Pages

கடவுளாகிவிடு

காலத்தைப் பற்றி நிறைய முறை சிந்தித்திருக்கிறேன். ஆனால் காலம் யாருக்கும் பிடிபடாத ஒன்றாகவே இருக்கிறது. காலம் மிக அடர்த்தியானது. தொடர்ச்சியானது. அது தன்னை யாரும் நெருங்க விடுவதே இல்லை. மிக ரகசியமாகவே இருக்கிறது. ஆனால் சுதந்திரமாக நாம் காலத்தினுள்ளே பயனிக்கிறோம். காலம் நமக்குள்ளே உறைகிறது. அது அமைதியாக இருப்பதாகவே தோற்றமளிக்கிறது. ஆரவாரமான இந்த உலகத்தில் அதன் சத்தம் நம் காதில் விழுவதில்லை. வீட்டில் யாருமில்லாமலிருக்கும் போது நிலவும் அமைதியில் கடிகாரச் சத்தமும், குழாயிலிருந்து சொட்டும் நீரும் நமக்கு பெரும் சத்தம் போடுவதாகத் தோன்றும். காலத்தின் சப்தம் எப்போதும் இருந்து கொண்டே இருந்திருக்கிறது. ஆனால் நமக்குத்தான் தெரிவதில்லை. நாம் வேறு சப்தங்களை உள்வாங்கிக் கொண்டு காலத்தை ஊமை என்று கருதிவிட்டோம். காலத்திற்கு ஆணவம் கிடையாது. தற்குறியாக என்றுமே இருந்ததில்லை. ஆனால் காலம் தான் இருப்பதாக உணர வைக்க முயற்சித்துக் கொண்டேதான் இருக்கிறது. நாம்தான் காது கேளாதவர்களாகி விட்டோம். காலத்தை உணர்ந்தால், நாம் கடவுளை உணர்ந்தவர்களாகி விடுவோம்.

காலத்தை யார் அளவிட்டது? யாருக்கு அவ்வளவு அதீத அறிவும் ஞானமும் இருக்கிறது? மனிதன் அதை நாட்களாகவும், மணித் துளிகளாகவும், அதனினும் சிறிய அளவாகவும் பிரித்து விட்டான். பிரித்து விட்டதால் காலம் தன் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக நினைக்கிறான். அது ஒரு சிறு குழந்தையின் செயலைப் போன்றது. மனிதனுக்கு தான் அறிய முடியாத ஒன்று, அளவிட முடியாத ஒன்று, அல்லது தன் அறிவிற்கு எட்டாத ஒன்று இருக்குமாயின் அதை ஏதாவதொன்று கொண்டு பிரித்து விடுவான். பிரித்து விட்டால் அது அளவிட முடிந்ததாகிவிடும். இரவில் அண்ணார்ந்து வான்வெளியைப் பார்த்திருக்கிறீர்களா? அது காலையில் வெளிர்நீலக் கம்பளமாகவும், இரவில் இருட்டுப் பள்ளம் போலவும் தோற்றமளிக்கும். அதன் தொடக்கம் எங்கிருக்கிறது? முடிவுதான் எங்கே? தொடக்கமும் முடிவும் அறிய முடியாத ஒன்று. காலமும் வெளியும் இரட்டைக் குழந்தைகள். அவைகளுக்கு அளவீடுகள் அடங்காது. அவைதான் மற்றவற்றின் அளவுகளை நிர்ணயிக்கும். மனிதன் இரண்டையும் முழுவதுமாக புரிந்து கொள்ள முயற்சிக்கிறான். தவறொன்றுமில்லை. காலத்தையும், வெளியையும் கூறு போடலாம். ஆனால் ஒரு போதும் வென்று விட்டதாக மார்தட்டிக் கொள்ளக்கூடாது.

காலம் தன்னுள் பல ரகசியங்களை ஒளித்து வைத்துக்கொண்டே இருக்கிறது. உலகில் பிறந்த, பிறக்கின்ற, பிறக்கப் போகிற ஒவ்வொரு உயிரையும், மனித நாகரிகங்களையும், கலாச்சாரங்களையும், இயற்கை சீற்றங்களையும், போர்களையும் கண்காணித்துக் கொண்டே அமைதியாக தன்னுள் தேக்கி வைக்கிறது. மனிதனின் பார்வையால் ஒரு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு அல்லது சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் வரை மட்டுமே பயனிக்க முடியும். இந்த பிரபஞ்சத்தின் மூலங்களை அணு அளவு வரை ஆராய முடியும். ஆனால் அதன் மூலங்கள் அணுவுக்கு அணுவும், அவ்வணுவுக்கு அணுவும், அதனினும் அதனினும் சிறியது என்று சென்று கொண்டே இருக்கும். மனிதனின் அறிவுக்கு எட்டியது அணுவே. ஆதலால், மனிதனின் பார்வையில்தான் கோளாறு. மனிதன் தன்னால் இயலாத பட்சத்தில் அதுதான் இறுதியான உண்மை என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்ள காரணம் தேடுகிறான். ஆனால் இறுதியான உண்மை என்னவென்று காலம் மட்டுமே அறியும். காலம் அமரத்துவத்தின் அகராதி. காலமும் வெளியும் எப்போதுமே இருந்திருக்கிறது. பிரபஞ்சம் என்பது வெளியின் மறுவடிவம். ஒருவர் இறந்துவிட்டால் அவர் "காலமாகி" விட்டதாக சொல்கிறோம். அதுபோலத்தான் நாமும், மரங்களும், செடிகளும், விலங்குகளும் எல்லாமும். நாமும், காலமும், வெளியும், பிரபஞ்சமும் ஒன்றே என்ற உண்மை தெரிந்த நேரத்தில் நாம் கடவுளாகிவிடுவோம்.

No comments: