Pages

இந்தியர்கள் அமெரிக்காவில் இன்னொரு கூவம் ஏற்படுத்துகிறார்களா? - பாகம் 2

எச்சரிக்கை: இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வையே. என் அனுபவங்களில் இருந்து எழுதுகிறேன். இந்த விஷயத்தில் நான் நேரடியாக பாதிக்கப்பட்டதால்: YES, I AM BIASED.

முதல் பாகம் எழுதி மூன்று வாரங்கள் ஆயிற்று. இடையில் ஏகப்பட்ட விஷயங்கள் நடந்தேறிக்கொண்டே இருக்கு. எல்லாம் தலவலி. அப்புறம் இன்னிக்கு எழுதறத்துக்கு இன்னொரு முக்கியமான காரணம், ஆன்லைன் வீடியோஸ் எல்லாமே பாத்தாச்சு. இதுக்கு மேல பார்க்கறத்துக்கு ஒன்னுமே இல்லைன்னு ஆனத்துக்கு பிறகு எழுதலாமேன்னு தோனித்து.

கன்சல்டன்சி கொடுமை

இங்கு படித்து முடித்ததும் உடனே வேலை தேடியே ஆக வேண்டிய கட்டாயம். வீட்டுல உட்கார்ந்து வேர்கடலை சாப்பிட்ட படி வேலை தேட முடியாது. இங்க ஒரு மாசம் வேலை இல்லாம இருந்தா முடிஞ்சுது கதை (செல்போன் அது இதுன்னு கணக்கு போட்டா ஒரு 200 டாலர் இல்லாம கத ஓடாது). அதுனால என்னமோ நம்மள ஒருத்தன் கத்தியோட துரத்திகிட்டு வரும்போது எப்டி ஓடுவோமோ அப்டி ஒரு பதற்றம், வேகம் எல்லாம். யாராச்சும் சொந்தகாரங்க, நண்பர்கள் இருந்தா நல்லது; அவங்க வீட்ல போயி ஓசி சாப்பாடு சாப்பிட்டுகிட்டு வேலை தேடலாம். அது இல்லைன்னா ரொம்ப கஷ்டம்.

சரி, முக்கியமான விஷயத்துக்கு வருவோம். அமெரிக்கால வேலை செய்யறத்துக்கு அந்தந்த தகுதிகளுக்கு ஏற்றார்போல் விசா (visa-H1, L1, B1, J1...) இருக்கு. இதுல ரொம்ப பிரபலமானது H-1 விசா. நீங்க செய்தித்தாள் அங்க இங்க நிறையா படிச்சு இருப்பீங்க. இந்த H1 விசாவுக்கு அப்டி என்ன மவுசுன்னா... பின்னாடி இந்த ஊரோட 'பச்ச கார்டு' (Green Card), அமெரிக்க குடியுரிமைக்கு எல்லாம் அப்ளை பன்ன ரொம்ப வசதி. நம்மாளு ஊர்லேந்து வரும் போதே கணக்கு போட்டுட்டுதான்யா வர்றான். மொதல்ல ரெண்டு வருசம் படிப்பு, அப்புறம் H1, அப்புறம் கல்யாணம், பச்ச அட்டை, குடியுரிமை - இதுதான் டிபிகல் ப்ளான். ஊர்ல தானியம் கொட்டி வைப்பதற்கு இருக்கும் குதிர்ல நம்மாளு பணம் சேக்கனும்னு கணக்கு போடறான்.

விசா கதய விட்டுட்டு கன்சல்டன்சி பக்கம் கொஞ்சம் திரும்பி பார்ப்போம். இந்த 'கன்சல்டன்சி' என்னன்னு பச்சையா சொல்லனும்னா நம்ம குடிய கெடுக்க வந்தவனுங்க. நெசந்தான். ஏதோ ஒன்னு ரெண்டு பேர் நல்லவங்களா இருந்தா அவங்க எச்ஸப்ஷன்ஸ். Exception does not make rule. 90% கன்சல்டன்சி வெச்சிருக்கிறவன் ஏமாத்திதான் சார் பொழைக்கறான். எவனோ ஒருத்தன் சாப்பட்டுல மண் அள்ளி போட்டுட்டு தான் நம்மாளு டாலர ரூபாயா மாத்தறான். இல்லேன்னு சத்தியம் பண்ண சொல்லுங்க நான் நாளைக்கே ஊருக்கு மூட்டை கட்டிகிட்டு கெளம்பிடறேன் (பொய் சத்தியம் செல்லாது; என்ன மாதிரி ஆளுங்கள ஊர விட்டு கெளப்பினா போதும்னு பொய் சத்தியம் செய்வாங்க).

சுருக்கமா சொல்லனும்னா, தகுதி இல்லாத ஆட்களை போலியா அமெரிக்க கம்பெனிகள்ல வேலைக்கு அமர்த்தறது. இதுதான் இவங்க பண்றது. இது போலின்னு தெரிஞ்சும் தொடர்ந்து நடந்துகிட்டேதான் இருக்கு. ஏன்னுதான் புரியல. அது ஒரு கருப்பு உலகம். நம்முடைய கண்களை கட்டித்தான் அங்கே உள்ளே அனுமதிப்பார்கள். வாய்கள் உண்மை பேசக்கூடாது. அசிங்கப்பட்டாலும், அட! இது என்ன நம்ம ஊரா? அசிங்கப்பட்டாதான் என்ன? பரவாயில்ல என்று பழகிக்கொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறது. மொத்தத்தில் அங்கே நான் கெளரவமான திருடனாக்கப்படுகிறேன். காலையிலிருந்து பசியோடு வேலை செய்து கிடைத்த ஒரு ரூபாயில் மாலை நேரம் கால் வயிற்றிற்கு சாப்பிடும் சிறுவனிடமிருந்து திருடி உண்ணும் கீழ்த்தரமானவனாக்கப் படுகிறேன்.

இன்றைய தேதியில் ஆண்டொன்றுக்கு மொத்தம் 65,000 H1 விசா அனுமதிக்கப்படுகிறது. இதில் எழுபதிலிருந்து எண்பது சதவிகிதம் நம்ம ஆட்கள் தான். அமெரிக்காவில் உயர்கல்வி பயின்றவர்களுக்காக தனியாக 20,000 H1 விசா அனுமதி உண்டு. சென்ற ஆண்டு, முதல் நாளிலேயே இந்த அளவைத்தாண்டி எல்லோரையும் 'ஆ' காட்ட வெச்சுது. அதுக்கு லாட்டரி கொண்டு வந்தாங்க. அதாவது வந்த அப்ளிகேஷன்ல செலக்ட் பண்றதுக்காக. ஊர் பாஷைல சொல்லனும்னா குலுக்கி போட்டு எடுக்கறது. ஆக நமக்கு கெடைக்குமா கெடைக்காதோன்னு பயம். அதுக்கும் ஒரு வழி கண்டு புடிச்சோம். என்னன்னா, நம்மாளு ஒருத்தன் ஒரு விசாவுக்கு அப்ளை பண்றது இல்ல. மல்டிபுள் அப்ளிகேஷன்ஸ். கிடைக்கின்ற வாய்ப்பை பெருக்குவதற்கான முயற்சி. அதுக்காகவே இந்த தடவை வெச்சாங்கல்ல ஆப்பு. இந்த முறை ஒருவர் ஒரு அப்ளிகேஷன்தான் போடலாம். அவனும் என்னன்னமோ செஞ்சு பாக்கறான். நாங்க உடுவோமா என்ன?

இந்த கதயெல்லாம் உடு; இதுல உனக்கென்ன ப்ரச்சன? அப்டின்னு கேக்கறது காதுல உழுவுது. ஆம். பாதிக்கப்பட்டேன். நானே நேரடியாக பாதிக்கப்பட்டேன்.

என்னோட படிச்சவங்க எல்லாம் 'ஆறு' வருசம் அனுபவம் போட்டு வேல கேக்கறாங்க சார். நானும் அவங்களும் சேந்து ஒரு கம்பெனிக்கு அப்ளை பண்ணினா யார எடுப்பான் சொல்லுங்க? இவங்க எல்லாரும் ஊர விட்டு வந்தே ரெண்டு வருஷந்தான் ஆவுது. அதுக்குள்ள ஆறு வருச அனுபவம். நேத்தி வரைக்கும் என்னோட மொக்க போட்டவன், அனுபவமுள்ள ஆபீசர் ஆயிடறான் சார்.

நானும் நெறைய கன்சல்டன்சிகிட்ட பேசி பாத்துட்டேன். ஒருத்தனுக்கும் நாம தப்பு பண்றோங்கற உணர்வே இல்லைங்க. அடங்கொக்கமக்கா! சரி, எனக்கு அஞ்சு வருசம் அனுபவம் போட்டா நான் எப்டிடா இன்டர்வ்யூல பாஸ் பண்ணுவேன்? அப்டின்னு கேட்டா... அதுக்குத்தான் ஒரு ஐடியா இருக்குல்ல அப்டிங்கறான்; சார்...நீங்க ஒன்னும் கவலை படாதீங்க. நம்ம கிட்ட அனுபவஸ்தர்கள் நிறையா இருக்காங்க. அவங்கள்ல ஒருத்தர் நீங்கன்னு சொல்லி டெலிபோன்ல இன்டெர்வியூ முடிச்சுட்டா போவுது. அடங்கொன்னியா! இப்போ சரி, நான் வேலைக்கு போனதுக்கப்புறம் சொதப்பினா என்ன பண்றது? அதுக்கும் ரெடியா ஒரு பதில்: "உனக்கு மூளையே இல்ல சார். இவ்ளோ தூரம் யோசிக்கறவன் இத எப்டி விடுவேன்? அதுக்கும் கைவசம் ஒரு மொள்ளமாரித்தனம் இருக்கு. நீங்க அங்க போயி வேல தெரிலைன்னா எங்களுக்கு ஒரு ஈமெயில் பண்ணுங்க... அடுத்த நாள் அத நாங்க எப்டி பண்றதுன்னு சொல்லி ரிப்ளை பண்றோம்"


அட! தப்பு பண்றத விடுங்க. மாட்டிகிட்டு மானங்கெட்டு அசிங்கப்பட்டா என்ன பண்றதுன்னு கூட பயம் கெடயாது. எனக்கு தெரிஞ்ச ஒருத்தன ஒரு கம்பெனில உண்மை தெரிஞ்சு விரட்டி விட்டுட்டானுங்க. அவன் என்ன செஞ்சான்? செத்தா போயிட்டான்? அடுத்த கம்பெனில போயி வேலைக்கு சேந்தாச்சு. ஆக என் அருமை நண்பன் சுயமரியாதை இல்லாத ஜடமாகிறான்.

யப்பா....தல சுத்துதில்ல? இதுல இன்னும் நிறைய வயித்தெரிச்சல் இருக்கு. அதெல்லாம் எழுத ஆரம்பிச்சா நான் ரொம்ப கெட்டவனாயிடுவேன். அதுனால இதோட நிறுத்திக்கறேன்.

கடைசி: இவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கில் நம்முடய மானத்தை, மரியாதையை, மனசாட்சியை விற்றுக் கொண்டிருக்கிறோம்.

Context: My organization is against my H1 visa sponsorship. They were not able to find a person with qualifications but at the sametime they are not willing to sponsor a work visa for me. This is how it has spread a negative connotation about H1b visas. It is already on negative high and is not very far that whole consultancy idea getting abolished.

No comments: