Pages

வெண்பா முயற்சி - கவிதை (6)

வெகு நாட்களாக இருந்த வெண்பா முயற்சி

வெகு நாட்களாக எனக்கு வெண்பா எழுத வேண்டும் என்று ஆசை. எவ்வளவுதான் புதுக்கவிதை போல எழுதினாலும் இலக்கணம் கொண்டு எழுதும் போதுதான் ஒருவனுடைய கவியார்வம் முழுமை அடையும் என்பது என் தாழ்மையான கருத்து (மாற்றுக் கருத்து இருப்பது நியாயமே). என்னைப் பொறுத்த வரை நினைத்ததை எழுத்தில் வடிப்பது சுலபம். ஆனால் சில கட்டுப்படுகளுக்கும், வரைமுறைகளுக்கும் உட்பட்டு ஒரு கருத்தை எழுதுவது எல்லாராலும் இயலாது. மேலும் இதில் சுவாரஸ்யமான மற்றும் சவாலான விஷயம் என்னவென்றால், இலக்கணம், அழகு, கருத்து இவை மூன்றும் சேர்ந்து இருக்கவேண்டும்.

சரி, இப்போது என்னுடைய முதற் முயற்சியைப் பாருங்கள். இது சரியா என்பது தெரியாது. சரியாக இருப்பது போன்று தோன்றினாலும் எனக்கு நம்பிக்கை இல்லை. நன்கு அறிந்தவர்கள் இருந்தால் என்னைத் தெளிவுபடுத்தவும்.

இனிமேலும் காத்திருக்க என்னா லியலாது
கனிமொழி பேசும் காரிகையே - தனியே
விழியோரம் ஓரிடம் கொடு ஒருநாள்
மொழிவேனென் காத லுனக்கு.

இது போன்று மொத்தம் ஆறு பாடல்கள் எழுதினேன். ஆனால் அந்த காகிதம் தொலைந்தாயிற்று. கிடைத்தால் பதிவு செய்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.

4 comments:

குழலி / Kuzhali said...

intresting blog...

ராமகிருஷ்ணன் ராஜகோபாலன் said...

Thanks :)

இலவசக்கொத்தனார் said...

இனி/மே/லும் காத்/திருக்/க என்/னா லிய/லா/து
கனி/மொழி பே/சும் கா/ரிகை/யே - தனி/யே
விழி/யோ/ரம் ஓ/ரிடம் கொ/டு ஒரு/நாள்
மொழி/வே/னென் கா/த லுனக்/கு.

முதல் வெண்பாவை எடுத்துக் கொண்டு அசை பிரித்து, தளை தட்டல்கள் மட்டும் பார்க்கலாம்.

முதலாம் அடி கடைசி காய் என்ற சீரில் முடிவதால் அடுத்து வரும் சீரானது நேரில்தான் தொடங்க வேண்டும். அது கனி என நிரையில் தொடங்குவது தவறு.

இரண்டாம் அடியில் பேசும் என்பது தேமா. அதனைத் தொடர்ந்து நிரை வரவேண்டும் காரிகையே என நேர் வருவது தவறு.

அதே காரிகையே என்பது காயில் முடிவதால் அதனைத் தொடர்ந்து தனி என்ற நிரை வருதல் கூடாது.

மூன்றாவது அடியில் ஓரிடம் என்பது கூவிளம். விளம் முன் நேர் வருதல் அவசியம். அங்கு கொடு என்பது நிரையாக வந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் வெண்பாவில் ஓரசைச்சீர்கள் வருதல் கூடாது. ஆகவே கொடு என்ற ஓரசைச்சீரை மாற்றுதல் அவசியம். அதனை மாற்றும் பொழுது அதனைத் தொடர்ந்து வரும் சீரும் தளை தட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

முதலில் தளை தட்டாமல் எழுதப் பழகிக் கொண்டால் அதன் பின் எதுகை, மோனை எனத் தொடர்ந்து கற்றுக் கொள்ளலாம். வெண்பா இலக்கணங்கள் பற்றிய பல குறிப்புகள் நீங்கள் வந்த 'இயன்ற வரையில் இனிய தமிழில்' தளத்தில் உள்ளன.

மனந்தளராமல் முயற்சி செய்தல் அவசியம். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

ராமகிருஷ்ணன் ராஜகோபாலன் said...

தங்களுடைய அறிவுரைக்கு நன்றி. தொடர்ந்து முயற்சி செய்கிறேன்.