Pages

கரைதேடும் நினைவுகள்

அப்போது எனக்கு ஆறேழு வயது இருக்கும். எந்தக் கவலைகளும் இல்லாமல் சுற்றித்திரிந்த காலம் அது. ஆனந்தத்தை நாம் தேடிப்போகாமல், ஆனந்தம் நமக்குள்ளே வாழும் காலம். இன்பத்தை தேடியும் நாடியும் போனதில்லை. கறைகள் படியாத மனதோடு கரைகள் அறியாத காட்டாறு போன்று அலைந்த சுகம் வேறு எப்போதும் வாராது. பல நாட்கள் பட்டாம்பூச்சியைப் பின் தொடர்ந்து அதோடு வாழ்ந்திருக்கிறேன். காவிரியில் நானும் கரைந்து கெளுத்தி மீன்களோடு சம்பாஷனை செய்திருக்கிறேன். சாணி தெளித்த வாசலில் கயிற்றுக்கட்டிலில் படுத்துக்கொண்டே நிலவோடும் நட்சத்திரங்களோடும் தர்க்கவாதம் செய்திருக்கிறேன். காலையில் எழுந்தவுடன் பூத்திருக்கும் நந்தியாவட்டை செடிகளின் வாசனைப் பேச்சிலும் மலர்ந்த புன்னகயையும் ரசித்துக்கொண்டே வேப்பமர நிழலில் நின்று செஞ்சூரியனுக்கு வணக்கம் செலுத்தி என் நாளை ஆரம்பித்திருக்கிறேன். மாமரத்தில் ஏறி அதில் படர்ந்திருக்கும் களை பறித்துவிட்டு இறங்கும் போது, அது சொல்லும் நன்றிகளுக்கு, நமக்குள் இதெல்லாம் என்ன சம்பிரதாயம் என்று கூறி நட்பு பாராட்டியிருக்கிறேன். திண்பண்டங்களை ஒரு போதும் தனியாக உண்டது இல்லை. காக்கைகளும் அணில்களும் என் சமபந்தியில் உண்டு. என் பாட்டி கோலம் போட பத்து நிமிடம் தாமதமானாலும் அணில்கள் வந்து தேட ஆரம்பித்துவிடும். அணில்களுக்கும் எறும்புகளுக்கும்தான் முதலில் உணவு. எல்லாருக்கும் அதற்கு பிறகுதான். கோலம் போட்ட ஒரு மணி நேரத்தில் எங்கள் வீட்டு வாசலில் இன்னொரு நண்பர் வந்து விடுவார். அவரை நாய் என்று சொன்னால் என் பாட்டிக்கு கோபம் வந்து விடும். அவருக்கும் சாதம் படைத்துவிட்டு சமையலை தொடர்வாள் என் பாட்டி. அதற்குள் வீட்டின் உள்ளே வாழும் பூனைக்கு என் தாத்தா பால் பரிமாறிக் கொண்டிருப்பார். அடுப்பில் உளை கொதிக்கும் போதே கொல்லையில் சென்று சுள்ளி பொறுக்கிக் கொண்டு வந்து வெந்நீர் அடுப்பு பற்ற வைத்தாகிவிடும். எரிபொருளுக்காக மரங்களை வெட்டியதாக எனக்கு நினைவில்லை. தாத்தா குளித்து விட்டு கோவிலுக்கு செல்ல ஆயத்தமாகும் போது, மாட்டுக் கொட்டகையின் வாசலில் பூத்திருக்கும் செம்பருத்திகளை பறித்துக் கொண்டு செல்வார். தோட்டத்தில் இருந்து சற்றுமுன் பறித்த முளைக்கீரையையும், வெண்டைக்காய்களையும், கொத்தவரையும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு போவாள் என் பாட்டியின் சிநேகிதி. நீர் கலக்காத கறந்த பசும்பால் எனக்குப் பிடிக்கும் என்று தனியே கொண்டு வந்து கொடுப்பாள் தெரு கடைசியில் இருக்கும் என் அத்தை.

மாடுகளுக்கும், கன்றுகளுக்கும் தீனியும் வைக்கோலும் வைப்பது என் வேலை. நான் வருவதைக் கண்டாலே கன்றுகள் துள்ள ஆரம்பித்துவிடும். அவர்களை அவிழ்த்துவிட்டு சுதந்திரமாக விளையாட விடுவேன். நானும் அவர்களோடு ஓடிப்பிடித்து விளையாடுவேன். கன்றுகள் தன் தாயோடு நின்று பசியாறும் போது பாசத்தோடு பார்த்துக் கொண்டிருப்பேன். தாய்ப்பசு என்னை நோக்கி, நீயுன் என் பிள்ளைதான் என்று சொல்வது போல சொல்லும். நான் கன்றுகளை அவிழ்த்து விட்டதற்காக பாட்டி திட்டுவாள். வீட்டில் மாடு இருக்கும் போதே வெளியில் பால் வாங்க வைக்கிறாயே என்று கடிந்து கொள்வாள். போனால் போகட்டும் பாட்டி, பாவம் என்று சொல்வேன். காளை மாடுகளுக்கு லாடம் அடிக்கும் போது அழுவேன். மாட்டுக்கு இது செய்யவில்லை என்றால் கால் வலிக்கும் என்று மாமா என்னை சமாதானப்படுத்துவார். வண்டி மாடுகளுக்கு கழுத்து வலிக்காதா என்று கேட்டு வில் வண்டியில் ஏற அடம் பிடிப்பேன்.

களத்து மேட்டிற்கு சென்று, விதை விதைத்துக் கொண்டிருக்கும் அக்காக்களையும், போரடித்துக் கொண்டிருக்கும் அண்ணன்களையும் சொந்தம் கொண்டாடி மதிய வெயிலில் எங்கள் வயலோரம் இருக்கும் மரத்தில் இருந்து இளநீரும் நொங்கும் சாப்பிட்டிருக்கிறேன். பனநொங்கு சாப்பிட்ட பிறகு அதன் காயை குச்சியின் முனைகளில் பொருத்தி அந்த வண்டியை ஊர் முழுக்க ஓட்டியிருக்கிறேன். தென்னந்தோப்புகளின் நிழலில் விழுந்து கிடக்கும் குறும்பைகளைப் பொறுக்கி வந்து ஈர்க்குச்சிகளில் பொருத்தி விளையாடுவேன். கொல்லையில் விழுந்து கிடக்கும் குச்சிகளைப் எடுத்து வளைத்து, தொங்கும் கொடிகளிலிருந்து நூல் பறித்துக் கட்டி வில்லும் அம்பும் செய்யும் வித்தையைக் கற்றிருந்தேன். சிவந்த கோவைப்பழங்கள் பறித்து ஆடுகளுக்குக் கொடுத்துவிட்டு என் சிலேட்டை அழிக்கவும் பயன்படுத்திய ஞாபகம். பூவரச இலைகளில் ஊதல் செய்து இசை பயின்று ராகங்கள் பாட முயற்ச்சித்திருக்கிறேன். தென்னங்கீற்றுகளில் பாம்பு செய்து என் சகோதரிகளை பயமுறுத்துவேன். வீட்டு முற்றத்தில் தரை உடைந்து இருக்கும் சிறு பகுதியில் தெரியும் மண்ணில் நெல் விதைத்து கொட்டாங்கச்சிகளால் நீர்ப்பாசனம் செய்து விவசாயம் செய்திருக்கிறேன். களிமண்ணால் கோவில் கட்டி சாமி செய்து கருவக்காட்டிற்கு அருகில் இருக்கும் வாசனை மரமல்லிகளைப் பறித்து வந்து அர்ச்சனை செய்திருக்கிறேன். எனக்கு இன்றும் நினைவிக்கு வருகிறது.

ஊரில் திருவிழா என்றால் கூத்தும் கும்மாளமும் கொண்டாட்டமுமாகி விடும். நண்பர்கள் எல்லாரும் வருவார்கள். உறவினர் யாரும் வராமல் இருக்க மாட்டார்கள். கோவிலில் சாமி புறப்பாட்டின் போது நாகஸ்வரக் கலைஞர்களை மல்லாரி வாசிக்கச் சொல்லி அந்த இசைக்கு ஏற்ப மெதுவாக ஆடுவோம். சாமி அலங்கரிக்க, பூப்பறிக்க ஒரு படையாக செல்வோம். சிறுவர்களாக இருந்தாலும் பெரியவர்கள் ஆச்சரியப்படும் வகையில் பந்தியில் பரிமாறுவோம். அதில் பாராட்டுக்களுக்காக மட்டுமின்றி பரிமாறும் போது பெறும் அன்புக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் செய்வோம். அந்த மகிழ்ச்சி சாப்பிடும் போது பெறுவதைவிட பெரியது, சித்திரையில் முதன் முதலாக வயலை உழும் போது என்னை பூசை செய்யச் சொல்வார்கள். அது ராசிக்காகவா இல்லை குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதாலா என்று தெரியாது. அந்த நேரங்களில் எனக்குக் கிடைக்கும் பெருமை மிகவும் பிடிக்கும். மாட்டுப் பொங்கலன்று மாடுகளை அலங்கரிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னமே யோசிக்க ஆரம்பித்து விடுவோம். ஊரில் இருக்கும் கன்றுகள் யாவும் சிறுவர்களின் கைவண்ணத்தில் அலங்கரிக்கப்படும். கன்றுகளை ஒரு கையில் பிடித்துக் கொண்டே மறுகையால் கன்றின் கழுத்தில் கட்டியிருக்கும் மணிகளை அடித்துக் கொண்டே செல்வோம். கடைசியில் கோவிலுக்குச் சென்று வழிபட்டு, கண்றுகளுக்கு பூசை செய்வோம். நவராத்திரி நாட்களில் கூட்டமாக சிறுவர்கள் ஒன்று சேர்ந்து எல்லா வீட்டு வாசலுக்கும் சென்று "நவராத்திரி கொலு கொலு சுண்டல்" என்று ஒரே குரலில் பாடி சுண்டல் வாங்கி உண்போம்.

இங்கு பதிவும் செய்யப்பட்டவை காலப்பெருவெளியில் ஒரு துகளுக்கும் குறைவே. இன்னும் நிறைய நிறைய நினைவுகள் தேங்கிக் கிடக்கின்றன. இன்றைய காலகட்டம் முற்றிலும் வேறு. பசுக்களோடும், மரங்களோடும் அன்பு செய்தவன், "நான்" என்னும் தனிச்சிறையில் என்னை நானே அடைத்துக் கொண்டுவிட்டேன். மனதில் ஏகப்பட்ட குறைகளோடும் அழுத்தத்தோடும் அலைந்து கொண்டிருக்கிறேன். காலவெள்ளம் என்னை எங்கோ அடித்துக் கொண்டு வந்துவிட்டது, இந்த நினைவுகளை நினைக்கையில் எல்லாம் என் மனதில் அந்த நந்தியாவட்டை வாசமும், பூவரச இலை ஊதலின் இசையும் என் மனதை வருடும். என்னையும் அறியாமல் கண்ணோரம் நீர் கசியும். நான் ஏங்குவதை விடவும், ஊரில் நான் விட்டு வந்த வேப்ப மரமும், ஆற்றங்கரையும் ஏங்கும் என்று தெரியும். நான் பயனித்த அதே சுவடுகள் மீண்டும் என் காலடிக்காக காத்துக் கிடக்கும் என்றே நான் நம்புகிறேன். நாகரிகப் போர்வையில் என்னை நானே தொலைத்துவிட்டதாகவே நினைக்கிறேன். என் நினைவுகள் யாவும் அவற்றை மறுக்கின்றன. மீண்டும் ஒரு நாள் அதே சுகம் வருமென்று காத்திருக்கிறேன்.

No comments: