சிதறியவை...
உன்னை உள் வைத்து புறமெங்கு போவேன்?
மனமெங்கும் மழைக்காளான்
நிற்க. மழை நிற்க.
அகம்-புறம், அறிவு-மனம்,
மழையில் நனைந்த குளம் போல.
மழை வர பூமி, மதில் மேல் பூனை
மழை வரட்டும்.
மழை ஒரு வழியாக, மதிலிரு வழியாக.
ஒன்றோடொன்றொவ்வாது ஒருபொருட் பன்மொழி,
ஒவ்வும் பொருளிலா இரு மொழி இரட்டைக்கிளவி.
ஒவ்வும் பொருளிலா இரு மொழியும்,
ஒவ்வாதொருபொருட் பன்மொழியும்,
ஒரு மொழியே.
நீ வந்ததில்
உலரும் நீலப் புடவை கொடியில்
நீ கண்ணாடியில் ஒட்டிய பொட்டு, முகம் பார்க்கையில் என் நெற்றியில்
தேர்ந்தெடுக்கப்பட்ட வாசனை திரவியம் என் நாசியில்
என் செருப்புக்குப் பக்கத்தில் உன் காலணி
அடுக்கி வைக்கப்பட்ட அலமாரி
பளிச்சென சிரிக்கும் கடவுளர்
மேசையில் கலைந்து கிடக்கும் என் காகிதங்களுக்கிடையில் சில அழகுக் குறிப்புகள்
வெட்கத்தோடு மறைந்தும் மறையாமலும் இருக்கும் உன் உள்ளாடைகள்
பாதியான என் மெத்தை; ஒளி நிறைந்த என் படுக்கையறை
என் வீட்டிற்குப் பெண்மை வந்தது
என் வீடு அழகானது
நீ வந்ததில்.
ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?
அருமையான கட்டுரை. எழுத்தாளர் ஜெமோவின் வலைத்தளத்தில் படித்தது.
//
தஞ்சாவூர் பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த வேளையில் நான் படித்த ஒரு கட்டுரை http://koodal.com/article/tamil/ilakkiyam.asp?id=864&title=astonishing-era-and-few-questions-on-emperor-raja-raja-chozhan பற்றி உண்மையை தெரிந்து கொள்ள ஆவல் கொண்டேன்… இது போன்ற கட்டுரைகள் அனைத்தும் முற்றிலும் உண்மையாக இருக்க முடியாது / பொய்யாகவும் இருக்க முடியாது என்பதால் , இதை பற்றி உண்மையை தங்கள் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும் என நெனைக்கிறேன்.
முழுக்கட்டுரையில் இருந்து எனக்கு நெருடலை ஏற்ப்படுத்தய அந்த வரிகளை மற்றும் கீழே இணைத்துள்ளேன்… தங்கள் கருத்துக்காக காத்திருக்கிறேன்…
சரி… இப்படி சோழர் காலத்து அரண்மனைகள்… வழிபாட்டுத்தலங்கள்… சிற்பங்கள்… ஓவியங்கள்… அவர்களது வீர தீர பராக்கிரமங்கள் எல்லாம் அற்புதம்தான். ஆனால் மக்கள் எப்படி இருந்தார்கள் அவர்கள் காலத்தில்? அதுதானே முக்கியம்?
//
முழுமையான கட்டுரைகளை படிக்க:
ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா? - பாகம்1
ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா? - பாகம் 2
நன்றி: ஜெயமோகன்.இன்
நான்
மழைக்கு இடமில்லை
மழைபோல்
விழுந்தேன்
விழுந்தவன்
எழுந்தேன்
எல்லாம்
என்னுடையதாயிற்று
உறவு
பகை
ஒன்றே மற்றொன்றாக
மாறி மாறி
இறையுண்டு என்றேன்
பின்
இறையில்லை என்றேன்
கரை தேடுவதாய்
ஒரு கதை
பின் கதை
தேடிக் கரையில்
அதுவும் நானே.
புரியாதது சில
புரிந்தது போலும் பல.
இவையில் நானெங்கே?
தேடுவதும் நானே.
'சா'தக(ன)ம் - சிறுகதை முயற்சி
தொலைபேசி மீண்டும் அதே பாடலை ஒலித்தது. அதற்கு சலிப்பேதும் இல்லை. மீண்டும் என் அம்மாதான் அழைத்தாள். இம்முறை அழுகை இல்லை. ஓய்ந்த மழைக்குப் பிறகு இலைகளிலிருந்து ஒழுகும் துளிகளின் சத்தம் போல விசும்பல் மட்டும் தெரிந்தது. தொலைபேசியாய் இருந்தாலும் அடுத்த முனையில் பேசுபவர் என்ன செய்கிறார் என்று ஊகிக்கும் திறம் அநேகமாய் அடுத்த தலைமுறையின் மரபணுவில் எழுதப்பட்டுவிடும். தெரிந்தும் தெரியாதவன் போலிருந்தேன் நான். என்னிடம் பதிலேதும் இல்லை. பத்து நிமிட இடைவெளியில் என் வாழ்வைத் தீர்மானிக்கும் விளையாட்டை விளையாட நான் தயாரில்லை. ஆனால் என் தாயார் தயார். அவளுக்கென்ன, அது என் வாழ்க்கை.
அவளுக்கு ஒரே விடைதான் தேவை. விநோதமான பரீட்சை அது. வினாவோடு விடையும் சேர்ந்தே அளிக்கப்படும். அதே விடையை மீண்டுமொருமுறை ஒப்பித்தால் போதும். மிக எளிது; ஆனால் மிகக் கடிது. நீங்களாக ஒரு விடையைத் தெரிவு செய்ய உங்களுக்கு உரிமை இல்லை. பிறப்புரிமை பிறப்பளித்தவளிடம் மட்டும் செல்லாது. இந்திய சட்டத்தில் இதற்கான குறிப்பேதும் இல்லை; ஆனால் அது உண்மை. என்னால் அவள் எதிர்பார்க்கும் விடையை சொல்ல முடியாது என்று அறிந்திருந்தேன். ஆனால் அதை அவளிடம் சொல்ல வார்த்தைகள் வரவில்லை. இப்படி என் அவயங்கள் அவ்வப்போது செயல்படாமல் போவதற்கு மிகுந்த பயிற்சி அடைந்திருந்தது. என் மூளை உட்பட. நான் செலுத்திய அம்பு இன்று என்னிடமே திரும்புகிறது. சிறுவயதில் நான் பயன்படுத்திய அதே ஆயுதம். அழுது சாதித்தவன் நான். இன்று அவள் சொல்வதுதான் சரி என்று சாதித்து அழுகிறாள். பாலனாக இருந்தபோது பால பாடம் கற்றுக் கொடுத்துவிட்டேன்.
அவளை நான் சமாதானம் செய்ய முற்படவில்லை. அது முடியாது என்று நன்கு அறிவேன். அமைதியாகவே இருந்தேன். அந்த அமைதி என் சார்பில் வார்த்தைகளை இட்டு நிரப்பும் என்று காத்திருந்தேன். மீண்டும் அவளே பேசினாள். நாளை மறுபடியும் அழைப்பதாகக் கூறி தொலைபேசியைத் துண்டித்தாள். என் சிந்தனை துண்டிக்கப்படாமல் தொடர்ந்தது.
இதுவரை இப்படிப்பட்ட குழப்பத்தில் இருந்ததாக நினைவில் இல்லை. எல்லா இடையூறுகளையும் இடையில் இருக்கும் கண்ணாடியைப் போலவே பார்த்திருக்கிறேன். மறுபக்கம் தெரிந்துகொண்டே இருக்கும். எளிதில் முடிவுகளை எடுத்து விடுவேன். தெளிந்த அறிவோடு அணுகும் முறை எனது. பலமுறை என் நண்பர்கள் கூட என்னிடம் ஆலோசனை கேட்டுச் செல்வார்கள். ஆனால் இன்று என் மனதில் ஒரு குழப்பம். என் முடிவுகளை பிரேத பரிசோதனை செய்ய நேரிடுமோ என்ற அச்சம் உதிக்கும் போல் இருந்தது. ச்சி...சீ.. அதெல்லாம் இருக்காது. மறுபரிசீலனை, அவ்வளவுதான். அதற்குள் நான் ஏன் என் முடிவுகள் காலாவதியானதாக சிந்திக்க வேண்டும்? மறுபரிசீலனையா? அப்போது முடிவுகளின் முடிவுகள் மாறுமா? பதற்றத்தில் என் சுயத்தையே மெதுவாக இழந்து கொண்டியருப்பதாகத் தோன்றுகிறது.
என் மனம் அமைதியைத் தேடி கதறுகிறது. சட்டென்று ஒரு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுவிட்டது. என் ஞாபக அறைகளை வேகமாக திறந்து திறந்து மூடுகிறது. பேய்க்காற்றில் அடிபடும் ஜன்னல்களின் சத்தம் போல என் மனதில் ஒரே இரைச்சல். கதறும் மனதிற்கு அதைப்பற்றி கவலை இல்லை. பசியில் அழும் குழந்தைக்குப் பால் கொடுப்பதற்குள் அழுது தீர்த்து விடும். பொறுமை இருக்காது. அது போலவே என் மனதும். இந்த நொடி நடந்தாக வேண்டும். மனதின் கதறல் அதிகமாகி இரைச்சல் மூளையின் காதுக்கு எட்டியது. பல சமயங்களில் இந்த மூளை-மனது சண்டையைப் புரிந்து கொள்ளவே முடியாது. இடம் பொருள் ஏவல் தெரியாமல் சண்டை போட்டுக்கொளும் குழந்தைகளைப் போண்றது. சில வருடங்களுக்கு முன்பு வரை நான் மனதின் அடிமையாய் இருந்தேன். சமீமத்தில் என் மூளையின் கட்டளைகளுக்குக் கீழ்ப் படிய ஆரம்பித்திருக்கிறேன். ஆனால் இப்போதும் அவசர காலங்களில் தானியங்கி மனம் மட்டுமே. இதில் கவனிக்கப்பட வேண்டியது ஒன்று இருக்கிறது. ஏதாவது ஒன்றிற்கு அடிமையாய் இருப்பதே அது. சரியென்றும் தவறென்றும் சொல்லத் தெரியவில்லை. அடிமை சொன்னால் அது உண்மையாக இருக்கவும் வாய்ப்பில்லை.
என் மூளை அவசரமாக சிந்தித்து ஒரு அறையைத் திறந்து விட்டது. என் ஜன்னலில் வீசிய அதே குளிர் காற்று என் மனதிற்குள். என் நாசிகள் அனுமதிக்காத அதே குளிர்மை. அதுவும் சந்தன வாசத்தோடு. அது அவளை சந்தித்த முதல் நாளின் நினைவு. இது முதலில் வந்த 'அவள்' அல்ல. இது என் 'அவள்', என்னவள். என் தாயவளின் வார்த்தைகள் சுட்ட புண்களுக்கு மருந்தாய் அந்த சந்தனக்க்காற்று வீசும் போதே ஏனோ சட்டென தொடர்பு துண்டிக்கப்பட்டது. கதவு அடைக்கப்பட்டது. இதுதான் மூளையின் பிரச்சனை. வந்த வேலையைச் செய்துவிட்டு விலகாமல் அது தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தது.
பிடிக்கவில்லை. சரிதான். 'அவள்'தான் பிரச்சனை. அவள்தான் என் தாயவளுக்கு பிரச்சனை. அவளை விட்டுவிடச்சொல்லி அவள் கோருவது தான் அது. எதற்காக? .... எல்லாம் ஒரு சாவுக்காகத்தான். 'சா'வுக்கா? ஆமாம். அவள் வேறு 'சா'தி. அத்தோடு நில்லாமல் 'சா'தகம் (ஜாதகம்) வேறு சாதகமில்லை. அதனால் என் தாயவள் என்னவள் நினைவிற்கு சாவு மணி அடிக்கிறாள். அது சாக்காடு போலிருக்காதே. கொலை போலிருக்குமே. 'சா'வோடு, 'சா'வாக இருப்பதால், அதற்குச் சாவு ஒன்றே நன்று என்று என் தாய் நம்பியிருந்தாள் போலும். அவள் அதைச் சொன்னபோது, என் காதில் கொலை என்றே விழுந்தது; இப்போது எதைக் கொலை செய்வது என்ற சிந்தனையுடன் என்னுள் எண்ணிப்பார்க்கும் பொழுது மனதும் மூளையும் ஒன்றை ஒன்று கொலை செய்யத் தயாராவதைக் காண்கிறேன். எது வெல்லும் என்ற சிந்தனையில் கூட இரு பக்கம் இருப்பதைக் கண்டு நான் மெதுவாக இறந்து கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். என்னை நானே தகனம் செய்துவிட்டேன். நான் இப்போது எரிந்து கொண்டிருக்கிறேன்.