பெண்களுக்கான உடை கட்டுப்பாடுகள்
பெண்களுக்கான உடை கட்டுப்பாடுகள் பற்றிய செய்திகள் சமீபத்தில் மிகுந்த கவனத்திற்குள்ளாகியிருக்கிறது. சினிமா நடிகைகளின் உடைகள் பற்றி அரசியல் தலைவர்கள் மற்றும் சமுதாய காவலர் போர்வையில் இருக்கும் பெரிய மனிதர்களாகிய விமர்சகர்கள் விமர்சிப்பதும், அதற்கு நடிகைகள் மன்னிப்பு கேட்பதும் கிட்டத்தட்ட புளித்த செய்தியாகி விட்டது. சமீபத்தில் லீனா மணிமேகலை என்ற பெண் எழுத்தாளர்/சிந்தனையாளர் ஒரு நிகழ்சிக்காக அழைக்கப்பட்டிருந்த போது சென்னை லயோலா கல்லூரியில் துப்பட்டா அணியாமல் வந்ததற்காக அனுமதிக்கப்படாதது பற்றிய விவாதம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. இதில் அவர் இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்று ஆண்கள் தீர்மானிக்கிறார்கள் மற்றும் இந்த சுதந்திரம் கூட பெண்களுக்கு இல்லையெனில், வேறு எதில் சுதந்திரம் இருக்க முடியும் என்று கேட்கிறார். ரொம்ப நியாயமான கேள்விதான்.
அவர் துப்பட்டா அணியாமல் வந்ததற்காக அனுமதிக்கப்படாதது வருந்தத்தக்கதாயினும், அவரைப் போன்ற அறிவாளர் நாம் என்கு செல்கிறோம் அங்கு என்ன கோட்பாடுகள் (கட்டுப்பாடுகள்) என்பது பற்றி சிந்தித்திருக்க வேண்டும். அதோடு, ஒரு நிறுவனத்திற்கு செல்லும் போது அந்நிறுவனத்தின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதுதான் ஒரு பண்பாளர் செய்யக்கூடிய கண்ணியமான செயலாகும். அதை விடுத்து இவர் பெண்ணியம் பேசுவதும் பெண் சுதந்திரம் பேசுவதும் சரியல்ல. இது அவருடைய சுயஆணவத்தை (ஈகோ) அந்த கல்லூரி நிர்வாகத்தினர் காயப்படுத்தியதற்கான வெளிப்பாட்டின் முகமூடியாகப் பயன்படுத்துகிறார்.
தமிழகத்தில் நடிகைகள் பற்றிய சர்ச்சைகளில் அரசியல்வாதிகள் மற்றும் பலர் விமர்சிப்பது ஒரு பச்சை மொள்ளமாரித்தனம். அதே நடிகைகள் திரைப்படத்தில் அவர்களுடைய அங்கங்கள் தெரிய உடையணிந்தும் ஆபாசமான அசைவுகளும் கொண்டிருப்பதில் தவறில்லையோ? ஒருவேளை திரையரங்க இருட்டில் இவர் தமிழர் என்பது மறந்து போகின்றதோ என்னவோ? தமிழக நடிகைகள் ஓரளவுக்கு மேல் "காமிக்க" மாட்டார்கள் என்பதால் வேறு மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்து தமிழ் இயக்குநர்கள் காமக் கற்பனைகளுக்கு வடிவம் கொடுக்கின்றனர். தமிழ்நாட்டுத் தலைவர்கள் இந்த திரைப்படங்களை 'சிறப்புக் காட்சி' பார்த்து விட்டு விமர்சிப்பது கொடுமை.
மீண்டும் இந்த உடை விஷயத்திற்கு வருவோம். நம்முடைய சமுதயம் மட்டுமல்லாது உலகில் உள்ள எல்லா நாகரிகங்களிலும் சமுதாயங்களிலும் எல்லா காலங்களிலும், பெண்களின் உடை பல்வேறு கூறுகளால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தெரிந்து கொள்ள நிறைய ஆராய்ச்சி தேவைப்பட்டது. ஆதிமனிதர்கள் ஆடை அணிந்தது கிடையாது. அவர்கள் கண்டம் விட்டு கண்டம் செல்லும் போது அந்தந்த தட்ப வெட்ப சூழ்நிலைகளுக்கேற்ப அவர்களுக்கு உடை தேவைப்பட்டது. சுட்டெரிக்கும் சூரியனிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், கடுக்கும் குளிரிலிருந்து காக்கவும், கடிக்கும் பூச்சிகள் மற்றும் ஆபத்தான ரசாயனங்களில் இருந்தும் காத்துக் கொள்ளவே ஆடைகள் தேவைப்பட்டது. இவ்வாறாகத் தோன்றிய ஆடை சமாச்சாரம் பின்பு ஒவ்வொரு நாகரிகத்திலும் அந்த சமுதாயத்தின் அடையாளமாக விளங்கிற்று. உதாரணத்திற்கு எகிப்திய உடைகள் ஒரு மாதிரியும், ஐரோப்பிய உடைகள் ஒரு மாதிரியும், ஆசிய கலாச்சாரங்களின் உடைகள் ஒரு மாதிரியும் இப்படி உடையைக் கண்டால் கலாச்சாரத்தை கண்டுகொள்ளும் அளவிற்கு அடையாளங்களாகின.
உடைகள் உடலின் பகுதிகளை மறைக்கவே என்றாலும் காலப்போக்கில் அவை சமுதாயத்தின் அளவுகோலாகவும், சமுதாயத்தை பிரதிபலிப்பதாகவும் ஆகிவிட்டன. கலாச்சாரங்கள் என்றுமே மாறும் தன்மை கொண்டவை. அவை ஒரே மாதிரியாக இருந்ததே இல்லை. இன்று நம்முடைய தலைவர்களும் தாய் தந்தையரும் சொல்லிக்கொண்டிருக்கும் கலாச்சாரத்திற்கு வயது கணக்கிட்டால் சில நூற்றாண்டுகளைத் தாண்டாது. தமிழச்சிகள் சில பத்து/ நூறு வருடங்களுக்கு முன்பு வரை ரவிக்கை அணிந்தது கிடையாது. தமிழ் மன்னர்கள் ஆண்ட காலங்களில் (சில நூற்றாண்டுகளுக்கு முன்பு) பெண்கள் மேலாடை அணியவில்லை. இன்று ஆடை என்பது பெண்ணின் அழகு பாகங்களை மறைத்திருந்தால் மட்டுமே கலாச்சாரத்திற்கு உட்பட்டதாகக் கருதப்படுகிறது.
சாணக்கியருடைய அர்த்த சாஸ்திரத்தில் பெண்கள் பல மணம் செய்து கொள்வது பற்றியும், திருமணம் செய்து கொள்ளாமலே பல துணைவர்கள் மூலம் வாரிசுகளை பெற்றெடுப்பது பற்றியும், கணவனே வேறொருவன் மூலமாகத் தன் மணைவியை குழந்தை பெற்றெடுக்கச் செய்வது பற்றியும் குறிப்பிடுகிறார். இன்றைய சூழலில் நாம் இதை ஏற்றுக் கொள்வோமா?
ஆக எது கலாச்சாரம்? எது கலாச்சார சீரழிவு? முந்தைய காலங்களில் வாழ்ந்தவர்கள் கலாச்சார சீர்கேட்டில் வாழ்ந்தார்களா? நாம்தான் சரியான கலாச்சாரத்தில் வாழ்கிறோமா?
ஆக உடைக்கும் கலாச்சாரத்திற்கும் சம்பந்தமே கிடையாது. ஆடை என்பது அந்தந்த காலங்களில் அந்தந்த சூழ்நிலைகளுக்கேற்ப பல்வேறு கூறுகளுக்குட்பட்டு அமைகிறது. எந்தெந்த காலகட்டத்தில் என்ன உடை அணியப்பட்டிருக்கின்றதோ, அது கலாச்சாரமாகிறதே தவிர கலாச்சாரம் உடைகளை தீர்மானிப்பதில்லை. இன்றைய நிலையில் பெண்கள் தங்களுக்கு சவுகரியமான உடைகளை அணிவதும், அவர்களின் அழகை விளம்பரப் படுத்தும் வகையில் ஆடைகள் அணிவதும் பெண்களின் சுதந்திரத்தின் அளவுகோலாகவே பார்க்கலாம். இதற்கான ஆய்வு ஒன்றை அமெரிக்க நாட்டு ஆராய்ச்சியாளர் மேற்கொண்டிருக்கிறார். அதில் அவர் கண்டறிந்திருப்பது: "பெண்கள் எவ்வளவுக்கெவ்வளவு உடை கொஞ்சமாக அணிகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு சுதந்திரம் பெற்றிருக்கின்றனர் என்று அர்த்தம். அது அவர்களின் 'தனித்தியங்கும் திறனைக்' (being independent) காட்டுவதாகக் இருக்கிறது. மேலும் பெண்கள் எவ்வளவு அதிகமாக படிக்கிறார்களோ அதற்கு ஏற்றாற் போல் ஆடையின் அளவு குறைகிறது. அதுமட்டுமல்லாது, ஆண்/பெண் சதவிகிதம் (sex ratio) பெண்களின் ஆடைகளை நிர்ணயிக்கிறது. பெண்களின் ஆடை குறையக் குறைய ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்கிறது அல்லது பொருளாதாரம் வளர வளர பெண்களின் ஆடை அளவு குறைகிறது". இவையெல்லாம் சாதாரணமாக சொல்லப்பட்ட கருத்துக்கள் அல்ல. இவை யாவும் புள்ளியியல் ரீதியாக நிருபித்து விளக்குகிறார்.
பெண்கள் ஆண்களுக்கு சமமாக வேலை செய்து பொருளாதார ரீதியாக தனித்தியங்கும் திறன் பெறும் போது பெண்ணுக்கு ஆணின் துணை தேவைப்படுவது இல்லை. ஆனால் பெண்கள் ஆண்களைச் சார்ந்திருக்கும் போது அவள் ஆண்களுக்கு சொந்தமான பொருளாக (object) கருதப்படுகிறாள். சமுதாயத்தில் திருமணம் என்ற நிறுவனத்தின் மூலம் ஒரு பெண் ஆணுக்குச் சொந்தமான பொருளாக்கப்படுகிறாள். காலம் காலமாக பெண்கள் கற்பு, காமம், திருமணம் போன்றவற்றால் அடக்கப்பட்டிருக்கிறாள். உயிரை விடவும் கற்பு பெரிதெனப் போற்றப்பட்டு பெண்ணை அடிமைப்டுத்தியிருக்கின்றனர். வள்ளுவனில் ஆரம்பித்து இளங்கோவடிகள் வரை அந்த கற்பு சமாச்சாரத்தை புனிதமாகக் காட்டி பெண்களுக்கெதிரான ஆயுதமாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள். இப்படியாகக் கற்பிக்கப்பட்ட பெண்ணை, அந்த ஆண்மகன் ஒரு பொருளைப் பாதுகாக்கும் பொருட்டு அங்கங்கள் தெரியாத வகையில் ஆடை அணியச் செய்கிறான். ஆக அவனுக்குச் சொந்தமான பொருள் வேறு எவருடைய பார்வைக்கும் விருந்தாவது விரும்பத்தக்கதாக இல்லை. ஆனால் மாறி வரும் இன்றைய சமுதாயத்தில் பெண்கள் படித்து, ஆண்களுக்கு இணையாக பொருளீட்டி தனித்தியங்கும் திறன் பெறும் போது அவளுக்கு அந்த கட்டுப்பாடுகள் தேவைப்படுடதில்லை. உடல் ரீதியான தேவைகளுக்கு அவள் பல ஆண்களிடம் அந்த தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதும் நியாயமாகிறது.
இன்னொரு கோணத்தில் பார்த்தால், ஆடை என்பது மனித குலத்தின் பெருக்கத்திற்கான கருவியாகவும் செயல்படுகிறது. பெண்கள் குறைவாக ஆடை அணிந்தாலும் சரி, முழுக்கப் போர்த்தியிருந்தாலும் சரி அது பல சமயங்களில் ஆண்களைக் கவர்வதாக அமைகிறது. ஐரோப்பிய கலாச்சாரங்களில் மிக நீளமான உடை அணிந்தாலும் பெண்களின் வளைவுகளை கச்சிதமாக காட்டுவதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதேபோல இப்போது நம்முடைய கலாச்சாரத்தில் அணியப்படும் சேலை மற்றும் ரவிக்கையும் ஆண்களை கவர்வதாகவே இருக்கின்றது. ஆக ஆண்கள் பெண்களைக் கவர்வதற்காகவும், பெண்கள் ஆண்களைக் கவர்வதற்காகவும் 'கூட' உடை பயன்படுகிறது. இப்போது ஆபாசம் அல்லது எதிர்க்கப்படும் உடைகளை சற்றே உற்று கவனித்தால் அவை எல்லாம், பெண்ணின் வளைவுகளைத் தெளிவாகக் காண்பிப்பதாவகே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஜீன்ஸ் எனப்படும் மேலை நாட்டு ஆடை ஆண்கள் பெண்கள் இருவருமே அணிகிற ஒரு ஆடை. ஆனால் அதில் ஒரு வித்தியாசம் உண்டு. ஆண்களுடைய ஜீன்ஸ் 'தொள தொள' எனவும், பெண்களுடையது இறுக்கமாகவும் இருக்கும். அதேபோண்று பெண்களுக்கான பிரத்தியேக டி-சர்ட் கூட இறுக்கமாக இருக்கும். இதை உற்று கவனித்தால், ஜீன்ஸ் பெண்களின் பின்னழகு மற்றும் கால்கள் அழகையும், மேல் சட்டைகள் பெண்களின் மார்பகத்தின் அழகையும் ஆடை மூலம் வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக இருக்கிறது. பெண்களின் மேல் சட்டைகளில் கழுத்துக்கும் மார்புக்கும் இருக்கின்ற இடைவெளியை மூடாமல் தோல் தெரியும் பகுதியை அதிகரிப்பது அந்த அழகின் உதாரணத்தை (sample) உணர்த்துகிறது. இவையெல்லாத்துக்கும் ஆண்கள் மட்டும் காரணம் அல்ல. பெண்களுக்கு அவர்களின் அழகுக்கான அங்கீகாரம் தேவைப்படுகிறது. அவர்கள் மற்றவர்களின் கவனத்திற்குள்ளாவதை விரும்புகிறார்கள். இதை குற்றம் சொல்ல இயலாது. ஆனால் அதே சமயம் இவ்வாறு உடுத்திக் கொள்ளுகையில் ஆண்கள் பார்த்தால், அதையும் குற்றம் சொல்லக்கூடாது. சுருக்கமாக, இன்றைய சூழலில் பெண்கள் பேன்ட் (pants) அணிவது தேவையாகிறது. பெண்கள் இன்று எல்லா இடங்களிலும் வேலை செய்கிறார்கள். மோட்டார் பைக் ஓட்டுகிறார்கள். ஆக அவர்களுக்கு சவுகரியமானதும் கூட.
பெண்களுக்கு இரவு நேரங்களில் சவுகரியமாக இருக்கவும், கவர்ச்சியக இருக்கவும் பள்ளியறைகளில் (bedroom) அணிந்து கொள்ளவும் வடிவமைக்கப்பட்டது "நைட்டி" (NightWear) என்ற ஆடை. அது இன்றைய கால கட்டத்தில் இரவில் பயன்படுத்துவது மட்டுமன்றி, பகலிலும் அணிந்து கொண்டு தெருவிலும் அலைந்தால் இளைஞர்களின் மனசு அலை பாயாமல் என்ன செய்யும்?
அதே சமயம் ஆண்களுக்கு, பெண்களின் சில பாகங்களின் மீது அபரிமிதமான ஈர்ப்பு இருப்பது உடல் ரீதியான ஒன்று. அதை யாராலும் தடுக்க இயலாது. அந்த பாகங்கள் காலங்களுக்கேற்பவும், கலாச்சாரங்களுக்கேற்பவும் மாறிக்கொண்டே இருக்கிறது. உதாரணமாக ஒரு சீன கலாச்சாரத்தில் பெண்களின் கால்கள் மூடப்பட்டிருக்கும். அவை அந்நாட்டு ஆண்களுக்கு காம இச்சையை தூண்டுவதாக இருந்திருக்கிறது. அதே போல ஒரு ஆப்பிரிக்க நாட்டில், கழுத்துப் பகுதியை பெண்கள் மறைத்திருந்தனர். அவர்களின் மார்பகங்கள் திறந்தே இருந்தன. ஆனால் அந்நாட்டு ஆண்களுக்கு, பெண்ணின் மார்பகங்களை விட கழுத்துப்பகுதியே காம இச்சையை தூண்டியிருக்கிறது. ஆக இது அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றார் போல் மாறிக்கொண்டே இருப்பது. ஆக இந்த உடல் ரீதியான ஈர்ப்புகளை கடுமையான சட்டம் கொண்டொ அல்லது சமுதாயக் கோட்பாடுகளாலோ எள்ளளவும் கட்டுப்படுத்துவது மிகக் கடினம்.
பெண்கள் அவர்களின் உடைகளை தீர்மானிப்பது அவர்களின் சுதந்திரம். அதே சமயம், அதற்கான நேர் விளைவுகளையும், எதிர் விளைவுகளையும் சந்திப்பதும் அவர்கள் பொறுப்பு. அதன் மூலம் கிடைக்கும் ஆதாயமும் விரயமும் அவர்களையே சேரும்; அவர்களையே சாரும். ஆடைகளில் இருந்து சுதந்திரம் பெற்றுக் கொண்டு கற்பழிப்பு வழக்குகளில் ஆண் சமுதாயத்தையே மொத்தமாக குற்றம் சொல்வதும் எற்றுக் கொள்ளத் தகாததாகிறது.
பெண்கள் அவர்களின் விருப்பத்திற்கேற்ப ஆடை அணிவதால் அவர்கள் சுதந்திரமடைகிறார்கள் என்பது உண்மையானால், அது வரவேற்கத்தக்கது. ஆனால் நம்முடைய hypocrite சமுதாயத்தில் "அரைகுறை ஆடையை ரசித்துவிட்டு கலாச்சார சீரழிவு பற்றி கவலைப்படுபவர்களும்", "அங்கம் தெரிய ஆடை அணிந்து விட்டு, அந்த இளைஞன் என்னை உற்றுப் பார்க்கிறான்" என்று சொல்லும் இருதரப்பினர் இருக்கும் வரை இது முடியப் போகும் பிரச்சினை அல்ல.
மீண்டும் சந்திப்போம்.
(தங்கள் பார்வையில் கொஞ்சம் பச்சையாகவும் கொச்சையாகவும் இருந்தால் மன்னிக்கவும். இந்த தலைப்பை அவ்வாறு அலசுவதே சரி என்று தோன்றியது.)
1 comment:
உயர்திரு தோழர் அவர்களுக்கு தங்களின் வெண்பா எழுதும் ஆற்றலை இயன்றவரையில் இனிய தமிழ் வலையின் மூலம் அறிந்தேன். எனது வெண்பா எழுதலாம் வாங்க வலைத்தளத்தில் ஈற்றடிக்கு வெண்பா எழுதும் விளையாட்டை நடத்திவருகிறேன். அதில் கலந்து கொள்ள தங்களை அழைக்கிறேன். நன்றி http://venbaaeluthalaamvaanga.blogspot.com/
Post a Comment