Pages

பழைய நினைவுகளும் புதிய பரிமாணங்களும்

நினைவுகள் என்றுமே இறப்பது இல்லை; மனதை விட்டு அகல்வதில்லை. இன்னும் சொல்லப்போனால், உறங்குவது கூட இல்லை. பதினேழு வருடங்களுக்கு முன், காவிரிக் கரையில் நடை பழகியதும், கண்மூடி விளையாடியதும், கரும்பு கடித்ததும், இல்லாத வகுப்பில் பொல்லாத ஆசிரியனாகி என் சகோதரியை தண்டித்ததும், புத்தகங்களூடே மயில் இறகு வளர்த்ததும் கூட இன்னும் என் நினைவில் நின்று ஆட்சி செலுத்துகின்றன. அதுபோலவே நம்முடைய குணாதிசையங்களும், எண்ணங்களும் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிண்றன. அவை என்னுடனேயே வளர்கின்றன; இவைகள்தாம் என்னை உருவகப்படுத்துகிண்றன. ஒரு சாதாரண பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். அன்றைய காலகட்டத்தில் என பெற்றோர்களும் அவர்களை பெற்றவர்களும் என்ன எண்ணங்கள் கொண்டிருந்தார்களோ, அவ்வாறே நானும் உருவாக்கப்பட்டேன். நியாயமாக என்னுடைய எண்ணங்கள் காலத்திற்கேற்ப மாற்றங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும். அவ்வாறாகப் பார்த்தால் இன்னும் நான் பதினைந்து வருடங்கள் பின் தங்கி இருக்கிறேன் என்று எண்ணுகிறேன். இது என்னுடைய கருத்தே ஆயினும், இதில் சிறிதளவேனும் யாவருக்கும் பொதுவாகும் என்றே நம்புகிறேன்.

நினைவுகளில் இருந்து சமகால வாழ்க்கைக்கான எண்ணங்களையும், பழக்கங்களையும் எடுத்து உபயோகிப்பது எந்த வகையில் சரி? என்னுடைய பள்ளிப்பருவத்தில் தட்டச்சு பயன்படுத்திய நான், இன்று கணிணியை ஒரு துணைவியாக்கிக் கொண்டுள்ளேன். நான் பயன்படுத்தும் யாவையும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப மாற்றிக்கொண்டுள்ளேன்.

"மாறாதது என் மனம் மட்டும்"

இது எந்த வகையில் நியாயம்?

நான் இன்னும் பழைய பழக்கங்களையும் பழைய எண்ணங்களையும் சுமந்து கொண்டு அதே பார்வையோடு வாழும் இன்றைய இளைஞன். என்னுடைய சுயபரிசோதனை மிக அவசியமான ஒன்றாகப் பட்டது. முடிவில் ஒரு தெளிவில்லாத நிலைக்கு தள்ளப்பட்டேன். மீண்டும் மீண்டும் சிந்திக்கிறேன், ஆயினும் ஓர் தெளிவில்லாமல்.

"வாழ்வில் மாற்றம் மட்டுமே மாறாத ஒன்று" என்பது என் நினைவில் ஒலிக்கிறது.

நானும் தயாராகிறேன்; இன்றைய போராட்டத்திற்கு. பழைய எண்ணங்களோடுதான்...புதிய பரிமாணங்கள் பார்க்க முயற்சிக்கிறேன். என்னைப் பொறுத்தவரை முயற்சிகள் தவறில்லை. மீண்டும் மீண்டும் செய்தால் கூட.

நானும் நிச்சயமாக மாறுவேன் என்ற நம்பிக்கையோடு இதை நிறைவு செய்கிறேன்.

No comments: