Pages

நிரபராதி

துக்கம் தொண்டை அடைக்கறது. எவ்வளவு சமாதானம் சொல்லியும் என்னால் ஏத்துக்க முடியலை. ரெண்டு வருஷமா ஒழச்சு இருக்கேன். சாப்பாடு தூக்கம்னு பாத்ததில்ல. சினிமாவே கெடயாது. க்ரிக்கெட்டு கூட இல்ல. இவ்ளோ ஒழச்சும் பலனில்லயேன்னுதான் வருத்தமா இருக்கு. நான் செய்யாத பாவத்துக்கு ஏன் தண்டனை? இதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? இந்த நேரம் பாத்து டிவில அழுகை நாடகம் ஓடிண்டு இருக்கு. எனக்கு மேல யாரோ அழுதுண்டே இருக்கா. அம்மா கீரை நறுக்கிண்டே அவாள வாய்க்கு வந்தபடி திட்டிண்டு இருக்கா. சித்தப்பா ஸாயங்கால ஸந்தியாவந்தனம் பண்றா. அக்கா இப்போதான் துர்க்கைக்கு வெளக்கு போட போயிருக்கா. பாட்டி ரேழிலேந்து கொரல் குடுக்கறா. இதுக்கு நீ என்னடா கண்ணா பண்ணுவ. நீ செய்ய வேண்டியத எல்லாம் சரியா செஞ்சுட்ட. அதுக்கப்பறம் எல்லாம் பகவான் செயல். க்ருஷ்ண பரமாத்மா கீதைல என்ன சொல்லிருக்கார்? கடமையை செய்; பலனை எதிர்பாராதேன்னுன்னா சொல்லிருக்கார். அதுனால நீ கவலப்படாத. இவ்ளோ சொல்லியும் என்னால ஜீரணிக்க முடியல. அழுதுண்டே அடுத்தது என்ன நடக்கும்னு யோசிக்கறேன். அப்பா இன்னும் வரலை. வந்தா என்ன சொல்வாளோன்னுதான் பயமா இருக்கு. அப்பா எப்போதுமே என்னத்தான் கொற சொல்லுவா. என்னோட தப்பு இல்லேன்னா கூட. புள்ள கொழந்தேள அப்டிதான் வளக்கனுமாம். இல்லேன்னா கெட்டுப்போயிடுவாளாம். என்ன கணக்கோ, பகவானுக்குத்தான் வெளிச்சம். எப்பப் பாத்தாலும் படி படின்னு சொல்லிண்டே இருப்பார். ஆகாரம் ஆச்சான்னு கூட கேக்க தோணாதோ? அடுத்தாத்து கொழந்தேள பாரு எப்டி படிக்கறான்னு நீயுந்தான் இருக்கியே ஒன்னுக்கு யோக்யதை இல்லன்னு எதாச்சும் பாட்டு விழுந்துண்டே இருக்கும். எனக்கு யாரையாச்சும் கம்பேர் பண்ணி பேசினாலே பிடிக்காது. ஆனா அதுதான் எப்போதும். சரி என்ன பண்றது. இன்னிக்கு எல்லாம் சேந்துண்டு வரப் போறது. ஒரே அழுகை அழுகையா வர்றது. என்னோட தப்பே இல்லியே. இழப்பு என்னமோ என்னோடது. இதுல இவா வேற வெந்த புண்ணுல வேல பாய்ச்சற மாதிரி. பகவானே!

பாட்டிக்கு இதெல்லாம் தெரியாம திருப்பியும் சமாதானம் சொல்றா. இப்போ என்ன ஆயிடுத்துன்னு கன்னத்துல கை வெச்சுண்டு இருக்க? அது என்னமோ கம்பியூட்டருக்கு படிச்சா என்ன கொறஞ்சா போறது? எதோ படிச்சோமா போணோமான்னு இல்லாம. அழுதுண்டு கண்ண கசக்கிண்டு பொம்மணாட்டி கொழந்தையாட்டம். போடா போ. கோயிலுக்கு போயிட்டு வா கோவிலுக்கு போயிட்டு வந்தா எல்லாம் சரியா போயிடும்னு பாட்டி சொல்லிண்டு இருக்கும் போதே அப்பா வந்துட்டார். கண்ணத்துலயே ரெண்டு உட்டார். நா என்னோட தப்பு இல்லியேப்பான்னு சொல்றத மீறி அடிக்கறார். நீ இன்னும் ரெண்டு மார்க்கு கூட எடுத்து இருந்தா உனக்கு கெடச்சு இருக்கும். எங்க நம்ம சொல்றத கேட்டாதான. தானா எதாச்சும் பன்றது. போ போ என்னமோ பன்னு. எல்லாம் உன் நல்லதுக்குதான் சொன்னேன் கேட்டாதான. சொல்லிண்டே இருக்கும் போது அடிக்க வற்ரார். அம்மாவும் பாட்டியும் வந்து தடுக்க அவாளுக்கும் திட்டு விழறது. நல்ல வேளையா ரவி மாமா வந்துட்டார். அப்பாடா இப்போதக்கி அடியிலேந்து தப்பிச்சோம். தெரு கோவில் திருநாள் பத்திரிக்கை ப்ரூஃப் எடுத்துண்டு வந்துர்க்கார் போலருக்கு. ரவி மாமாக்கு நெலம புரியாம என்னடா அம்பி +2ல 1100க்கு மேல வாங்கி ஜமாய்ச்சுட்ட போலருக்கே. எனக்கு தெரிஞ்சவா எல்லாரும் ரொம்ப கம்மியாதான் வாங்கிருக்கா. என்னமோ கணக்கு பரிட்சை கூட ரொம்ப கஷ்டமா இருந்துதாமே. நீ புத்திசாலிடா கொழந்தே. நன்னா இருன்னு சொல்லின்டே அப்பாகிட்ட பேச போனார். பத்திரிக்கைல ஒரே ஒரு திருத்தம் சொன்னார் அப்பா. திரு. மணி அப்டின்னு அடிச்சு இருக்கறத "மணி அய்யர்" ன்னு அடிக்கனுமாம். 'பளார்'னு அடிக்கனும் போல இருந்துது. பகவானே! இது என்னோட தப்பே இல்லியே. என்ன ஏன் தண்டிக்கற? திரும்பவும் அதே யோஜனை. எனக்கே தெரியாமல் மீண்டும் அழ ஆரம்பித்தேன்.

************************************************************************************

இது என்னுடைய முதல் முயற்சி.
இனி தேவை முறையான பயிற்சி.


மீண்டும் சந்திப்போம்.

No comments: