Pages

'சா'தக(ன)ம் - சிறுகதை முயற்சி

என் ஜன்னல்களைத் திறந்து ஆறேழு மாதங்கள் ஆகியிருக்கும். ஏனோ எனக்குப் பிடிக்காதிருந்தது. இன்று என் மூச்சுக்காற்று அடைத்துவிடும் போலிருந்தது. புதிய காற்று அவசியம் தேவைப்பட்டது. சாய்வு நாற்காலியில் சாயாமல் உட்கார்ந்திருந்தவன் எழுந்து என் ஜன்னல்களைத் திறந்தேன். காற்று வெள்ளம் போலப் பாய்ந்து என் முகத்தில் அடித்தது. என் கண்கள் மீண்டும் ஒருமுறை விழித்துக் கொண்டன. என் தசைகள் மீண்டும் ஒருமுறை காற்றின் ஈரத்திலேயே குளித்துக் கொண்டன. என் சுவாசம் மட்டும் இன்னும் சூடாய் இருந்தது. புரியவில்லை எனக்கு.

தொலைபேசி மீண்டும் அதே பாடலை ஒலித்தது. அதற்கு சலிப்பேதும் இல்லை. மீண்டும் என் அம்மாதான் அழைத்தாள். இம்முறை அழுகை இல்லை. ஓய்ந்த மழைக்குப் பிறகு இலைகளிலிருந்து ஒழுகும் துளிகளின் சத்தம் போல விசும்பல் மட்டும் தெரிந்தது. தொலைபேசியாய் இருந்தாலும் அடுத்த முனையில் பேசுபவர் என்ன செய்கிறார் என்று ஊகிக்கும் திறம் அநேகமாய் அடுத்த தலைமுறையின் மரபணுவில் எழுதப்பட்டுவிடும். தெரிந்தும் தெரியாதவன் போலிருந்தேன் நான். என்னிடம் பதிலேதும் இல்லை. பத்து நிமிட இடைவெளியில் என் வாழ்வைத் தீர்மானிக்கும் விளையாட்டை விளையாட நான் தயாரில்லை. ஆனால் என் தாயார் தயார். அவளுக்கென்ன, அது என் வாழ்க்கை.

அவளுக்கு ஒரே விடைதான் தேவை. விநோதமான பரீட்சை அது. வினாவோடு விடையும் சேர்ந்தே அளிக்கப்படும். அதே விடையை மீண்டுமொருமுறை ஒப்பித்தால் போதும். மிக எளிது; ஆனால் மிகக் கடிது. நீங்களாக ஒரு விடையைத் தெரிவு செய்ய உங்களுக்கு உரிமை இல்லை. பிறப்புரிமை பிறப்பளித்தவளிடம் மட்டும் செல்லாது. இந்திய சட்டத்தில் இதற்கான குறிப்பேதும் இல்லை; ஆனால் அது உண்மை. என்னால் அவள் எதிர்பார்க்கும் விடையை சொல்ல முடியாது என்று அறிந்திருந்தேன். ஆனால் அதை அவளிடம் சொல்ல வார்த்தைகள் வரவில்லை. இப்படி என் அவயங்கள் அவ்வப்போது செயல்படாமல் போவதற்கு மிகுந்த பயிற்சி அடைந்திருந்தது. என் மூளை உட்பட. நான் செலுத்திய அம்பு இன்று என்னிடமே திரும்புகிறது. சிறுவயதில் நான் பயன்படுத்திய அதே ஆயுதம். அழுது சாதித்தவன் நான். இன்று அவள் சொல்வதுதான் சரி என்று சாதித்து அழுகிறாள். பாலனாக இருந்தபோது பால பாடம் கற்றுக் கொடுத்துவிட்டேன்.
அவளை நான் சமாதானம் செய்ய முற்படவில்லை. அது முடியாது என்று நன்கு அறிவேன். அமைதியாகவே இருந்தேன். அந்த அமைதி என் சார்பில் வார்த்தைகளை இட்டு நிரப்பும் என்று காத்திருந்தேன். மீண்டும் அவளே பேசினாள். நாளை மறுபடியும் அழைப்பதாகக் கூறி தொலைபேசியைத் துண்டித்தாள். என் சிந்தனை துண்டிக்கப்படாமல் தொடர்ந்தது.

இதுவரை இப்படிப்பட்ட குழப்பத்தில் இருந்ததாக நினைவில் இல்லை. எல்லா இடையூறுகளையும் இடையில் இருக்கும் கண்ணாடியைப் போலவே பார்த்திருக்கிறேன். மறுபக்கம் தெரிந்துகொண்டே இருக்கும். எளிதில் முடிவுகளை எடுத்து விடுவேன். தெளிந்த அறிவோடு அணுகும் முறை எனது. பலமுறை என் நண்பர்கள் கூட என்னிடம் ஆலோசனை கேட்டுச் செல்வார்கள். ஆனால் இன்று என் மனதில் ஒரு குழப்பம். என் முடிவுகளை பிரேத பரிசோதனை செய்ய நேரிடுமோ என்ற அச்சம் உதிக்கும் போல் இருந்தது. ச்சி...சீ.. அதெல்லாம் இருக்காது. மறுபரிசீலனை, அவ்வளவுதான். அதற்குள் நான் ஏன் என் முடிவுகள் காலாவதியானதாக சிந்திக்க வேண்டும்? மறுபரிசீலனையா? அப்போது முடிவுகளின் முடிவுகள் மாறுமா? பதற்றத்தில் என் சுயத்தையே மெதுவாக இழந்து கொண்டியருப்பதாகத் தோன்றுகிறது.

என் மனம் அமைதியைத் தேடி கதறுகிறது. சட்டென்று ஒரு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுவிட்டது. என் ஞாபக அறைகளை வேகமாக திறந்து திறந்து மூடுகிறது. பேய்க்காற்றில் அடிபடும் ஜன்னல்களின் சத்தம் போல என் மனதில் ஒரே இரைச்சல். கதறும் மனதிற்கு அதைப்பற்றி கவலை இல்லை. பசியில் அழும் குழந்தைக்குப் பால் கொடுப்பதற்குள் அழுது தீர்த்து விடும். பொறுமை இருக்காது. அது போலவே என் மனதும். இந்த நொடி நடந்தாக வேண்டும். மனதின் கதறல் அதிகமாகி இரைச்சல் மூளையின் காதுக்கு எட்டியது. பல சமயங்களில் இந்த மூளை-மனது சண்டையைப் புரிந்து கொள்ளவே முடியாது. இடம் பொருள் ஏவல் தெரியாமல் சண்டை போட்டுக்கொளும் குழந்தைகளைப் போண்றது. சில வருடங்களுக்கு முன்பு வரை நான் மனதின் அடிமையாய் இருந்தேன். சமீமத்தில் என் மூளையின் கட்டளைகளுக்குக் கீழ்ப் படிய ஆரம்பித்திருக்கிறேன். ஆனால் இப்போதும் அவசர காலங்களில் தானியங்கி மனம் மட்டுமே. இதில் கவனிக்கப்பட வேண்டியது ஒன்று இருக்கிறது. ஏதாவது ஒன்றிற்கு அடிமையாய் இருப்பதே அது. சரியென்றும் தவறென்றும் சொல்லத் தெரியவில்லை. அடிமை சொன்னால் அது உண்மையாக இருக்கவும் வாய்ப்பில்லை.

என் மூளை அவசரமாக சிந்தித்து ஒரு அறையைத் திறந்து விட்டது. என் ஜன்னலில் வீசிய அதே குளிர் காற்று என் மனதிற்குள். என் நாசிகள் அனுமதிக்காத அதே குளிர்மை. அதுவும் சந்தன வாசத்தோடு. அது அவளை சந்தித்த முதல் நாளின் நினைவு. இது முதலில் வந்த 'அவள்' அல்ல. இது என் 'அவள்', என்னவள். என் தாயவளின் வார்த்தைகள் சுட்ட புண்களுக்கு மருந்தாய் அந்த சந்தனக்க்காற்று வீசும் போதே ஏனோ சட்டென தொடர்பு துண்டிக்கப்பட்டது. கதவு அடைக்கப்பட்டது. இதுதான் மூளையின் பிரச்சனை. வந்த வேலையைச் செய்துவிட்டு விலகாமல் அது தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தது.

பிடிக்கவில்லை. சரிதான். 'அவள்'தான் பிரச்சனை. அவள்தான் என் தாயவளுக்கு பிரச்சனை. அவளை விட்டுவிடச்சொல்லி அவள் கோருவது தான் அது. எதற்காக? .... எல்லாம் ஒரு சாவுக்காகத்தான். 'சா'வுக்கா? ஆமாம். அவள் வேறு 'சா'தி. அத்தோடு நில்லாமல் 'சா'தகம் (ஜாதகம்) வேறு சாதகமில்லை. அதனால் என் தாயவள் என்னவள் நினைவிற்கு சாவு மணி அடிக்கிறாள். அது சாக்காடு போலிருக்காதே. கொலை போலிருக்குமே. 'சா'வோடு, 'சா'வாக இருப்பதால், அதற்குச் சாவு ஒன்றே நன்று என்று என் தாய் நம்பியிருந்தாள் போலும். அவள் அதைச் சொன்னபோது, என் காதில் கொலை என்றே விழுந்தது; இப்போது எதைக் கொலை செய்வது என்ற சிந்தனையுடன் என்னுள் எண்ணிப்பார்க்கும் பொழுது மனதும் மூளையும் ஒன்றை ஒன்று கொலை செய்யத் தயாராவதைக் காண்கிறேன். எது வெல்லும் என்ற சிந்தனையில் கூட இரு பக்கம் இருப்பதைக் கண்டு நான் மெதுவாக இறந்து கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். என்னை நானே தகனம் செய்துவிட்டேன். நான் இப்போது எரிந்து கொண்டிருக்கிறேன்.

3 comments:

santhanakrishnan said...

மூளை-மனசு சண்டையிலிருந்து
தப்பித்த மனிதர் எவருமுண்டோ?
சுய தகனம் நீண்ட நாள் நினைவில்
இருக்கும்.
தொடருங்கள்.

ராமகிருஷ்ணன் ராஜகோபாலன் said...

நன்றி சந்தானகிருஷ்ணன். பின்னூட்டம் எழுதறது என்னுடைய ஆர்வத்தைத் தூண்டுது.

ரொம்ப நன்றி.

Matangi Mawley said...

the mental state you have brought out here- it s so difficult! but the placement of your words- have built on the scene so well- completely emphasizing the emotional churning deep down!

Brilliant!

PS: oru sila vishayangala english-la solvathey sulabamaa irukku! enna seiyya?