Pages

ஒரு முகம்.. ஒரு பெயர்... ஒரு முகவரி...

இன்று எனக்கு ஒரு தபால் வந்தது. அனுப்பியவர் முகவரி ஏதுமில்லை. பிரித்துப் பார்த்தால் என்னுடைய முக்கியமான காகிதம் ஒன்று இருந்தது. அதை நான் எங்கோ தவற விட்டிருக்கிறேன். அதைக் கண்டெடுத்தவர் எனக்கு அனுப்பியிருக்கிறார். பெயரேதும் இல்லாமல், அடையாளம் சொல்லாமல். அடையாளத்திற்கான தேவை என்ன என்று அவர் நினைத்திருக்க வேண்டும். அதில் ஒரு வரி மட்டும் எழுதியிருந்தார்..' இது உங்களுக்கு பயன்படுமென்று நினைகிறேன்..' என்று. அவருக்குத்தான் எத்தனை கருணை. இது ஒரு சாதாரண செய்கையாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இன்றைய உலகம் சென்று கொண்டிருக்கும் வேகத்தில் தன்னைத் தவிர எதையும் சிந்திப்பதற்கு மக்களுக்கு நேரமில்லை. இத்தகைய நிலையில் ஒருவர் குறைந்தபட்சம் ஐந்து நிமிடம் மற்றும் ஐம்பது சென்ட் செலவு செய்து எனக்கு அனுப்பியிருக்கிறார். அதை நான் மிகப் பெரிய செயலாகக் கருதுகிறேன். அவர் எப்படியிருப்பார், என்ன செய்வார் என்று யோசிக்க நினைத்தேன். எனக்கு அவருடைய கையெழுத்தைத் தவிர குறிப்பேதும் இல்லை. அவர் எனக்கு எந்த விதத்திலும் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்று நினைத்திருப்பார் போலும். நான் இன்னாரென்று அடையாளப் படுத்தியிருந்தால், நான் ஒரு முறை நன்றி சொல்லியிருப்பேன். ஆனால் அதில் அவருக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை போலும். ஆக, அடையாளமற்றுப் போனதில் அவர் எனக்கு இன்னும் நல்லவராகவே இருக்கிறார். அவர் என்ன செய்கிறார் அல்லது அவரது முகம் எப்படியிருக்கும் அல்லது எங்கே வேலை செய்கிறார் என்று ஏதாவது தெரிந்திருந்தால் என்னுடைய எண்ணம் மாறியிருக்க வாய்ப்புண்டு.

தெரிந்த முகங்களை விட, பெயர்களை விட, உருவங்களை விட, அடையாளமில்லாத அருவமான மனிதர்கள் என்னைக் கவர்கிறார்கள். அவர்களிடமிருந்து நான் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவர்களும் அப்படியே. இது ஒரு ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மனநிலையைத் தருகிறது. தெரிந்த முகங்களிடம் தான் எனக்கு பல எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. என்னிடம் பலர் பலவற்றை எதிர்பார்க்கிறார்கள். இவை வாழ்வின் ஏமாற்றங்களை எனக்கு அறிமுகப்படுத்துகின்றன. கோபம், வஞ்சம், பொறாமை என மனித வாழ்க்கையின் சகல அசுத்தங்களையும் இந்த எதிர்பார்ப்புகள் எனக்குள் ஏற்படுத்துகின்றன. அந்த முகமும், பெயரும் தெரிந்ததனாலேயே நான் அவர்களிடம் யாசிப்பவனாகி விடுகிறேன்.

எந்த உறவாயினும் சரி, அது தொடங்கும் போது பனியிலிருந்து உருகும் நீர் போல, வானிருந்து வரும் மழை போலத்தான் தூய்மையாயிருக்கிறது. போகப் போக, என் மனதில் பல எதிர்பார்ப்புகள். எவ்வாறென்று நான் விளக்கிச் சொல்லத் தேவையில்லை. இது உறவுகளுக்கு மட்டுமல்ல; மொத்தமாக மனித உயிரின் தேடல் எதிர்பார்ப்புகளில் தான் தொடங்குகிறது; ஏமாற்றத்தில் நிறைவுறுகிறது.

வெற்றியின் ரகசியம் போல தோல்விக்கும் ஒரு ரகசியம் உண்டு. அது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆனால் நாம் அதை உணர மறுக்கிறோம். நாம் வாழ்வின் தோல்வியின் ரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டுமானல் நம் எதிர்பார்ப்புகளைப் பற்றி சிந்தித்தால் போதும். எத்தனையோ சந்தர்ப்பங்களில் இந்த உண்மை நம் கண் முன்னே வந்து கண்ணத்தில் அறைந்தாற்போல் சொல்லிவிட்டுப் போகும். ஆனால் அது அடுத்த நொடி என் அறிவிலிருந்து அகற்றப்பட்டுவிடும். அதுவும் எத்தனை முறை? ஆயிரமாயிரம் முறை; என் வாழ்வின் எல்லா நிமிடங்களிலும் நான் சந்தித்த உண்மை; ஆனால் உணர மறுக்கும் உண்மை.

இன்று என் தோல்விகளைப் பட்டியலிட்டுப் பார்க்கிறேன். என் தந்தையின், தாயின், உடன் பிறந்தோரின், நண்பனின், காதலியின், உறவுகளின் தோல்விகளையும் சேர்த்துத் தான். எல்லாருடைய தோல்விக்கும் ஒன்றே காரணம். அது எதிர்பார்ப்புகள்.

நானும் ஒரு நாள் இந்தப் புற உலகின் அடையாளங்களிலிருந்து விடுபட்டு, அருவமாக விரும்புகிறேன். அது என்னில் இருந்து என்னை எனக்கு எடுத்துக் காட்டும். அதற்காகக் காத்திருப்பேன்.

மீண்டும் சந்திப்போம்.

No comments: