இந்து மதமும், இன்றியமையாத சில கேள்விகளும்
இந்து மதம் ஒரு கடல் என்று நாம் பார்ப்பவர்களிடம் சொன்னால், கடலில் கரையேறுவது கடினம் என்று கேலிப்பேச்சு தான் மிஞ்சும். இவர்களுக்கு விளக்கம் சொல்லி அலுத்து போயாயிற்று. இதில் நிஜமான பலவீனம் என்னவென்றால், இந்து மதத்தை பின்பற்றுபவர்களுக்கு சரியான ஞானம் இல்லை. இதை தவறான நோக்கோடு யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம். மதத்தின் மீது ஒரு நம்பிக்கையும் நல்ல எண்ணங்களும் இருக்கிறதே தவிர அதை சரியான முறையில் எடுத்துரைக்கவோ, விளக்கவோ அவதிப்படுகிறோம். ஒரு கிறித்தவ நண்பரைக் கேட்டால் - எங்கள் கடவுள் யேசுபிரான்; என் மதம் என்ன போதிக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால் விவிலியம் இருக்கிறது படியுங்கள் என்பார். இஸ்லாமிய சகோதரரைக் கேட்டால் - என் இறைவன் அல்லாஹ்; இஸ்லாமியத்தை தெரிந்து கொள்ள திருக்குர்ரான் படியுங்கள் என்கிறார். இதே கேள்வியை என்னிடம் ஒருவர் கேட்டால்? நான் எங்கள் மதத்தில் நிறைய கடவுளர்கள் இருக்கின்றனர். இவரில் எனக்கு பிடித்தவர் கணபதி என்பேன். ஓஹோ அப்படியா? என்று குழப்பத்துடன் அடுத்த கேள்வி...உன் மதத்தை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால்? அதற்கும் அதே குழப்பத்துடன் ஒரு பதில்...என் மதத்தில் கீதை இருக்கிறது...வேதங்கள் இருக்கின்றன...உபநிஷதங்கள் இருக்கின்றன...இதற்கும் மேலாக பெரியோர் பலர் அருளிச் சென்ற இறைமறைகள் நிறைய இருக்கின்றன என்றால்....கேட்டவர் அடுத்த கேள்வி கேட்காமலேயெ சென்று விடுகிறார். அது அவருடைய குற்றம் அல்ல. என்னுடைய குற்றமும் இல்லை. பின் யாருடையது? இதற்கு யாரும் பொருப்பேற்றுக் கொள்ள இயலாது என்றாலும் இதை சீர் செய்ய ஒரு சிறிய முயற்சியை ஒவ்வொருவரும் மேற்கொள்ளலாம்.
அடுத்த கேள்வி - இப்படி மதத்தை எளிமையாக விளக்கமளிக்க இயலாத நீங்கள், மதத்தில் இன்னும் என்ன இருக்கிறது என்று முழுமையாக அறியாத நீங்கள் எவ்வாறு அதை பின் பற்றுகிறீர்கள்? அது கண்மூடித்தனமானதல்லவா?
மேலும், இன்றைய சமூக அவலத்தில் முக்கியமானது சாதி என்னும் சாக்கடை. அதற்கு வித்திட்டு வழிவகுத்தது இந்து மதம். கீதையிலேயே சொல்லப்பட்டிருக்கிறது என்று கொக்கரிக்கிறார்கள் பகுத்தறிவுச் சான்றோர்.
இவ்வாறாக பல முனைத் தாக்குதலில் தாக்குப் பிடிக்க இயலாமல் பலர் (என்னையும் சேர்த்து) - அய்யா! இதுதான் நான் நம்புவது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பின்பற்றுங்கள் இல்லையேல்ஆளை விடுங்கள் என்று சொல்லிவிட்டு தப்பித்து விடுகிறோம்.
இந்த நிலையை சற்றே ஆராய்ந்தால் சில வழிகள் தெரிகின்றன:
நமது மதத்தை பற்றி முதலில் நாம் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். என் மதம் கடல் போண்றது என்று பெருமை சாற்றிக் கொள்வதை விட அது உபயோகமானது.
இன்றைய வாழ்க்கைக்கு என்ன தேவை? இன்றைய சூழ்நிலையில் எவ்வாறாக நம் மதத்தை புரிந்து கொள்வது?
இந்த கேள்விகளை பல நாட்களாக மனதினுள்ளே உரக்கக் கேட்டுக்கொண்டிருந்தேன். இதே கேள்வியை பலரும் பலவாறாக பல நாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிண்றனர் என்பதை அறிவேன். பயன்? பயனாக, என்னுடைய சகோதரர் வெங்கட் மற்றும் என் நன்பர்கள் (சங்கர், சுதீப், சந்துரு, ப்ரீதி, வித்யா மற்றும் ஷாலினி) ஒரு சிறிய முயற்சியை மேற்கொண்டுள்ளோம். கீதையைப் புரிந்து கொள்வது. தினம் ஒரு 5 பாடல்களை படித்து தெளிந்து கொள்வது மற்றும் இன்றைய வாழ்வுக்கு கீதை எவ்வகையில் பொருத்தமானது..அல்லது எவ்வகையில் கீதையைப் சமகால வாழ்வுக்கு சரியானதாக்கிக் கொள்ளலாம் என்று முயற்சிக்கிறோம்.
இது ஒரு சிறிய முயற்சி. ஆனாலும் இது பயன் தரும் என்று நம்பி எங்கள் பயணத்தை தொடங்கியுள்ளோம்.
(இது சம்பந்தமான பதிவுகளில் வரும் கருத்துக்கள் என்னுடையது மட்டுமல்ல. என் நண்பர் வட்டத்துடன் வாதம் செய்கையின் பயனாய் விளைந்தவை. அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்)
இந்த வலைப்பதிவில் இதைப் பற்றி மேலும் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற எண்ணத்துடன் இதை நிறைவு செய்கிறேன்.
No comments:
Post a Comment