நான் ஒரு சிசு. இலங்கைக் குடி சிசு (நாளைய போராளி என நினைவில் நிற்க).
என் சுய வாக்குமூலம் இது.
தண்ணீர் குடத்தில் மிதந்து கொண்டிருக்கையில்
மூழ்காத சில எண்ணங்கள்.
இன்னும் சில நாட்களில் அவதரிக்கப் போகிறேன்.
உலகம் பார்க்க உயர்ந்த ஆசை ஏதுமில்லை.
நான் இருக்கப்போகும் உலகமோ கலகம் கொண்டதாயிற்றே.
தவறு செய்துவிட்டாள் என் அன்னை.
கருவாகத் தரித்து விட்டாள் என்னை.
இதுவரை என் காதுகளைத் துளைத்தவை எல்லாம்
துப்பாக்கிச் சத்தங்கள் தாம்.
அலறல்கள் என்ன இவர்களுக்கு ஆனந்தச் சங்கீதமோ?
அப்பப்பா!
ஒரு நாளில் எத்தனை முறை கொதிக்கும் என் தாயவளின் ரத்தம்?
புதை வெடிகள் எங்கு தன்னை புதைத்திடுமோ என்று...
நடக்கையில் எல்லாம் நான்மடங்கு துடிக்கும் அவள் இதையம்.
சுதந்திரம் என்று இவர்கள் கட்டியது எல்லாம்
சுடுகாடுகள்தாம்.
மனிதராயிருக்க மறந்து போயிற்றாம் இவர்க்கு.
பழைய கதை பேசி, பழி தீர்க்க எண்ணி, பிணவறை
பெருக்குவார் இவர்.
பிணம் புதைக்க தனியொரு தேசம் கேட்பார் நாளை.
பூக்கள் மலராதோ இந்த தேசத்தில்? புன்னகை தவழாதோ?
இன்னும் எங்களுக்கு மட்டும் தான் ஆயுதப் பயிற்சி இல்லை.
நல்லவேளை அது இயலாததாயிற்றே!
இயலுமாயின், என் தாயின் கருவறை ஆயுதக் கிடங்காகியிருக்கும்.
என் நாளையை நினைத்தால் சுமையாயிருக்கிறதெனக்கு.
பாவம் என் தாய், அவள் அதையும் சேர்த்துத் தானே சுமக்கிறாள்.
நான் உலகம் அடைகையில், கருணை கற்றுக்கொள்ளேன்.
கொலை செய்வதென் பிறப்புரிமை ஆகிவிடும்!
கொல்லப்படுவதென்பது வாழ்க்கை நியதியாகிவிடும்.
என்ன விந்தையடா! இவ்வுலகில் எதிர்காலம் அறிந்தவர் சொற்பமாயிற்றே.
அவ்வகையில் மட்டும் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்.
மேற்கூறியவையால் நான் தற்கொலைக்குத் தயாராகிறேன்.
ஆம் கருவிலேயெ!