இது என் நண்பி ப்ரீத்தி எழுதிய ஒரு பதிவின் தொடர்ச்சியாக நான் எழுதியது.
என்னைக் கிடத்திப் போட்டிருக்கையில்
என்னையே கடத்தியதென் பிம்பம்.
எப்போதும் நடத்திய வேள்வி,
இப்போதும் ஒரே கேள்வி; நான் யார்?
இருக்கையில் இல்லாது போலும்,
இருக்கின்றனர் என் மக்கள்.
ஒருமையில் ஒளிய இடம் தேடுகிறேன்.
இரைதேடும் புலி கண்டு
இறைவேண்டி ஓடும் மான் போல ஓடுகிறேன்.
துரத்துவது யாரென்றறியேன்;
பயமுறுத்துவது ஏதென்றும் அறியேன்.
என்னில் என்னை ஒளித்தாலொழிய, அது நடவாதென்பதும் மறந்தேன்.
உண்மை என்னைச் சுட ஒரு நாளாகுமோ?
மெதுவாகத்தான் தெரிந்தது.
நிஜத்தை நேரில் சந்திப்பதுதான்,
நிஜம் என்று மனம் புரிந்தேன்.
அடடா! எத்துனை நேரம் புரியாமல் தவித்தேன்!
ஒருவேளை இதுதான் எங்கள் முதல் சந்திப்போ?
மனமொன்று கூற, மதியொன்றுரைக்க,
நிஜத்திற்கு பொய்(ச்) சாட்சி சொல்லியபடி,
என் மனைவியை நெருங்கினேன்.
பேதைப்பெண்ணோ என் பிம்பம் பார்த்து
கதைத்துக்கொண்டிருந்தாள்.
எனைப்பார்த்து அழும் விழிக்கு,
அணைபோட நான் முயல,
முடியாமல்தான் கலங்க,
கண்ணீர் அவள் கன்னம் கரைத்துக்கொண்டிருந்தது.
எதிரியும் புகழ்பாட,
எரிதிரியும் சில்லென்றிருக்க,
அப்போதுணர்ந்தேன் அகில உறவை அறுத்துவிட்டேனென்று!
No comments:
Post a Comment