றதொரு உணர்வு. ஒவ்வொருமுறை ஊருக்கு வரும்போதும் இப்படித் தோன்றுவது வாடிக்கையாகிவிட்டது. என்னில் ஏற்படும் மாற்றங்களை அன்னியப்படுத்திவிட்டு என்னைச் சுற்றி இருப்பவை எல்லாம் மாறிவிட்டதே என்று கவலைப்பட்டு போலித்தனத்தை நினைத்து வருத்தப்படுவதா அல்லது வருத்தப்படுவதால் ஒன்றுமே ஆகப்போவதில்லை என்பதால் சும்மா தற்காலிகமாக வருத்தப்பட்டு வைப்பதா என்று குழப்பம்.

வருடம் ஒருமுறை ஊருக்கு வருவதில் சில சௌகரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. கணினியில் சினிமா பார்ப்பது போல சுலபமாக தேவையில்லாத பகுதிகளை விட்டுவிட்டு சுவாரஸ்யமான பகுதிகளைக் காணும் வாய்ப்பு மிக அருமை. அந்த இருபது நாட்களில் நாம் சந்திக்கும் அத்துனை நண்பர்களும் உறவினர்களும் ஏதோ ஒரு வகையில் நல்லவர்காளாகவே தோன்றுவார்கள்; நாமும் அவர்களுக்கு அவ்வாறே. அதோடு மட்டுமில்லாமல் இங்கே ஆக வேண்டிய காரியங்கள் எல்லாவற்றிற்கும் ஒரு காரியதரிசி. சில நேரங்களில் அப்பா, சில நேரங்களில் நல்ல நண்பர்கள். தொலைபேசியில் சொல்லிவிட்டால் போதும் காரியங்கள் தானாக நடந்தேறிவிடும். இரண்டு முறை வங்கிக்குச் செல்லவோ, ஒரு மணி நேரம் ரயில் நிலையத்தில் காத்திருக்கவோ வேண்டாம். மிகச் சுலபம்.

நான் ஊருக்கு வரும் போது பரிசுப் பொருட்களும் சாக்லேட்டும் வாங்கி வருவது வழக்கம். முன்பெல்லாம் வாங்கி வரவேண்டும் என்று ஆசை இருந்தது. இப்போது அது வெறும் சடங்காக மாறிவிட்டது. இந்தியாவில் கிடைக்காத பொருட்களே இல்லை எனலாம். அப்படி இருக்கும் போது நானென்ன அங்கிருந்து வாங்கி வருவது. ஏன் எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்குப் புரிவதில்லை. வீட்டுக்கென்று வாங்கி வந்தால் அதை தெருவுக்கே பங்கு போடும் தாராளப் பேர்வழி என் அம்மா.

இந்த வருடம் நான் ஊருக்கு வந்திருக்கும் போது இன்னுமொரு விஷயம் என் கொள்ளுப்பாட்டியின் உடல்நிலை. அவர் என் அப்பாவுடைய பாட்டி. படுத்தப் படுக்கையாகி கிட்டத்தட்ட ரெண்டு வருடம் ஆகிறது. என்னுடைய பாட்டிதான் அவரை கவனித்துக் கொள்கிறார். நான் வாரமொருமுறை தொலைபேசியில் அழைத்து 'நலமா' என்று கேட்பது மட்டும் வழக்கம். மற்றபடி அந்தப் பாட்டியினுடைய பீ நாற்றமோ, மூத்திர வாசனையோ எனக்கு என்றுமே தெரிந்ததில்லை. என் பாட்டியின் சகோதரி உதவிக்கு வந்திருந்தார். நெருங்கிய உறவு. நானெல்லாம் அவர் வீட்டிற்கு விடுமுறைக்குப் பலமுறை சென்ற ஞாபகம். தாத்தா இருக்கும் போது அவருடன் சேர்ந்து காவேரிக்கு குளிக்கச் செல்லும் அனுபவம் அலாதி. தலையில் அழுக்குத் துணிக்கூடையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் என்னையும் பிடித்துக் கொண்டு நடந்து செல்வோம். ஆற்றங்கரைக்குச் செல்லும் வரை ஒரே பாட்டுத்தான். எனக்கு ஒன்றும் புரியாமல் இருந்தாலும் சிரித்துக் கொண்டே சென்ற ஞாபகம்.

அவருடைய மாப்பிள்ளை எனக்கு அத்திம்பேர் முறை. அவர் வீட்டுக்கும் அடிக்கடி செல்வேன். அவர் ஒரு ஆசிரியர். கடுமையான ஆசிரியர். மாணவர்கள் அவரைக் கண்டால் நடுங்குவார்கள். அவரிடம் படித்தால் மாணவர்கள் நன்றாகப் படிப்பார்கள் என்று தங்கள் பிள்ளைகளை அவரிடம் டியூஷனுக்கு அனுப்புபவர்கள் ஏராளம். எனக்கு இப்போது நினைவில் இருப்பவை எல்லாம் பத்து வயதிற்குள் நடந்தவைதாம். அப்போது நான் கண்டவை மிகக் குழப்பமாக இருக்கும். காலையில் எழுந்தவுடன் கழிப்பறைக்குச் சென்று சிகரெட் பிடிப்பார். மலம் கழிக்கச் செல்வதாக வேறு சொல்லிவிட்டுச் செல்வார். பிறகு சுத்தமாக குளித்துவிட்டு வந்து சஷ்டி கவசம் ஓதுவார், மனப்பாடமாக. ஒரே பூசையும், புகையும், மணியுமாக இருக்கும். எனக்கு இதில் பல கேள்விகள் தோன்றும். எதற்காக கழிப்பறையில் சென்று புகைக்க வேண்டும். மற்றவர்க்குத் தெரியாமல் செய்ய வேண்டுமென்றால் அங்கே செய்யக்கூடாது. அவர் விடும் புகை மேலெழும்பி வரும் போது நிச்சயமாகத் தெரியும். அல்லது அடுத்தவர் மலம் கழிக்க வந்தால் அங்கே இருக்கும் வாசனை காட்டிக் கொடுத்துவிடும். மூன்றாவதாக, எதற்காக மலம் கழிக்கச் செல்வதாகச் சொல்லிவிட்டு இதைச் செய்ய வேண்டும்? சொல்லாமலேயே செய்தால் ஆகாதா? இதற்கெல்லாம் மேலாக அவர் குளித்த பின்னாலும் கூட அவர் வாயிலிருந்து வரும் சிகரெட் நாற்றம் மற்றவர்க்குத் தெரியாதா. பிறகு ஆசிரியராய் இருந்து இப்படிச் செய்யலாமா? ஒழுக்கம் பற்றி வேறு மாதிரி போதித்துவிட்டு இப்படிச் செய்தாலும், ஆசிரியர் ஏன் இவ்வளவு முட்டாளாக இருக்கிறார் என்ற கேள்வியும் என் மனதில் எழாமல் இருந்ததில்லை. அதோடு விடுவதில்லை; அவருடன் நான் வெளியே செல்லும் போது என்னை சைக்கிளில் உட்கார வைத்துவிட்டு கடைக்குச் சென்று ஏதோ வாங்கி வருவதாகச் சொல்வார். சிகரெட் என்பது எனக்குத் தெரியாத பொருள் போலவே நினைத்துக் கொள்வார். தமிழ்க் கலாச்சாரத்தின் மீதும், சமுதாயத்தின் ஒழுக்க விதிகளின் மீதும் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை. எட்டு வயதில் தமிழ் சினிமாவும் இவரைப் போன்றவர்களும் ஒழுக்கங்களையும், ஒழுங்கீனங்களையும் ஒருசேர கற்பித்திருக்கும் போது இவையெல்லாம் எப்படித் தெரியாமல் இருக்க முடியும்? வேண்டுமானால் தெரியாது போன்று நடிக்க முடியும். கலாச்சாரக் கட்டுப்பாடுகளும், ஒழுக்கக் கற்பிதங்களும் நம்முன் செயற்கையாகக் கட்டியெழுப்பப்பட்ட சல்லடைச் சுவர். நாம் திடப் பொருளாக இருக்கும் வரை அந்தத் துளைகள் கண்ணில் தெரிவதில்லை. சுற்றத்தின் வெப்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக, உருக உருக, அந்த ஓட்டைகளுக்குள் ஒழுகி அந்தப்புறம் செல்வது சுலபமாகிவிடுகிறது.

அவருக்குத்தான் சென்ற வருடம் இருதய நோய் வந்து திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர தேவைக்காக நான் ரத்தம் கொடுக்க வேண்டி வந்தது. ரத்தம் கிடைத்திருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும் என்று தெரியாது. ஆனா அவர் பிழைத்தார் என்பது உண்மை. அதில் மிகவும் நெகிழ்ந்து விட்டதாகச் சொன்னார். அவர் மிகவும் நெகிழ்ந்ததற்குக் காரணமும் இருக்கிறது. என் பத்து வயதிற்குப் பிறகு எங்களின் குடும்பங்களுக்கு இடையில் நடந்த பெரிய தகராறு. மிகக் குறைந்த பணத்திற்காக என் தந்தையை அவர் அவமானப்படுத்திவிட்டார். எனக்கு அப்பவும் வயது பெரிதாக ஒன்றுமில்லை. பன்னிரெண்டு அல்லது பதிமூன்று. இன்றும் நன்றாக நினைவிருக்கிறது. என் வீட்டிற்கு வந்து சத்தமாக பேச ஆரம்பித்தவர், திடீரென என் பாட்டியை அடித்தே விட்டார். அது என் அப்பாவின் மேல் விழவேண்டிய அடி. தவறி என் பாட்டி மேல் விழுந்தது. அடித்ததோடு மட்டுமில்லாமல் தெரு வாசலில் நின்று கூவிக் கூவிக் கெட்ட வார்த்தைகள் வேறு. இதையெல்லாம் நான் அமைதியாகவே கவனித்துக் கொண்டிருந்தேன். வேறென்ன செய்ய இயலும் அந்த பதிமூன்று வயதுச் சிறுவனால்? எனக்கு ஒருபுறம் செய்வதறியாமல் அழுகையும் கோபமும் வந்தாலும் பிற்பாடு மீண்டும் கேள்விகள். இவர் திருக்குறள் படித்திருப்பாரோ? இல்லை அவர் படிக்கும் போது அதெல்லாம் பாடத்திட்டத்தில் இருந்திருக்காதோ? அல்ல பள்ளியில் ஆசிரியர் வேறு, வெளியில் ஆசிரியர் வேறா? அல்ல, அவருடைய அப்பா என் அப்பா போல போதித்ததில்லையா? இப்படி மாறி மாறிக் கேள்விகள்.

இந்த அமளிக்கெல்லாம் பிறகு ஒரு பத்து வருட இடைவெளியில் பழைய பகையெல்லாம் மறந்து (!?) மீண்டும் இரண்டு குடும்பங்களும் இணைந்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் நான் அப்போது இளைஞனாகிவிட்டேன். இளைஞன் சிறுவனைப் போன்று மனதிற்குள் யோசிப்பதில்லை. எல்லாவற்றிலும் ஒரு விளம்பரம். தாந்தோன்றி போன்றொரு நினைப்பு. எல்லாவற்றிற்கும் ஒரு கேள்வி, ஒரு பதில், ஒரு சார்பு. மேலும் கோபம். இதெல்லாம் இளமையின் அடையாளங்கள். என் இளமைக் கோபமும், நடைமுறைக்குச் சாத்தியமில்லாத நியாயமும் அவரிடம் பேச அனுமதிக்கவில்லை. என் குடும்பம் எப்படியோ மறந்துவிட்டது. அறுபது வயதுக் கிழவியை அடித்தது, தெருவில் நின்று கெட்ட வார்த்தைகளால் திட்டியது; இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இப்படி நடந்து கொண்டது எல்லாமே கொஞ்சம் பணத்திற்காக. இப்படிப்பட்ட மனிதனை ஏன் மன்னிக்க வேண்டும் என்பதென் வாதமாக இருந்தது. ஆனால் காலப் போக்கில் நானும் எனக்கு பிடிக்காதவற்றையும் என்னில் அனுமதித்துக் கொள்ளும் நல்ல பழக்கத்தைக் கற்றுக் கொண்டுவிட்டேன்.

பழைய வருத்தத்தை எல்லாம் மறந்து அவருக்கு நான் ரத்தம் கொடுத்த போது மிகவும் நெகிழ்ந்து விட்டார். இல்லாமல் கூட இருக்கலாம். நான் அப்படி நினைக்கிறேன். மருத்துவர் இனிமேல் சிகரெட் பிடிக்கக் கூடாது என்று கட்டளையிட்டுவிட்டார். நான் அப்போதுதான் வெளிநாட்டிலிருந்து வாத்தியாருக்கு சிகரெட் வாங்கி வரலாமா என்று யோசித்திருந்தேன். அதற்குள்தான் இப்படி. போனால் போகட்டும். உயிர் பிழைப்பது தான் முக்கியம்.

நான் ஊருக்கு வந்து பத்து நாட்களுக்கும் மேலாகிவிட்டது. வந்த புதிதில் இருந்த ஆர்வம் எனக்குமில்லை என் வீட்டில் இருப்பவர்களுக்குமில்லை. அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கென்னவோ வீட்டிலிருப்பது நெளிய வைக்க ஆரம்பித்துவிட்டது. அன்று மாலை அந்த வாத்தியார் வீட்டிற்கு வந்திருந்தார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு வீடு செல்லத்தயாராகும் போது, "சாக்லேட் வாங்கின்டு வந்தியாமே? கண்ணுல காமிக்கவே இல்ல? சாமர்த்தியம்தான் போ. பொழச்சுப்ப. அதுக்கெல்லாம் ஒரு மனசு வேணும்...."

இதைக் கேட்டுக் கொண்டே என் வீட்டு முற்றத்தில் வந்து அன்னாந்து பார்த்தேன். வானம் விசாலமாய்த் தெரிந்தது.

2 comments:

santhanakrishnan said...

உங்கள் முயற்சியில் வெற்றி பெற்று
விட்டீர்கள். நல்ல சிறுகதை.

கலாச்சாரக் கட்டுப்பாடுகளும், ஒழுக்கக் கற்பிதங்களும் நம்முன் செயற்கையாகக் கட்டியெழுப்பப்பட்ட சல்லடைச் சுவர். நாம் திடப் பொருளாக இருக்கும் வரை அந்தத் துளைகள் கண்ணில் தெரிவதில்லை. சுற்றத்தின் வெப்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக, உருக உருக, அந்த ஓட்டைகளுக்குள் ஒழுகி அந்தப்புறம் செல்வது சுலபமாகிவிடுகிறது.

நான் மிகவும் ரசித்த வரிகள்.
தொடருங்கள்.

ராமகிருஷ்ணன் ராஜகோபாலன் said...

@santhanakrishnan
ரொம்ப நன்றி சந்தானகிருஷ்ணன்.

மொழி என் வசமாக இன்னும் நிறைய படிப்பும், உழைப்பும் என்றே நினைக்கிறேன்.

உங்களுடைய தளம் மிக அருமை. புதுக்கவிதைகளை என்னால் ரசிக்க முடிந்தாலும், என்னில் புதுக்கவிதைகள் பூப்பதில்லை.