Pages

ஒரு நொடி ஓராயிரம் சிந்தனை!

1. இந்த சாவியை வைத்து திறக்க முடியாது என்று தெரிந்தும் அதை வைத்து ஒரு பூட்டை திறக்க முயற்சித்திருக்கிறீர்களா?
2. கணினியின் எலியை (mouse) இணைக்காமலேயே அதை பயன்படுத்த முயற்சித்து கோபம் அடைந்திருக்கிறீர்களா?
3. ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே சம்பந்தா சம்பந்தமில்லாத வேறு பல விஷயங்களை சிந்தித்திருக்கிறீர்களா?
4. ஒரே செயலை ஆயிரம் முறை செய்தாலும் அதை தவறாகவே செய்திருக்கிறீர்களா?
5. எல்லா விஷயத்திலும் ஒரு அதீத கனவு காண்கிறீர்களா? நடக்காத விஷயங்களை எல்லாம் கனவில் பாவித்து வருத்தப்பட்டதுண்டா? எப்போதும் கனவுலகில் இருக்கிறீர்களா?

ஆம் எனில் நீங்கள் என் நெருங்கிய நண்பர்.

இந்த முறை நான் எந்த ஒரு கருத்தையும் அல்ல செய்தியையும் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை. நான் வெகு நாட்களாக, இன்னும் சொல்லப்போனால் பல வருடங்களாக அனுபவித்துக் கொண்டிருப்பதை சொல்ல விழைகிறேன். இது மருத்துவ அல்லது மனோதத்துவ முறையில் சொல்வதானால் 'Thought disorder' or 'disordered thinking' என்று சொல்லலாம். அதாவது ஒரு விஷயத்தை ஆழ்ந்து யோசிப்பதில் இருக்கும் சிரமம். என்னுடைய சிந்தனை ஒவ்வொரு நொடியும் மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு நொடியும் என்று சொல்வது கூட சரியல்ல. ஒரு நொடியிலே பத்து விஷயங்கள் என் எண்ணத்தில் தோன்றி மறைந்து கொண்டே இருக்கும். ஒரொரு சமயங்களில் எந்த எண்ணத்திற்கு என் செவிகொடுப்பது என்று கூட தெரியாமல் எல்லாவற்றையும் மறந்து விடுவதுண்டு. இதோ இந்த பதிவை எழுதுகையிலும் அதுதான் நடக்கிறது. இது சிந்தனையோடு மட்டுமல்லாமல் என் செயல்களிலும் ஒழுங்கீனத்தை ஏற்படுத்துகின்றது. எந்த விஷயத்தையும் என்னால் சரியாக நினைவில் வைத்துக்கொள்ள இயலவில்லை. இப்பொழுதெல்லாம் பல நேரங்களில் என் கணினியை உதவிக்கு நாடுகிறேன். என்னுடைய தினசரி வேலைகள் கூட அதில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். எல்லாவற்றிற்கும் ஒரு குறிப்பு எழுதி ஒட்டி வைத்திருக்கிறேன். ஒரு பத்து பேர் உங்களிடம் ஒரே நேரத்தில் உரக்கப் பேசினால் எப்படி இருக்கும் என்று கறபனை செய்து பாருங்கள். சத்தியமாக எனக்குள் பத்து குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். என்ன கொடும சார் இது?

ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே அருவி போன்று எண்ணங்கள் வந்து கொட்டும். சமயங்களில் அந்த உளறல்களை அவர்களிடமே சொல்லி விடுவதுண்டு. என்னுடைய வெள்ளைக்கார ப்ரொபசரிடம் தமிழில் உளறியிருக்கிறேன். மிக முக்கியமான சந்திப்புகளில் கூட இது நடந்திருக்கிறது. என்னுடைய எண்ணங்களை ஒரு தாளில் எழுத முயற்சிக்கும் போது சிதறிப் போய் விடுகிறது. ஆக என்னுடைய எல்லா சிந்தனைகளும் விழலுக்கிறைத்த நீர் போல வீணகிப் போகிறது. இதற்கு அணைபோட முயற்சிக்கையில் உங்களோடு பகிர்கிறேன். இப்போது இந்த எண்ண ஓட்டம் இதோடு நிற்கிறது; தொடர்கையில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.

1 comment:

Sudha said...

http://www.directoryforsites.blogspot.com/

You may post your site to my blog if you like .

Tamizkaka oru separate section vaithirukkiren.