இந்தியர்கள் அமெரிக்காவில் இன்னொரு கூவம் ஏற்படுத்துகிறார்களா?
எச்சரிக்கை: இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வையே. என் அனுபவங்களில் இருந்து எழுதுகிறேன்.
என் வலைப்பதிவு இத்தனை நாட்கள் அமைதியாகவே இருந்திருக்கிறது. அதுவும் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து. எழுதுவதற்கு ஒன்றும் இல்லையா? அதெல்லாம் ஒன்னுமில்ல. சோம்பேறித்தனம். யார் யார் மேலயோ கோபம், வெறுப்பு, ஆத்திரம். எழுதல. வெறுப்புல நீ ஏன்டா எழுதலைன்னு கேக்கறீங்க. அட, நான் எதுவுமே உருப்டியா செய்யல. அதுல ஒன்னு எழுதல. சரி விடுங்க. அது நான் மேல்படிப்பு முடித்து வேலை தேடி அல்லாடிய காலம்.
நம்ம ஊர்ல ஒரு நெனப்பு. என்னமோ அமெரிக்கா வந்துட்டா எல்லாம் சுலபமா அமைஞ்சுடும் அப்டின்னு. என்னுடைய அனுபவத்துல இனிமே யாராச்சும் அமெரிக்கா வர்றதுக்கு வழி கேட்டா, தம்பி ஊர்லயே இருந்துடுங்க அப்டின்னு சொல்லிடுவேன். ஏன்னா இங்க வந்து படுற பாடு பட்டவனுக்குத்தான் தெரியும். இதுல கொடுமை என்னன்னா, நாம இத சொன்னா: தோ பார்றா அங்கபோயி நல்ல சம்பாதிச்சுட்டு பேசறான் பாரு அப்டின்னு சொல்றானுங்க.
சார் நெசமாத்தான் சார் சொல்றோம். இங்க படிக்க வர்றவனுங்க பாதி பேர் சுயமரியாதய தொலைச்சுட்டு, இந்த ஊர்க்காறன ஏமாத்திட்டுதான் வேல செய்ய வேண்டி இருக்கு. இது கிட்டத்தட்ட ஒரு சுத்தம் செய்ய முடியாத கூவம் போலத்தான் இருக்கு. உண்மைய சொல்லட்டுமா? நம்புவீங்களா?
முதல் கட்டம்: இந்தியாவிலிருந்து அமெரிக்கா படிக்க வருகிறான் ஒரு இளைஞன்.
இந்தியாவிலிருந்து ஒரு இளைஞன் அமெரிக்காவுக்கு ஏகப்பட்ட கனவுகளொடும் கற்பனைகளொடும் வந்து சேர்கிறான். இங்க ஒரு நல்ல யுனிவர்சிடில படிச்சா ஓகே. லுச்சாவா இருந்தா அவ்ளோதான். இங்க வர்ற பசங்களுக்கு அவனவனுக்கு ஏத்தா மாதிரி ஒரொரு கனவு. சில பேர் நெசமாவே படிக்க வர்றான். சில பேர் காசு வேணும்னு வர்றான். அட இன்னும் சில பேர் நல்ல பொண்ணு கெடைக்கும்னு வர்றான். இங்க வர்ற பாதி பேருக்குத்தாங்க படிக்க அசிஸ்டன்ட்ஷிப் கெடைக்குது. நம்ம ஊர் பாஷைல சொல்லனும்னா ஊக்கத்தொகை, ஸ்காலர்ஷிப், இல்ல என்னமோ ஒன்னு. அதாவது ஒரு பேராசிரியர் கிட்ட ஆராய்ச்சியோ, இல்ல உதவியாளரா இருந்து படிக்கறத்துக்கு பண உதவி கெடைக்கறது. அப்டி கெடைச்சுட்டா ஓகே. இல்லேன்னா ரொம்ப கஷ்டம். ஏன்னா இந்த ஊர்ல நம்மளால செலவு செஞ்சு படிக்க முடியாது (அட்லீஸ்ட் நடுத்தர வர்க்கத்துனால).
இந்த மாதிரி அசிஸ்டன்ட்ஷிப் கெடைக்கலேன்னா என்ன செய்யறான் நம்ம ஆளுன்னுதான் கேள்வி? யாருக்காச்சும் தெரியுமா?
நம்ம ஊர்ல சொல்லும் போது பெருமையா நான் வெளில பார்ட் டைம் வொர்க் செஞ்சு படிக்கறேன்னு சொல்றது. அது அமெரிக்கால சட்ட விரோதம்னு யாருக்காச்சும் தெரியுமா?(யுனிவர்சிடில பார்ட் டைம் வேல செய்யறது ஓகே. வெளில வேல செஞ்சா அது தப்பு). ஏதோ ஒரு சதவிகிதம் பேருக்குத்தான் தெரியும்னு நெனைக்கறேன். ஏன்னா சமீபத்துல விஜய் டிவி "காபி வித் அனு" ப்ரோக்ராம் பாத்தேன். அதுல வந்த தன்வி (ஏ. ஆர். ஆஸ்தான பாடகி: முன்பேவா என் அன்பேவா...) சொல்றாங்க: "அமெரிக்கால நான் க்ரோஸரி ஷாப்ல வேல செஞ்சுகிட்டேதான் படிச்சேன்" அப்டின்னு. அது இங்க இருக்கறவங்ளுக்கு தெரியும் சட்ட விரோதம்னு.
இப்டி அசிஸ்டன்ட்ஷிப் கெடைக்காதவன் என்ன செய்யறான்? மளிகை கடைலயோ, இல்ல பெட்ரோல் பங்க்லயோ இல்ல வேற எதாச்சும் கடைலயோ வேல செய்யறான். எப்டின்னு கேட்டீங்கன்னா ரொம்ப வருத்தப்படுவீங்க. 12 மணி நேரம் நிக்கறான் சார். ஒரே எடத்துல. இவனுக்கு சம்பளம் ஒரு மணி நேரத்துக்கு 6 டாலர் (எடத்துக்கு எடம் மாறுபடும்). வார நாட்கள்ல ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் நிக்கறான்னா... வார இறுதில 12 மணி நேரம். இதுல என்ன சார் பிரச்சன அப்டின்னு கேக்கறது காதுல விழுது. நம்மாளு ஆறு டாலருக்கு வேல செய்யறதால உள்ளூர்க்காரனோட வேல போயிடுது. இங்க எப்டின்னா... ஒரொரு மாநிலத்துலயும் குறைந்தபட்ச ஊதியம் அப்டின்னு வெச்சுருக்கானுங்க. ஆனா நம்மாளு 10 டாலர் வாங்கற எடத்துல 6 டாலருக்கு வேல செய்யறான். இவன் போனா போன செய்ய வேண்டிய வேலை மட்டும் செய்யறதில்ல. சுயமரியாதய தொலச்சுட்டு கக்கூஸ் கழுவற வேலை வரைக்கும் செய்யறான். மொதல்ல கொஞச நாளைக்கு அத்தியவசிய தேவைக்காக வேல செய்யறவன் பிறகு காசு மேல ஆச வந்து முழுக்க முழுக்க தொழிலாளி ஆயிடறான். கேட்டா வேற வழி இல்ல அப்டிங்கறான். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேல செஞ்சா இவன் எங்க படிக்கறது. அப்புறம் கொஞ்ச நாள்ல ஏதோ பாஸ் பன்னினா போதும் சாமின்னு வெளில வர்றான்.
இவனுங்கள்ல பல பேர் இந்த ஊர் போலிஸ்கிட்ட மாட்டிக்காம இருக்கறதும் இல்ல. அப்பப்ப எவனாச்சும் மாட்டிகிட்டேதான் இருக்கான். ஆனா சட்டவிரோதமா வேல செய்யறவன் எண்ணிக்கை மட்டும் கொறயல. இங்க வந்து ரெண்டு வருஷம் ஆன பசங்க அது என்னமோ தப்பே இல்லைங்கற மாதிரி ஒரு தப்பான தோற்றத்த ஏற்படுத்தி நம்மாளயும் இந்த மாதிரி ஆக்கிடறான். இதுல தப்பிச்சு வர்ற பசங்க கம்மிதான். நானும் ஒரு அஞ்சு நாள் வேலைக்கு போனேன். அப்றம் இந்த மனசாட்சி சும்மா இருக்காம திரும்பி வந்துட்டேன்.
இவ்ளோ கஸ்டபட்டு படிச்சு வெளில வந்து அவன் என்ன பண்றான்னு நீங்க கேக்கனும். நீங்க கேக்கலைன்னாலும் நான் சொல்லத்தான் போறேன். மீண்டும் சந்திப்போம்.
2 comments:
Awesome write up....very true....:)
//வர்றவனுங்க பாதி பேர் சுயமரியாதய தொலைச்சுட்டு, இந்த ஊர்க்காறன ஏமாத்திட்டுதான் வேல செய்ய வேண்டி இருக்கு.//
தென்கிழக்காசியாவின் வளங்கொழிக்கும் நாட்ல வேற மாதிரி நிலைமை.. அமெரிக்கா போறவனாவது ஏதோ வேலை செய்றான்.. இங்க வி.....ம் செய்றானே.. இத பத்தி உள்ளூர் செய்தி தொலைக்காட்சி.. 3 பாகம் வெளியிட்டது பெரிய கொடுமை.. காரணம் கேட்டா.. சட்டை கசங்காத வேல, சம்பளம் கம்மின்னு ஆளுக்கொரு காரணம்..!!
Post a Comment