Pages

அயல்நாட்டு வாசம் - கவிதை (13)

எதுகையும் மோனையும்
என்னோட வெளையாடி
எத்தனையோ நாளாச்சு
எழுதி ரொம்ப நாளாச்சு

என்னத்த எழுத?
எப்படித்தான் எழுத?

காலையில எழுந்தோன்ன காப்பி
கலந்து கொடுத்த என் தாயி
விட்டுட்டு வந்தேனே
வெவரமில்லா பயபுள்ள

அயல்நாட்டுக்கு வந்தேனே
அத்தனையும் தொலச்சேனே
எப்படித்தான் பாத்தாலும்
என் கணக்கு நட்டம்தான்

அப்பனாத்தா விட்டுட்டு
சேக்க வந்தேன்
அமெரிக்க டாலரு
என் மனசெல்லாம் சகதி சேறு

அக்கா புள்ள பொறந்து
ஈறாறு மாசமாச்சு
ஒரேயொரு மொற கூட
உச்சி மொகர குடுத்து வெக்கல எனக்கு

எண்ண (எண்ணெய்) இருந்தா போதும்
எவனோட வீட்டுக்குள்ளயும்
எமானா போறான் இந்த நாட்டுக்காரன்
எமனோட வீட்டுக்குள்ள நா இருக்கேன்

காதல் தோல்வியில
கவிதயெல்லாம் எழுதியிருக்கேன்
அதவிட சோகமடா
அயல்நாட்டு வாசம்

என்னிக்குத்தான் திரும்புவேனோ?
பண எண்ணிக்கைக்கு அப்புறம்தான்
அந்த எண்ணம் கூட

பணம் சேர்க்கும் பாதயில
மனசு சொல்றத மதிக்க முடியல
அட, ஆனாலும் எதயும் மறக்க முடியல

எவ்வளவோ பணம் சேத்த பின்னயுங்கூட
இவ்வளவும் பத்தாது
இன்னும் கொஞ்ச நாள்
இருந்தா எதுவும் தப்பாது

இப்படியே யோசிச்சு
இதெல்லாம் சரியில்ல
இப்போதே போகலாம்னு

நான் நெனச்சாலும்
கடங்காரன் கூட என் சட்டய புடிச்சதில்ல
என்னோட சட்டைப்பை என் சட்டைய புடிக்கும்

வசதியா வாழும் போது
வழக்கு என்னடான்னு கேக்கும்
மதி போனா பரவாயில்ல
தாய் மடி போனாலும் பரவாயில்ல

சமாதானமா சொல்லும்
எம்மனச டாலரு வெல பேசும்

நான் நானா வாழ்ந்து
ரொம்ப நாளாச்சோ?
நகமும் சதையும் கூட
பணமா போச்சோ?

இப்போதைக்கு அலுவலகத்துக்கு நேரமாச்சு. இன்னும் நெறய கத இருக்கு. வந்து சொல்றேன் என் வழக்கையெல்லாம்.

No comments: